சிங்கப்பூரில் முதல்முறையாக மேடையேறும் ஹாரிஸ் ஜெயராஜ்

2 mins read
58d930ea-28b6-4261-b72e-525fe0763076
‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ் 6.0’ இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் சிங்கப்பூரின் ‘த ஸ்டார்’ அரங்கில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.  - படம்: கே எஸ் டாக்கிஸ்

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிங்கப்பூரில் முதல்முறையாக ஓர் இசை நிகழ்ச்சி படைக்கவிருக்கிறார்.

‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ் 6.0’ இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் சிங்கப்பூரின் ‘த ஸ்டார்’ அரங்கில் மக்களை மகிழ்விக்க உள்ளது.

‘கே எஸ் டாக்கிஸ்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்கு இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் கடந்த ஐந்து இசை நிகழ்ச்சிகளும் மலேசியாவில் நடந்ததால் இம்முறை அவர் சிங்கப்பூர் ரசிகர்களுக்காக இங்கு ஒரு நிகழ்ச்சி படைக்க விரும்பியதாகத் தெரிவித்தார் ‘கே எஸ் டாக்கிஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடேசன் கார்த்திக், 50.

“ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று சொன்னாலே சிறந்த ஒலித் தரம் என்பதுதான் பலரின் கருத்து. அதுவும் ‘த ஸ்டார்’ அரங்கம் போன்ற ஒரு பிரம்மாண்ட வளாகத்தில் அப்பாடல்கள் ஒலிப்பது வருகையாளர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்,” என்றார் கார்த்திக்.

ஹாரிஸ் ஜெயராஜுடன் கார்த்திக், சைந்தவி, ராகுல் நம்பியார் உட்பட தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் கிட்டத்தட்ட 12 பேருடன் விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்’ கலைஞர்களும் இதில் பங்கேற்கவிருக்கின்றனர்.

2019ல் நிறுவப்பட்ட ‘கே எஸ் டாக்கிஸ்’ நிறுவனம் இதற்குமுன் சிங்கப்பூரில் இளையராஜா இசை நிகழ்ச்சிகள் இரண்டை ஏற்பாடு செய்து நடத்தியது.

இசை நிகழ்ச்சிகள் தவிர, ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகிசிவம் பட்டிமன்றம், நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் படைத்த இரண்டு மேடை நாடகங்கள் போன்றவற்றுக்கும் ‘கே எஸ் டாக்கிஸ்’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இதுவரை ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ் 6.0’ இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் ஏறத்தாழ 70 விழுக்காடு விற்பனையாகியுள்ளன.

அதிகமானோரை ஈர்க்க ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதி வரை நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் 25 விழுக்காட்டுச் சிறப்புக் கழிவு விலையில் விற்கப்படும் என்று ‘கே எஸ் டாக்கிஸ்’ நிறுவனம் தெரிவித்தது.

நுழைவுச்சீட்டுகள் S$128 முதல் S$428 வரை விற்கப்படுகின்றன.

மேல் விவரங்களுக்கு https://www.sistic.com.sg/events/heart0825 என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்