தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதையில்லாச் சமூகத்தின் பாதுகாவலர்கள்

3 mins read
c5d456ae-015a-4fbb-9298-71685322b0f2
போதைப் புழக்கத்துக்கு எதிராக சிங்கப்பூரில் தொடர்ந்து போராடும் தன்னார்வலர்கள், சமூகப் பங்காளிகளுக்‌கு நன்றி தெரிவித்து நடைபெற்ற விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷால் இப்ராகிமுடன் தொண்டூழியச் சேவையாளர்கள். - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

போதைப் புழக்கத்துக்கு எதிராக சிங்கப்பூரில் தொடர்ந்து போராடும் தன்னார்வலர்களுக்‌கும் சமூகப் பங்காளிகளுக்‌கும் நன்றி தெரிவிப்பதற்கு, ‘போதையில்லா எஸ்ஜி’ விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு.

இந்நிகழ்ச்சியின் முக்‌கிய அங்கமாக, 2016ல் அமைக்கப்பட்ட ‘ஏ3 கட்டமைப்பு’, ‘போதையில்லா சிங்கப்பூர் ஆர்வலர் குழு’ என்று மறுபெயரிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

2016ல் நிறுவப்பட்ட இந்தக் கட்டமைப்பு, இளையர்கள் உட்பட 20 ஆதரவாளர்களுடன் தொடங்கி தற்போது 490க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களைக் கொண்டுள்ளது. 

இதன் தன்னார்வத் தொண்டர்கள், போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செய்திகளைப் பரப்புதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுதல், அடிப்படை முயற்சிகளை வழிநடத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அவ்வகையில், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.

போதைப் புழக்கம் உள்ளிட்ட எதிர்மறை தாக்கங்கள் சமூகத்தில் ஊடுருவாமல் தடுப்பது மானுடத்தின் கடமையும் பொறுப்பும் என்று தெரிவித்தார் திருவாட்டி சாந்தி கோவிந்த்.

“இன்றைய இளையர்கள் வருங்காலத் தலைவர்கள்; அவர்கள் நாளைய பெற்றோர். இவர்களை உள்ளடக்கிய சமூகத்தில்  போதைப் புழக்கம் அண்டாமல் பாதுகாத்திட கல்வியே முதன்மையான வேலி,” என்று கருதிய திருவாட்டி சாந்தி, சிறைச்சாலை தொண்டூழியராகச் சேவையாற்றுகிறார்.

“நல்லதொரு குடும்பம், பாதுகாப்பான அக்கம்பக்கம் மற்றும் வெற்றிநடைபோடும் சமூகத்தைக் கட்டமைப்பதற்கு கடும் உழைப்பும் நேரமும் தேவைப்படுகிறது.

“ஆனால், அவை அட்டையைப்போல சரிந்து வீழ்வதற்கு மடமையும் பலவீனமும் கொண்ட சிறு தருணம் போதும்,” என்று தமது கவலையைப் பதிவுசெய்த திருவாட்டி சாந்தி, கடுமையாக உழைத்து நமது மக்களே நமது குடும்பமாக, பொக்கிஷமாக  நாம் கட்டியெழுப்பியதை நிச்சயமாகப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, போதைப் புழக்கமில்லா சமூகத்தை வடிவமைத்திட போதைத் தடுப்புப் பராமரிப்பு சார்ந்த கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது என்று வலியுறுத்துகிறார் திருவாட்டி பி. மதுபாலா.

தொண்டூழியம் சார்ந்த தமது பணிகளில், இதனைக் கைகொண்டிருப்பதாகச் சொன்ன திருவாட்டி மதுபாலா, “பொதுமக்களைப் பேரளவில் சென்றடைவதற்குத் தடுப்புப் பராமரிப்பு சார்ந்த கல்வி, தொலைத்தொடர்பு, அனுபவங்களைப் பகிர்தல் அவசியம்,” என்றார்.

தீங்கு வருமுன் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் இன்றியமையாதது என்று தெரிவித்த திருவாட்டி மதுபாலா, “ஏனெனில் இப்பழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது போதைப் புழங்கிகளின் அன்புக்குரியவர்களே. இவை குடும்பத்தைச் சிதைத்து இளையோரின் அடிப்படை வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன,” என்றார்.

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய சமூகச் சேவை அமைப்பின் இயக்குநரான அவர், இதன் தொடர்பில் இச்சேவை அமைப்பு சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், மஞ்சள் நாடா அமைப்பு உள்ளிட்ட பல பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றியதையும் நினைவுகூர்ந்தார்.

“போதைப் புழக்கமற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் சமூகத்தை ஈடுபடுத்துவதில் அநேக பலன்கள் உண்டு. போதைப் புழங்கிகளைச் சென்றடைய நண்பர்கள், தொண்டூழியர்கள் உண்டு. 

“அதன்வழி அப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள தொண்டூழியர்களுக்கும் அது வாய்ப்பளிக்கிறது. போதைப் புழங்கிகளுடன் மட்டும் சேவையாற்றாமல் அவர்களின் குடும்பத்தினருடனும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் அதற்கு மிகுந்த முயற்சியும் நேரமும் தேவை. அதன் அனுகூலங்கள் நேர்மறை மாற்றங்களை நல்கும்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திருவாட்டி மதுபாலா. 

இக்குழுவில் இணைந்து தொண்டூழியச் சேவை செய்ய ஆர்வமுள்ளவர்கள் www.volunteers.gov.sg இணையத்தளம் அல்லது CNB_Community_Partnership@cnb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தன்னார்வலராகப் பதிவு செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்