பாரம்பரியத்தைப் போற்றும் பெருநடைப் பயணம்

பாரம்பரியத்தைப் போற்றும் பெருநடைப் பயணம்

2 mins read
b5ae13af-ca94-41a8-b110-9ed1e233f8f6
85வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகப் பாரம்பரிய மரபுடைமைப் பயணத்தை மேற்கொண்ட சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள். - படம்: சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
Google News Preferred Icon

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் இவ்வாண்டு அதன் 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகப் பாரம்பரிய மரபுடைமைப் பயணத்திற்குச் சங்கம் ஏற்பாடு செய்தது.

இந்நடைப் பயணம் ஜூலை 26ஆம் தேதி நடைபெற்றது. கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைந்துள்ள ஜாலான் கிளாங் திமோர், ரெட்ஹில் ஃபோரம் இல்லத்திலிருந்து நடைப்பயணம் ஆரம்பித்து தஞ்சோங் பகார் வட்டாரத்தில் உள்ள கடையநல்லூர் ஸ்திரீட்டில் முடிவுற்றது.

8,500 அடிகள் கொண்ட மரபுடைமைப் பயணம் நாட்டிற்கும் சமூகத்திற்கும் தமிழ் மொழிக்கும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் கடந்த 85 ஆண்டுகளாக ஆற்றிய பணியை நினைவுகூர்வதைக் குறிக்கும் வகையில் அமைந்தது.

புக்கிட் மேரா, ஹெண்டர்சன் ரோடு, தெலுக் பிளாங்கா, லோவர் டெல்டா, கம்போங் பாரு, கன்டோன்மெண்ட் ரோடு, தஞ்சோங் பகார் ரோடு வழியாக பங்கேற்பாளர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு கடையநல்லூர் ஸ்திரீட்டைச் சென்றடைந்தனர். இந்த வட்டாரங்களில் கடையநல்லூர் உறுப்பினர்கள் பெருந்திரளாக வாழ்ந்துவந்தனர்.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் ஆலோசகர் நஸீர் கனி பாரம்பரிய நடைப்பயணத்தைத் தொடக்கிவைத்தார். மரபுடைமைப் பயணத்தில் கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்றனர். உறுப்பினர்களோடு சமூக நிலைய அடித்தளத் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய மரபுடைமை நிகழ்வில் சுகாதார, தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.

1950களில் உமறுப்புலவர் பள்ளியின் வரலாற்றையும் பள்ளியைத் தோற்றுவித்த கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் பதிவையும் நகர மறுசீரமைப்பு ஆணையம் அதன் பிரதானத் தூணில் நிரந்தரமாகப் பதிக்க உள்ளது. இதன் மாதிரி வடிவத்தைச் சிறப்பு விருந்தினர் ரஹாயு திறந்துவைத்தார்.

பாரம்பரிய மரபுடைமை நடைப்பயணத்தின் இறுதியில் நன்றியுரை ஆற்றிய சங்கத்தின் தலைவர் ராஜா முஹம்மது, கடையநல்லூர் ஸ்திரீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள நினைவுப் பலகை மாணவர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் முக்கிய வரலாற்றுக் குறியீடாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பாரம்பரிய நடைப்பயணத்தில் கலந்துகொண்டது உணர்வுபூர்வமான ஒன்றாக அமைந்தது. பாரம்பரிய நினைவு மாதிரியின் முன்னால் நின்றுகொண்டு படங்கள் எடுத்தும் பள்ளியின் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதும் பலரை உருக்கியது.

நடைப்பயணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பை அளிக்கப்பட்டது. பங்கெடுப்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சங்கத்தின் 85ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை டௌன்டவுன் ஈஸ்ட் டி’மார்க்கீ மண்டபத்தில் சிறப்பு விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சங்க வரலாற்றைச் சித்திரிக்கும் சிறப்பு மலர் ஒன்றும் இந்நிகழ்வின்போது வெளியிடப்படவுள்ளது.

சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர்ச் சமூகத்திற்கும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் கடந்த 85ஆண்டுகளாகச் செய்த சேவையை நினைவுகூரும் வகையில் இக்கொண்டாட்டம் அமையவுள்ளது. இதில் பொதுமக்களும் நன்கொடையாளர்களும் ஆதரவாளர்களும் பெருமளவில் கலந்துகொள்வர் என்றும் சங்கம் எதிர்பார்க்கிறது.

குறிப்புச் சொற்கள்