திருவாட்டி கங்கா பாஸ்கரனின் ‘காதல் துதி’ கவிதை நூல் மார்சிலிங் ரைஸ், உட்லண்டஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ-கிருஷ்ண ஆலயத்தில் நவம்பர் 29 சனிக்கிழமை வெளியீடு கண்டது.
கவிஞர் அம்பிகா தேவாரப் பாடலோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார். வரவேற்புரை வழங்கிய கவிஞர் பிரபாதேவி, தேவாரத்தில் எங்கெல்லாம் கங்கை குறித்த பாடல் இருக்கிறதெனச் சுட்டிக்காட்டினார்.
நடனமணி ராமலட்சுமி விஸ்வநாதனின் நடனம் மேடைக்கு மேலும் அழகு சேர்த்தது. காதல் துதியில் இடம்பெற்ற இரண்டு கவிதைக்கு இசைக்கவி மதியழகன் செயற்கை நுண்ணறிவின் துணையோடு இசையமைத்திருந்தார். அதற்கு திருமதி ராமலட்சுமி நடனம் ஆடி சிந்தையைக் கவர்ந்தார்.
தமீம் அன்சாரி நூலறிமுகம் செய்தார். ஆண்டாள், மீரா காதலோடு காதல் துதியின் காதலை ஒப்பிட்டு இறைவனை அடையும் மார்க்கமே அன்புதான் என்று விளக்கினார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய கவிஞர் நெப்போலியன், நகைச்சுவையோடு தொடங்கி தனக்கே உரிய பாணியில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரை நம்மை அழைத்துப் போனார். அவரைத் தொடர்ந்து கவிஞர் சுபாஷினி கலைக்கண்ணன் தம் அனுபவங்களோடு காதல் துதியை இணைத்து இயல்பாகப் பேசி அமர்ந்தார்.
அடுத்து கவிஞர் அழகுராஜன் பக்தி இலக்கியத்தில் ஏன் பெண்கள் அதிகம் இடம்பெறவில்லை என்ற வினாவுடன் காதல் துதி அந்த இடத்திற்கு வர முயல்வதை உணர்த்தி, தமது உரையை நிறைவுசெய்தார்.
கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற சிவன் ஓவியங்களை வரைந்த பிரியா ஜெயக்குமார் தம் அனுபவங்களைச் சொன்னார்.
நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார், துணைத் தலைவர் முனைவர் சசிகுமார், வளர்தமிழ் இயக்கத் துணைத் தலைவர் ஜே மாணிக்க வாசகம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் ஆண்டியப்பன் மற்றும் நண்பர்களும் உறவினர்களும் அவையில் நிறைந்திருக்க, காதல் துதி நூல் அறிமுகம் கண்டது.
தொடர்புடைய செய்திகள்
திரு ஜே மாணிக்க வாசகமும் தமிழாசிரியர் முனைவர் மீனாட்சி சபாபதியும் நூலை வெளியிட, முதல் நூலை முனைவர் உமையாளம்பிகையும் திருவாட்டி பிரேமாவும் பெற்றுக்கொண்டனர்.
புதுமைத்தேனீ மா.அன்பழகன் காணொளி மூலமாக நூல் குறித்த தம் கருத்தைத் தெரிவித்து நூலாசிரியரையும் ஓவியரையும் வாழ்த்தினார்.
நூலாசிரியர் திருவாட்டி கங்கா ஏற்புரை வழங்கினார். காதல் துதி கவிதை நூலை வாங்க விரும்புபவர்கள் gangesnathi@gmail.com என்ற மின்னஞ்சல்வழி தொடர்புகொள்ளலாம்.

