தலைமுறைகள் கடந்தும் தொடரும் காவடி மரபு

தலைமுறைகள் கடந்தும் தொடரும் காவடி மரபு

3 mins read
f1c621f8-442d-4600-b226-c094d766341c
காவடியை அலங்கரிக்கும் பணியில் ஈடுபடும் தாத்தா வைரவன், பேரன் டர்‌‌ஷன். - படம்: தா‌‌‌ஷாயனி சுகேந்திரன்

ஐம்பது ஆண்டுகள் காவடி சுமந்து நடந்த திரு வைரவன் மாரிமுத்து, உடல்நலக் குறைவால் கடந்த பத்தாண்டுகள் காவடி சுமக்க முடியாமல் போனது. இவ்வாண்டு மீண்டும் காவடி சுமக்க உற்சாகத்துடன் தயாராகி வருகிறார் அவர்.

கடந்த 2014ஆம் ஆண்டு தைப்பூசத்தையொட்டி காவடி சுமந்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார் வைரவன். அந்த ஆண்டு எதிர்பாராவிதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, இதய ரத்த நாளத்தில் உள்ள அடைப்பை நீக்கும் ‘ஸ்டென்டிங்’ சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் காவடி சுமக்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தினார். காவடி சுமக்க முடியாத நிலைமை வருத்தம் அளித்தபோதும், தைப்பூச நாளில் ஆண்டுதோறும் கோவிலுக்குச் சென்றுவரும் வழக்கத்தை மேற்கொண்டார் வைரவன்.

“ஒவ்வொரு முறையும் பிறர் காவடி சுமப்பதை ஏக்கத்துடன் பார்ப்பேன். மீண்டும் காவடி சுமக்க ஏதுவாக என் உடலைச் சீராக்கும்படி முருகனை வேண்டுவது என் வழக்கமானது,” என்ற வைரவன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தமது பேரன் காவடி சுமப்பதைச் சுட்டினார்.

தனது தாத்தா காவடி எடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்த காலத்தில், அவரது பேரன் டர்ஷன் சிவராஜ் தாமாக முன்வந்து காவடி சுமக்கத் தொடங்கினார். குடும்பத்தினர் யாரும் வலியுறுத்தாதபோதும், தனிப்பட்ட நேர்த்திக்கடனுக்காக இதனைச் செய்வதாகக் கூறினார் டர்‌‌ஷன்.

“2019ஆம் ஆண்டு பங்குனி உத்திரத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை முன்வைத்தேன். அது நிறைவேறியபோது காவடி எடுக்கத் தொடங்கினேன்,” என்றார் அவர்.

காவடியை வடிவமைக்கும் குடும்பத்தினர். (இடமிருந்து) நிர்மலா முருகே‌‌ஷு, டர்‌‌ஷன், ஹரனே‌ஷ்.
காவடியை வடிவமைக்கும் குடும்பத்தினர். (இடமிருந்து) நிர்மலா முருகே‌‌ஷு, டர்‌‌ஷன், ஹரனே‌ஷ். - படம்: தா‌‌‌ஷாயனி சுகேந்திரன்

“எனக்குப் பொதுவாகவே வலி தாங்கும் ஆற்றல் குறைவு என்பதால், நான் காவடி எடுக்கப்போவதாகச் சொன்னபோது குடும்பத்தினர் வியந்தனர்,” என நினைவுகூர்ந்தார் டர்‌‌ஷன். “முதலில் நான் விளையாட்டாகச் சொல்கிறேன் என்று நினைத்தனர். பின்னர், நான் தீவிரமாக இருப்பதை அறிந்தவுடன் எனக்குத் துணைநின்றனர்,” என்றார் அவர்.

தாம் காவடி எடுக்க முடியாத காலத்தில், தமது பேரன் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்வதைக் கண்ட வைரவனுக்குப் பெருமையுடன் மகிழ்ச்சியும் ததும்பியது. தற்போது உடல்நிலை தேறி, காவடி சுமக்க மருத்துவரின் ஒப்புதலைப் பெற்ற நிலையில், தர்‌‌ஷனுடன் இணைந்து காவடி சுமக்க உற்சாகத்துடன் தயாராகி வருகிறார் 72 வயதான வைரவன்.

தாத்தாவுடன் முதன்முறையாகக் காவடி சுமக்கவுள்ள டர்‌‌ஷன், தமது காவடியைத் தாமே உருவாக்கியுள்ளார். மணிகள் கோப்பது, மயிலிறகுகளை அடுக்குவது என அலங்காரப் பணிகளில் தாத்தாவின் பல்லாண்டுகால அனுபவம் கைகொடுத்ததாகப் புன்னகையுடன் குறிப்பிட்டார் டர்‌‌ஷன்.

“டர்ஷன் தமது தாத்தாவைப் பார்த்து வளர்ந்தவர். அவர்கள் இருவரும் இணைந்து காவடி சுமக்கத் தயாராவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இது நமது கலாசாரம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதை காட்டுகிறது,” என்றார் டர்‌‌ஷனின் தாயார் நிர்மலா முருகே‌ஷு.

இதற்கு முன்பு தாத்தாவுக்கும் பின்னர் அண்ணனுக்கும் துணைநின்ற டர்ஷனின் தம்பி ஹரனே‌ஷ் சிவராஜ், தற்போது இருவருக்கும் ஆதரவாக அவர்களுடன் நடக்கவுள்ளார்.

“பத்து ஆண்டுகளில் எனது உடல்நிலை மாறியுள்ளதை உணர்கிறேன்,” என்ற வைரவன், “எது மாறினாலும், எனது நம்பிக்கை மாறவில்லை. முருகப்பெருமான் என்னைப் பார்த்துக்கொள்வார் எனும் நம்பிக்கை உள்ளது,” என்றார்.

டர்ஷனைப் பொறுத்தவரை நேர்த்திக்கடன் செலுத்துவதே தலையாய நோக்கம். உடல் ரீதியாக இது சவாலானதென்றாலும், பாரம்பரிய இசையும், குடும்பத்தின் ஆதரவும் வலியையும் பயத்தையும் போக்க உதவுவதாகக் குறிப்பிட்டார் அவர்.

“இசை தொடங்கி, கவனம் அதில் ஒன்றிவிட்டால், உடலில் ஒரு புதிய வேகம் பிறக்கும். பிறகு காவடி சுமந்தபடி நடந்து கோவிலைச் சென்றடையும்போது கிடைக்கும் மனநிறைவு மிகச்சிறந்த உணர்வு,” என்றார் டர்‌‌ஷன்.

தாத்தா வைரவனும், “என் பேரனுடன் இணைந்து நடப்பதே எனக்கு நிறைவான உணர்வு,” என்றார்.

குறிப்புச் சொற்கள்