தேசியக் கல்விக் கழகத்தில் களைகட்டிய தீபாவளிக் கொண்டாட்டம்

நல்லிணக்கத் தீபாவளிக் கொண்டாட்டம்

தேசியக் கல்விக் கழகத்தில் களைகட்டிய தீபாவளிக் கொண்டாட்டம்

படம்: ஆயிஷா ரோஸ்

26 Oct 2026 - 6:00 am

2 mins read

இந்தியக் கலாசாரம், தமிழ் மரபு, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, தேசியக் கல்விக் கழகத்தில் மட்டுமன்றி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) உள்ள அனைவருக்கும் தீபத்திருநாளின் மகிழ்ச்சியையும் பண்பாட்டு உணர்வையும் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் ‘தீபாவளி கொண்டாட்டம் 2026’க்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து, பறை இசை, கோலாட்டம், குத்து ஆட்டம், நடனப் படைப்புகள், பாடல்கள், தீபாவளி சார்ந்த கேள்விகளுக்குப் பதில் கூறும் மின்னிலக்க விளையாட்டு போன்ற 9 அங்கங்கள் இடம்பெற்றன. 

தீபங்கள் ஏந்தி நடனம் ஆடிய நடனமணிகள்.
தீபங்கள் ஏந்தி நடனம் ஆடிய நடனமணிகள். - படம்: ஆயிஷா ரோஸ்

‘ஒளியில் ஒன்றிணைந்து உற்சாகத்தோடு கொண்டாடுவது’ என்ற கருப்பொருள் கொண்ட இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆனது என்று கூறினார் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பவுல்ராஜ் அனிட்டா, 37.

“நாம் மற்றவர்களின் பண்பாட்டைப் புரிந்துகொள்ளும்போதுதான் மரியாதையும் நட்பும் அதிகரிக்கும். நாம் வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரே சமூகமாக ஒன்றிணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும் என்பதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்,” என்றும் சொன்னார் பட்டத்திற்குப் பிந்திய பட்டயக் கல்வி மாணவ ஆசிரியரான அனிட்டா.

தீபாவளி போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மரபு, கலாசாரம் போன்றவற்றைப் போற்றி மக்களிடம் கொண்டுசேர்க்கும் ஒரு தளமாகும் என்றார் நிகழ்ச்சியின் நெறியாளர் சினேகா ஆனந்தன், 24.

“இந்தத் தீபாவளி நிகழ்ச்சியில் முக்கிய நெறியாளராக இருந்தேன். தமிழ் பேசாத பார்வையாளர்களுக்குத் தமிழ் சார்ந்த சில தகவல்கள் புரியாதபோது, நான் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினேன். அதனைப் புரிந்து கொண்டு உற்சாகமாக நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றனர்,” என்றார் பட்டயக்கல்வியில் தமிழ் மொழி பயிலும் சினேகா ஆனந்தன்.

கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் பட்டத்திற்குப் பிந்திய பட்டயக் கல்வி மாணவ ஆசிரியர் மஸ்னா ரஷீதா அப்துல் கபூரும் ஒருவர்.

(இடமிருந்து) மஸ்னா ரஷீதா அப்துல் கபூர், பவுல்ராஜ் அனிட்டா, சினேகா ஆனந்தன்.
(இடமிருந்து) மஸ்னா ரஷீதா அப்துல் கபூர், பவுல்ராஜ் அனிட்டா, சினேகா ஆனந்தன். - படம்: ஆயிஷா ரோஸ்

“இந்த ஆண்டுத் தீபாவளி நிகழ்ச்சி புதுமையாக இருந்தது. பறை இசை அங்கத்தில் பெண்கள் பறை வாசிப்பதை அருகில் இருந்து பார்க்கும் பொழுது பெருமையாக இருந்தது. தமிழ் புரியாத பல இன நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்,” என்று கூறினார் திருவாட்டி மஸ்னா ரஷீதா, 39.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல, மற்ற இனத்தவருடன் சேர்ந்து ஒன்றாகக் கொண்டாடும்போது, அனைவரும் ஒன்று என்ற கருத்து வெளிப்படுகிறது. தமிழ்க் கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது முக்கியம். இது போன்ற நிகழ்ச்சிகள் அதற்கு வழிவகுக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

தேசியக் கல்விக் கழகப் பேராசிரியர்களும் மாணவ ஆசிரியர்களும்.
தேசியக் கல்விக் கழகப் பேராசிரியர்களும் மாணவ ஆசிரியர்களும். - படம்: ஆயிஷா ரோஸ்

இந்த நிகழ்ச்சி புதன்கிழமை (அக்டோபர் 21)ஆம் தேதி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) தேசியக் கல்விக் கழகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தேசியக் கல்விக் கழகத்தின் கல்விக் கணினியியல், தகவல் சேவைகள் பிரிவின் இயக்குநரும் (ACIS), தலைமைத் தகவல் அதிகாரியுமான கிறிஸ்டோஃபர் ஸ்டூவர்ட் ஓ பிரையன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்