மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு செயலாக மாறுவது முக்கியம்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு செயலாக மாறுவது முக்கியம்

வரைகலை: ஹஃபிஸா ஐனி

31 Oct 2026 - 2:51 pm

6 mins read

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் நிறைவடையும் வேளையில், அதையொட்டி நடைபெறும் இயக்கங்களும் கலந்துரையாடல்களும் நோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகின்றன. 

இருந்தபோதும், அதிகரித்துவரும் விழிப்புணர்வு செயலாக மாறுகிறதா? மார்பகப் புற்றுநோய் குறித்த தகவல்கள் எளிதில் கிடைத்தாலும், அச்சம், தவறான நம்பிக்கைகள், மருத்துவ உதவியை நாடுவது குறித்த தெளிவின்மை  உள்ளிட்டவை பெண்களுக்கு உதவிபெறுவதற்குத் தடைக்கற்களாக விளங்குகின்றன.

விழிப்புணர்வைத் தாண்டி, உரிய நேரத்தில் பரிசோதனை மேற்கொள்வது, தகவலறிந்து முடிவெடுப்பது, பொருத்தமான ஆதரவைப் பெறுவது ஆகியவற்றுக்கு என்ன தேவை என்பதை மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், மருத்துவ நிபுணர்கள், ஆதரவாளர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.

பொருத்தமான ஆலோசனையின்றி என்ன செய்வது என அறியாமல் பெண்கள் பலர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதாக மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக்கப் சூ கூறினார். 

“மார்பக நலனை எவ்வாறு பேணுவது என்ற தெளிவின்மையும் பரிசோதனைச் செலவு குறித்த கவலையும் பெண்கள் இந்த நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.

ஏற்கும் மனப்பான்மை

தவறாமல் உடல்நலப் பரிசோதனைகளுக்குச் செல்லும் பெண்களுக்குக்கூட புற்றுநோய் கண்டறியப்பட்ட செய்தியை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம். 

இல்லத்தரசியும் இரு மகள்களின் தாயுமான ஷாலினி சச்தேவ், 45, உடல்நலப் பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளித்து வந்தார். இருப்பினும், தமக்கு ‘இரண்டாம் நிலை பி’ மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அவர் அதிர்ச்சியடைந்தார்.

“பரிசோதனையின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்துள்ளேன். ஆனால்,  இப்படி நோய்வாய்ப்படுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை,” என்றார் அவர்.

2024 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ‘மேமோகிராம்’ என்ற மார்பகப் பரிசோதனை, ‘மீயொலி’ பரிசோதனைகளில், கண்காணிக்கப்பட வேண்டிய நிணநீர்க் கணுக்கள் (Lymph Nodes) கண்டறியப்பட்டன. 

ஆறு மாதங்கள் காத்திருப்பதற்குப் பதிலாக முன்னதாகவே தம்மை மறுபரிசோதனை செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டதாகத் திருவாட்டி ஷாலினி கூறினார். 2025 மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பரிசோதனைகள், புற்றுநோய் அவரது நிணநீர்க் கணுக்களுக்கும் பரவியிருந்ததை உறுதிப்படுத்தின. அவருக்குப் புற்றுநோய் மருந்துச் சிகிச்சை, மார்பக அகற்றல், மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சுச் சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டன.

சிகிச்சையின் உடல்ரீதியான சிரமங்களுடன் தாயாகத் தாம் அன்றாடம் செய்துவந்த பணிகள் பாதிக்கப்பட்டதையும் தம்மைப் பற்றிய உணர்வில் ஏற்பட்ட மாற்றங்களையும் சமாளிக்க திருவாட்டி ஷாலினி போராடினார். 

தலைமுடி, புருவ முடி, கண் இமை முடி ஆகியவற்றை இழந்தது மனச்சுமையை மேலும் அதிகரித்தது. 

“மனத்தளவில் நான் நானாக இல்லை என்று உணர்ந்தேன். அதுபோன்று வெளித்தோற்றத்திலும் நான் நானாகத் தெரியவில்லை,” என்றார் அவர்.

கைகொடுத்த ஆதரவு

திருவாட்டி ஷாலினியின் அன்றாடப் பொறுப்புகளைச் சமாளிக்க அவரது குடும்பத்தினர் கைகொடுத்தனர். 

இரு மகள்கள், கணவர், தாயார் ஆகியோருடன் மற்ற அன்புக்குரியவர்களும் தமக்குப் பேராதரவாக இருந்ததாக அவர் கூறினார். 

குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவது முதல் வீட்டுப்பாடம் செய்ய உதவுவது வரை அவரது குடும்பத்தினர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு, திருவாட்டி ஷாலினியின் தாயார் அவருடன் தங்கினார். உறவினர்களும் நண்பர்களும் அவருக்கு ஆதரவளித்தனர். மருத்துவச் சந்திப்புகளுக்கு உடன் சென்றதுடன் அவருடன் நேரமும் செலவிட்டனர்.

“இயன்றவரை எங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொடர முயன்றோம். அது தொடர்ந்து இயங்க எங்களுக்கு உதவியது,” என்றார் திருவாட்டி நஸ்ரின்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமான தமது சக ஊழியருக்கு ஆதரவளித்த அனுபவத்தை மருத்துவ ஆலோசகரான நஸ்ரின் நினைவுகூர்ந்தார்.  

அந்நாளில் நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த அந்த ஊழியருக்குக் களைப்பினால் வேலை பாதிக்கப்பட்டது. அவரது சுமையைக் குறைக்க, சக ஊழியர்கள் பணிகளைப் பகிர்ந்துகொண்டதுடன் வாடகை வாகனத்தில் பயணம் செய்யவும் உதவினர்.

“அவரது வேலைப்பளுவை அதிகரிக்காமல் அவரால் இயன்ற அளவிலான பணிகளை மட்டும் செய்ய உறுதிசெய்தோம்,” என்றார் திருவாட்டி நஸ்ரின். 

ஒன்றாக நண்பகல் உணவு உண்பதும் வெளியே செல்வதும் நோயைத் தாண்டிய அவர்களது உறவைப் பேண உதவின.

இருப்பினும், அந்த மாதின் தேவைகளை எல்லா நேரங்களிலும் முழுமையாக அறிய இயலவில்லை என்று திருவாட்டி நஸ்ரின் ஒப்புக்கொண்டார். 

மற்றொருவரின் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், சிறிய அன்பான செயல்கள் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அந்த அனுபவம் அவருக்குக் கற்றுத்தந்தது.

“பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதே அடிப்படையாக நாம் செய்யக்கூடிய  ஒன்று. அவ்வாறு புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அன்பையும் புரிதலையும் வெளிப்படுத்துவதே அவருக்குப் பெரிதும் உதவும்,” என்றார் அவர்.

அணுகுமுறையும் அனுபவமும்

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு, திருவாட்டி ஷாலினியின் மீண்டுவரும் பயணம் புதிய கட்டத்தை எட்டியது. இன்றும் அவர் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்கிறார். 

வாழ்க்கையை அவர் அணுகும் விதத்தை இந்த அனுபவம் மாற்றியுள்ளது. கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்கவும் தமது உணர்வுகளை வெளிப்படையாகப் பகிரவும் அவர் பழகி வருகிறார்.

மனவுறுதி என்பது எப்போதும் வலிமையானவராகத் தோற்றமளிப்பதில் இல்லை என்பதைத் தாம் உணர்ந்ததாகத் திருவாட்டி ஷாலினி கூறினார்.

“நம்பிக்கையுடன் இருப்பதற்கு நான் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவோ துணிச்சலாகவோ இருக்க வேண்டியதில்லை என்பதைப் போகப் போக உணர்ந்தேன். சில நாள்களில் அழுதேன்; சில நாள்களில் கோபப்பட்டேன்; சில நாள்களில் அச்சமாக இருந்தது. வலிமையாக உணராத நாள்களில்கூட நான் தொடர்ந்து முன்னேறினேன் என்பதே முக்கியம்,” என்றார் அவர்.

டாக்டர் தனுஜா ராஜசேகரன்
டாக்டர் தனுஜா ராஜசேகரன் - படம்: தனுஜா

பெண்கள் உதவி நாடுவதைத் தடுப்பது எது?

தவறான நம்பிக்கைகள் பெண்கள் மருத்துவ உதவியை நாடுவதைத் தடுக்கக்கூடும். அறிகுறிகளோ குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் வரலாறோ இல்லாவிட்டால் பரிசோதனை தேவையில்லை என்று சில பெண்கள் கருதுவதாக ‘பார்க்வே கேன்சர்’ அலுவலகத்தின் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் தனுஜா ராஜசேகரன் கூறினார்.

புற்றுநோய் கண்டறியப்பட்டால் மரணத்தைத் தவிர்க்க முடியாது என்று வேறு சிலர் தவறாக எண்ணி அஞ்சுகின்றனர்.

தம்மைப் பராமரித்து வந்த மகனிடம் மார்பகக் கட்டியைப் பற்றிப் பேசத் தயங்கியதால் மருத்துவ உதவியை நாடுவதைத் தாமதித்த வயதான நோயாளி ஒருவரை அவர் நினைவுகூர்ந்தார்.

“புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதால் பெரும்பாதிப்புகளைத் தவிர்க்கமுடியும் என்பதை மக்களிடம் மேலும் வலியுறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எவ்வளவு முன்கூட்டியே பிரச்சினையைக் கண்டறிய முடியுமோ, அது நோய்க்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கும் வாய்ப்பை நமக்குத் தருகிறது,” என்று அவர் கூறினார்.

பெண்கள் தங்கள் கவலைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க நடைமுறை உதவிகள் துணைபுரியலாம். நம்பகமான தகவல்கள், மருத்துவச் சந்திப்புகளுக்குத் துணையாகச் செல்வது, பணியிடத்தில் நீக்குப்போக்கு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை டாக்டர் தனுஜா சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர்ப் புற்றுநோய்க் கழகத்துடன் இணைந்து மார்பகப் புற்றுநோய் அறநிறுவனம் நடத்தும் ‘ஸ்கிரீன் சிஸ்டர்ஸ்’ திட்டம், பெண்கள் ஒன்றாகப் பரிசோதனைக்குச் சென்று ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதை ஊக்குவிக்கிறது.

பெண்கள் சிரமமின்றியும் மற்றவர்கள் தங்களைத் தவறாக மதிப்பிடுவார்களோ என்ற அச்சமின்றியும் கேள்விகள் கேட்கவும் மருத்துவ ஆலோசனையை நாடவும் ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“பெண்கள் தங்களுக்கு ஆதரவு கிடைப்பதாக உணர வேண்டுமே தவிர, அழுத்தத்திற்கு உள்ளாவதாக உணரக்கூடாது என்பதே முக்கியம்,”  என்று அவர் கூறினார். 

மாற்றங்களைக் கவனியுங்கள்

அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே இயல்புக்கு மாறானவற்றைக் கண்டறிவதே பரிசோதனையின் நோக்கம் என்று டாக்டர் தனுஜா கூறினார். 

வயது, தனிப்பட்ட நோய் அபாயம், குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் வரலாறு உள்ளிட்டவற்றைப் பொறுத்து பரிசோதனைப் பரிந்துரைகள் அமையும். புதிய கட்டியோ கவலைக்குரிய மாற்றமோ தென்பட்டால் மருத்துவரை அணுகி மதிப்பீடு பெற வேண்டும்.

“மார்பகத்தில் அறிகுறிகள் தென்பட்டால், வழக்கமான பரிசோதனைக்காகக் காத்திருக்காமல் நேரடியாக மருத்துவரை அணுக வேண்டும்,” என்றார் அவர்.

மார்பகப் பரிசோதனையின்போது என்ன நடக்கும்?
மார்பகப் பரிசோதனையின்போது என்ன நடக்கும்? - வரைகலை: ஹஃபிஸா ஐனி

தனித்திருக்க வேண்டாம்

விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மார்பகப் புற்றுநோயாளிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் உணர்வுசார்ந்த ஆதரவும் நடைமுறை உதவிகளும் கிடைப்பதை உறுதிசெய்வதும் முக்கியம்.

மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளையின் நட்பாதரவுத் திட்டத்தைச் சுட்டிய திரு சூ,  இத்திட்டத்தில் புற்றுநோயிலிருந்து மீண்ட பயிற்சிபெற்ற தொண்டூழியர்கள், நோயறிதலையும் சிகிச்சையையும் எதிர்கொள்வோருக்கு வழிகாட்டுதலும் ஊக்கமும் அளிப்பதாகச் சுட்டினார்.

தமது சிகிச்சைக் காலத்தில் புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்களின் அனுபவங்களை மேலும் கேட்டிருக்க விரும்பியதாக திருவாட்டி ஷாலினி கூறியதை இத்தகைய தொடர்புகள் நினைவூட்டுகின்றன.

நோயாளிகளுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் ஆதரவுக் குழுக்களும் உள்ளன. அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கும் உணர்வுசார்ந்த ஆதரவு தேவை என்பதை நஸ்ரினின் அனுபவமும் எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய சேவைகள் நம்பிக்கையளிக்கும் அதேவேளையில், “விழிப்புணர்வு செயலாக மாற வேண்டும்,” என்று திரு சூ வலியுறுத்தினார்.

சுய மார்பகப் பரிசோதனை
சுய மார்பகப் பரிசோதனை - வரைகலை: ஹஃபிஸா ஐனி

உதவிநாடுவதும் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதும் தனிமை உணர்வைக் குறைக்கலாம்.

“சிகிச்சை கடினமானது; அச்சத்தையும் வலியையும் தரக்கூடியது. ஆனால், நீங்கள் நலம்பெற்று மீண்டும் உங்கள் வாழ்க்கையை வாழ முடியும்,” என்கிறார் திருவாட்டி ஷாலினி.

மார்பகப் புற்றுநோய் ஆதரவுச் சேவைகள் குறித்த தகவல்களுக்கு, மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளையை 6356 0123 என்ற எண்ணில் அழைக்கலாம். வாட்ஸ்அப் வழியாக மட்டும் தொடர்புகொள்ள 9695 3264 என்ற எண்ணில் அணுகலாம்.

குறிப்புச் சொற்கள்