இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்குத் தளங்களில் ஒன்றான ஜியோஹாட்ஸ்டார், சிங்கப்பூரில் அதன் இணைய ஒளிபரப்புச் சேவையை அதிகாரபூர்வமாகப் புதன்கிழமை (செப்டம்பர் 2) தொடங்கியுள்ளது.
அனைத்துலக அளவில் அது சேவையை விரிவுபடுத்த முனைகிறது. பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தனது சேவை கொடுக்கும் என்று ஜியோஹாட்ஸ்டார் நம்புகிறது. நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் பார்க்கவும் பங்கெடுக்கவும் இருவழித் தொடர்பு அம்சங்களை அது கொண்டிருக்கும்.
அதனை 500 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். ஜியோஹாட்ஸ்டார் பல்வேறு மொழிகள், வயதினருக்கு ஏற்ற வகையில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகிறது. உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்குத்தளங்களில் ஒன்றாக அது உருவாக்கியுள்ளது.
மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இணைய ஒளிபரப்புச் சேவை புதிய வடிவம் எடுத்துவருகிறது. இந்தியாவில் இதற்கு ஈடுகொடுத்து ஜியோஹாட்ஸ்டாரும் உருமாறுகிறது. அதிநவீனத் தொழில்நுட்பத்துடன்கூடிய படைப்புகளை வழங்கிப் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை அது கொடுத்துவருகிறது.
ஜியோஹாட்ஸ்டார் 160,000 மணிநேரத்திற்கும் அதிகமான படைப்புகளைக் கொண்டுள்ளது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டும் 30,000 மணிநேரப் புதிய படைப்புகளையும் சேர்க்கப்போவதாக அது கூறியுள்ளது.
சிங்கப்பூரின் பல்லின, பலமொழிச் சூழலுக்கு ஏற்ற படைப்புகளைக் கொண்டுள்ளதாகவும் ஜியோஹாட்ஸ்டார் கூறியது. பலதரப்பட்ட கதைகள், மொழிகள், கலாசாரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கான படைப்புகளையும் அது வழங்கும். புகழ்பெற்ற திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உட்பட பல புதிய படைப்புகளையும் ரசிகர்கள் இதில் காணலாம்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட ஆசிய மொழிகளில் உயர்தர துணைவாசங்களுடனும் பின்னணிக் குரல் வசதிகளுடனும் சிங்கப்பூர் ரசிகர்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கவிருப்பதாக அது கூறியது.
ஜியோஹாட்ஸ்டார், சிங்கப்பூரில் நீக்குப்போக்கான சந்தாத் தெரிவுகளை வழங்குகிறது. காலாண்டுத் திட்டத்திற்கான கட்டணம் $29.98. வருடாந்தரத் திட்டத்திற்கான கட்டணம் $69.98.
தற்போதுள்ள ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் தங்களின் தற்போதைய விவரங்களைப் பயன்படுத்தி எந்தவொரு சேவைத் தடங்கலும் இன்றி புதிய சேவைக்கு மாறிக் கொள்ளலாம். அதே வேளையில் ஆப் ஸ்டோர், கூகல் பிளே ஸ்டோர் மூலம் புதிய பயனீட்டாளர்கள் எளிதாகப் பதிவு செய்துகொள்ளலாம்.


