மூன்று மருத்துவமனைகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சுகாதாரத் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ‘ஆரோக்கியமான இல்லம்’ எனும் சமூக சேவை முயற்சியை மேற்கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 7) நடந்த இந்த நிகழ்ச்சியில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனை, முதல் முறையாக இதில் இணைந்த அலெக்சாண்டிரா மருத்துவமனை ஆகியவை பங்கேற்றன.
மேற்கண்ட மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட இந்த ஆண்டுத் திட்டம், அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் தொண்டூழியர்களின் பங்களிப்பைக் கண்டது.
கிளமெண்டி, ஜூரோங், புக்கிட் பாத்தோக் உள்ளிட்ட தென்மேற்கு மாவட்டத்தின் ஒன்பது தொகுதிகளில் உள்ள 36 வீடுகளைத் தொண்டூழியர்கள் சுத்தம் செய்தனர்.
மருத்துவர்கள், தாதியர், அதனுடன் தொடர்புடைய சுகாதார வல்லுநர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்று அத்தியாவசிய வீட்டுப் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
வாழ்விடங்களைச் சுத்தப்படுத்துதல், தீ விபத்து அபாயங்களை நீக்குதல் மற்றும் முதியவர்களுக்கு வீழ்ச்சியைத் தடுக்க தளவாடங்களை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் தொண்டூழியக் குழுவினர் கவனம் செலுத்தினர்.
மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளின் மருந்துகளை ஆய்வு செய்ததோடு, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் அதிக சுதந்திரமாக வாழ்வதை உறுதிசெய்வதற்காக அடிப்படை சுகாதாரக் கல்வியையும் வழங்கினர்.
2013ஆம் ஆண்டு முதல், ஜூரோங் ஹெல்த் கேம்பஸ் முன்முயற்சியாக 1,800க்கும் மேற்பட்ட ஊழியர்களின் முயற்சியால் சுமார் 2,500 குடியிருப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக ஆதரவைப் பெறுவதற்காக மருத்துவ சமூகப் பணியாளர்கள் மற்றும் சமூகப் பங்காளிகளால் இந்தத் திட்டத்தின் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் பின்தொடர்தல் உதவி ஆகியவை அந்தந்த சுற்றுப்புறங்களில் உள்ள தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு சமூக பராமரிப்புக் குழுக்கள் மூலம் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
இந்தத் தொண்டூழியர்களின் அர்ப்பணிப்புள்ள பணி, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள முதியவர்கள் பாதுகாப்பான மற்றும் தூய்மையான சூழலில் வாழ்வதை உறுதிசெய்ய பெரிதும் உதவியுள்ளது.
அலெக்சாண்டிரா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி செல்வி மார்கரெட் லீ, 49, “பராமரிப்பு என்பது மருத்துவமனையில் தங்குவதோடு முடிந்துவிடுவதில்லை, நோயாளிகளின் இல்லத்திற்கே சென்று பார்ப்பது “நீண்டகாலப் பராமரிப்புத் திட்டங்களை வடிவமைக்க உதவும்,” என்று கூறுகிறார்.
“இத்திட்டம் அறிகுறிகளுக்கு அப்பாற்பட்டு நோயாளிகள் மீதான அனுதாபத்தைப் பெற உதவுவதோடு அவர்களின் சமூகத் தனிமை மற்றும் ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்துகிறது,” என்று சொன்னார் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைத் தாதி புவனேஸ்வரி சுப்பையா, 49.
“இது ஒரு தொடக்கப் புள்ளி. குடியிருப்பாளர்களைத் தொடர்ந்து ஆதரிப்பதன்மூலம் சமூகத்திலேயே பராமரிப்பை நிலைநிறுத்துவதே நோக்கம்,” என்று தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு குறிப்பிட்டது.

