தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர்ப் பகுதியில் பூத்த மனிதநேயம்

3 mins read
7816d3ef-cd2b-4fc2-96be-e53393cf22f3
சிங்கப்பூர் ஆகாயப் படை விமானி லெப்டினென்ட் கர்னல் சி தினேஷ்வரன். - படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர் ஆகாயப் படை விமானி லெப்டினென்ட் கர்னல் சி தினேஷ்வரன், 37, மனைவியிடம் தான் மிக முக்கியமான வான்வழிப் பணி ஒன்றில் ஈடுபடப்போவதாகக் கூறியபோது அவரது மனைவி பதற்றம் அடைந்தார்.

காரணம், அந்த வான்வழிப் பணி எளிதானதன்று. அது நடைபெறும் இடமும்கூட ஒரு போர்ப்பகுதி.

வான்வழிப் பணிகள் தினேஷ்வரனுக்குப் புதிதல்ல என்றாலும் அண்மையில் மேற்கொண்ட பணி அவரது மனத்தில் பசுமரத்தாணிபோலப் பதிந்த ஒன்று.

சிங்கப்பூர் ஆயுதப் படை அண்மையில் ஒன்பதாவது முறையாக காஸா மக்களுக்கான மனிதநேய உதவிப் பொருள்களைக் கொண்டுசென்றது. அங்கு இரண்டாவது முறையாக வான்வழி விநியோகத்தில் ஈடுபட்டது.

அந்த வான்வழிப் பணியை வழிநடத்தினார் தினேஷ்வரன். ஐந்து முறை பறந்து சென்ற விமானங்களில் கிட்டத்தட்ட 15 டன் மனிதநேய உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினேஷ்வரனும் அவரது பணிக்குழுவில் இடம்பெற்ற பிறரும் வெற்றிகரமாகப் பணியை நிறைவுசெய்து, சென்ற மாதம் 25ஆம் தேதி நாடு திரும்பினர்.

தினேஷ்வரனுடன் (நடுவில்) வான்வழிப் பணியில் ஈடுப்பட்ட பலரில் இருவர்.
தினேஷ்வரனுடன் (நடுவில்) வான்வழிப் பணியில் ஈடுப்பட்ட பலரில் இருவர். - படம்: தற்காப்பு அமைச்சு

தினேஷ்வரன் பல சவால்களைத் துல்லியமாகக் கையாள வேண்டியிருந்தது. அவரது குழு மேற்கொண்ட பயிற்சி அதற்கு மிகவும் கைகொடுத்தது.

நிச்சயமற்றதன்மை, அனுதினமும் வெளிநாட்டுச் சகாக்களுடன் தொடர்பில் இருப்பது, வான்வழிப் பயிற்சியை மேற்கொள்வது எனச் சுறுசுறுப்பாக இயங்கினார் தினேஷ்வரன்.

“அடிக்கடி வான்வழிப் பயிற்சி மேற்கொண்டாலும் உண்மையான சூழலில் அது மாறுபடும். வானிலை போன்ற சவால்கள் எழத்தான் செய்யும்,” என்றார் தினேஷ்வரன்.

காஸாவில் வெப்ப அலை இருந்ததாகவும் வெப்பநிலை அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியசை எட்டியதாகவும் அவர் சொன்னார்.

தற்காப்புப் பங்காளிகள், சிங்கப்பூர் ஆயுதப் படைப் பணிக் குழு என மொத்தம் 58 பேர் இதில் ஈடுபட்டிருந்தனர்.

வெப்பநிலை விமானத்தின் ஆற்றலைப் பாதிக்கும் என்ற தினேஷ்வரன் ஒவ்வொரு மாற்றத்திற்கும் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் விரிவான பயிற்சி மேற்கொண்டாலும் காஸாவில் மனிதநேய உதவியை வான்வழியாக விநியோகிக்கும்போது அந்த உதவி சரியான இடத்தைச் சென்றடைய வேண்டும்.

மேலும் அது தடையின்றி நடைபெற, உயரமான கட்டடங்கள் பார்வையை மறைக்கக் கூடாது என்பதைக் கருத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

“உதவியை விடுவித்தபோது அது பாதுகாப்பாக நடைபெற்றதா என்று நினைத்துப் பயந்தேன்,” என்றார் தினேஷ்வரன்.

விமானத்தைத் தயார் செய்வது, பொருள்களை விமானத்தில் ஏற்றுவது எனப் பல்வேறு நடவடிக்கைகளில் தினேஷ்வரன் பலருடன் கைகோத்துச் செயல்பட்டார்.

“மிக உயர்ந்த தரநிலைகளுக்கும் பயிற்சிகளுக்கும் கட்டுப்பட்டு நடந்துகொண்டோம். பணிக்குழுவினருக்கு இடையில் நல்ல தொடர்பும் நம்பிக்கையும் நிறைந்திருந்ததால் எங்களால் அப்பணியைத் தடையற்ற முறையில் செய்ய முடிந்தது,” என்று தெரிவித்தார் தினேஷ்வரன்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மியன்மார், கொவிட்-19 கொள்ளைநோய்க் காலத்தில் இந்தியாவிற்கு உயிர்வாயுக் கொள்கலன்கள் விநியோகம், 2015ல் பிலிப்பீன்ஸைப் புரட்டிப்போட்ட புயலை அடுத்து நிவாரணம் எனப் பல வான்வழிப் பணிகளில் பங்குகொண்ட அனுபவம் அவருக்குண்டு.

சிங்கப்பூர் ஆகாயப் படையில் 122 பிரிவின் ஆணை அதிகாரியான தினேஷ்வரன் காஸாவிற்கு வான்வழிப் பணி மேற்கொள்வதற்கு முன்னர் தேசிய தின அணிவகுப்பின் C-130 விமானப் பிரிவின் ஆணை அதிகாரியாக இருந்தார்.

அணிவகுப்பில் வான்வழி சாகசக் காட்சி புரிவதற்கான ஒத்திகைகள் நடைபெற்ற அதேநேரத்தில் அவர் காஸா வான்வழிப் பணிக்கும் தயாராகிக்கொண்டிருந்தார்.

“தேசிய தின அணிவகுப்புக்கான பயிற்சி வேறுபட்டாலும் இவை இரண்டுமே சிங்கப்பூரின் பாதுகாப்பும் அமைதியும் தானாகக் கிடைத்துவிடவில்லை என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் எனக்கு உணர்த்தின,” என்று கூறினார் தினேஷ்வரன்.

குறிப்புச் சொற்கள்