தமிழர் வரலாறு குறித்து கேட்கப்பட்ட கேள்விகள் புதிதல்ல.
“எவ்வளவு பழமையானது?”, “இதற்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா?”, “இது வெறும் பெருமை பேசும் புனைவா?”.
இந்தக் கேள்விகள் தமிழர் வரலாற்றைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தவர்களிடமிருந்து வந்தவை.
ஆனால் இன்று, அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மண்ணிலிருந்து எழுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள், தமிழர் நாகரிகத்தை ஒரு புதிய வெளிச்சத்தில் நிறுத்துகின்றன.
கீழடி, ‘தமிழர்கள் நகரமயமாகவில்லை’ என்ற கருத்துக்கு நேரடியான மறுப்பு. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த அகழாய்வுத் தளம், கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்தே திட்டமிடப்பட்ட நகர வாழ்க்கை இருந்ததை வெளிப்படுத்துகிறது. சீரான வீதிகள், வளையக் கிணறுகள், கழிவுநீர் வடிகால் அமைப்புகள், செங்கல் கட்டடங்கள், இவை எல்லாம் ஓர் ஒழுங்கமைந்த சமூகத்தின் அடையாளங்கள். இங்கு வாழ்ந்தவர்கள் வெறும் விவசாயிகள் மட்டும் அல்லர்; கைவினைஞர்கள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள். அவர்கள் நம் மூதாதையர்.
கீழடியில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகள் இன்னும் முக்கியமானவை. எழுத்தறிவு அரசர்களுக்கும் உயர்சாதியினருக்கும் மட்டுமே இருந்தது என்ற பழைய கருத்தை, இங்குக் கிடைத்த பானை ஓடுகள் போட்டு உடைக்கின்றன. எழுதத் தெரிந்த சமூகம்தான் கேள்வி கேட்கும் சமூகம். தமிழ்ச் சமூகமும் கேள்விகள் கேட்டு தன்னைத் தகவமைத்துக்கொண்ட ஒன்று என்பதற்கு இந்தப் பானைகளும் ஓடுகளும் சான்று.
ஆதிச்சநல்லூர், சிவகளை இரண்டும் மரணத்தின் வழியாக வாழ்க்கையைப் பேசும் இடங்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்த இரு அகழாய்வுத் தளங்களிலும் ஆயிரக்கணக்கான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அவற்றுடன் கிடைத்த இரும்பு ஆயுதங்கள், விவசாயக் கருவிகள், வெண்கலப் பொருள்கள், மனித எலும்புகள், அரிசி உமிகள், இவை அனைத்தும் கி.மு. 1000ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் நிலைத்த வேளாண்மையும் தொழில்நுட்ப அறிவும் கொண்டிருந்தனர் என்பதை உறுதிசெய்கின்றன. ஒரு சமூகத்தின் வளர்ச்சி, அது எப்படி இறந்தவர்களைக்கூட நினைவுகூர்கிறது என்பதிலேயே தெரிகிறது.
ஆதிச்சநல்லூரும் சிவகளையும் அதை அழகாகச் சொல்கின்றன.
பொருநை (தாமிரபரணி) அருங்காட்சியகம், இலக்கியம் பேசும் இடம், மண் சாட்சியாக நிற்கும் இடம்.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பொருநை, ஒரு நதியினைக் குறிக்கும் சொல் மட்டுமன்று. அது ஒரு நாகரிகத்தின் முழுமையைக் குறிக்கும் சொல். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், கி.மு. 2000ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ச்சியான குடியேற்றம் அங்கு இருந்ததை நிரூபிக்கின்றன.
நீர்ப்பாசன அமைப்புகள், கருப்பு–சிவப்புப் பானைகள், கடற்கரை–உள்நாட்டு வர்த்தகச் சான்றுகள், இவை சங்கப் பாடல்களின் வர்ணனைகளோடு ஒத்துப்போகின்றன. இதன் அர்த்தம் தெளிவானது. சங்க இலக்கியம் வரலாற்றை உருவாக்கவில்லை; வரலாறுதான் இலக்கியமாக எழுதப்பட்டிருக்கிறது.
கீழ்நமண்டி. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த அகழாய்வுத் தளம், பல அறைகள் கொண்ட வீடுகள், தொழிற்பகுதிகள், நீர்முகாமைத்துவ அமைப்புகளை வெளிப்படுத்துகிறது. கீழடி ஒரு தனி நிகழ்வன்று. அது வைகை நாகரிகத்தின் ஒரு பகுதி. நாகரிகம் அரசன் இருந்த இடத்தில் மட்டும் உருவாவதில்லை; மக்கள் வாழ்ந்த இடங்களில்தான் வேரூன்றுகிறது.
பொருநை அருங்காட்சியகம்: தமிழர் வரலாற்றின் சாட்சியாக மண்
ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வுகளில் கிடைத்த அரிய பொருள்கள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன பொருநை அருங்காட்சியகத்தில். கடந்த டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்ட இந்தக் காட்சியகத்தில் தமிழர் வரலாறு தொழில்நுட்பத்தின் உதவியோடு மிகத் துல்லியமாக, 7D, 5D மெய்நிகர் அனுபவத்தோடு வழங்கப்படுகிறது.
இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்கள், பழைய பொருள்கள் மட்டுமல்ல. அவை ஒரு சமூகத்தின் நினைவுகள். அவற்றைப் பார்க்கும்போது எழும் பெருமிதத்தோடு இவற்றை நாம் எப்படிக் காக்கப் போகிறோம், உலகுக்கு அறிவிக்கப்போகிறோம் என்ற கேள்விகளும் எழுகின்றன.
சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு இது ஏன் முக்கியம்?
இது தமிழ்நாட்டின் வரலாறு மட்டுமன்று. தென்கிழக்கு ஆசியாவுக்குத் தமிழர்கள் வந்தது ‘அண்மைக்காலக் குடியேற்றம்’ என்ற பார்வையும் இங்கு மறுபரிசீலனைக்குரியது.
வணிகம், கடற்பயணம், மொழி, பண்பாடு, இவை அனைத்தும் சங்ககாலத்திலேயே தமிழர்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்ததற்கான சான்றுகள் மேற்சொன்ன அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன.
சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள், தங்கள் அடையாளத்தைப் புரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை அறியாமல், நாம் எங்குச் செல்கிறோம் என்பதைத் தீர்மானிக்க முடியாது.
அரசியலும் வரலாறும்: யாருக்கு அச்சம்?
இந்த அகழாய்வுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்ல; அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்தவை. தமிழர் நாகரிகம் தன்னிச்சையாக வளர்ந்தது, தனித்த அடையாளம் கொண்டது என்பதை இவை அறிவியல் முறையில் உறுதிப்படுத்துகின்றன.
“வடக்கிலிருந்து வந்த நாகரிகம்”, “பின்னாளில் உருவான மொழி” போன்ற பழைய வர்ணனைகள், கீழடி முதல் பொருநை வரை கிடைக்கும் ஆதாரங்களால் பொய்த்துப் போகின்றன. இதுவே சிலருக்குச் சங்கடமாக உள்ளது.
அதனால் சில நேரங்களில் அகழாய்வுகள் தாமதப்படுத்தப்படுகின்றன; அவற்றின் கண்டுபிடிப்புகள் மறுதலிக்கப்படுகின்றன; சில நேரங்களில் அவை மௌனமாகவே கடந்துவிடுகின்றன. வரலாறு பேசத் தொடங்கும் போது, அதிகாரம் பல நேரங்களில் கேட்க விரும்புவதில்லை.
அடையாள அரசியலன்று, வரலாற்று நீதி!
இது அடையாள அரசியலன்று; வரலாற்று நீதி. ஒரு சமூகத்தின் கடந்த காலம், அதன் அனுமதி இல்லாமல் எழுதப்பட்டால், அது அறிவியல் ஆகாது; அதிகாரம்!
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழ்நமண்டி ஆகிய இடங்களில் இருந்து எழும் ஆதாரங்கள், தமிழர் வரலாறு இனி பிறரின் விளக்கத்திற்கோ அனுமதிக்கோ உட்பட்டதன்று என்பதைத் தெளிவாகச் சொல்கின்றன.
நாம் ஒரு பழமையான நாகரிகத்தின் வாரிசுகள். ஆனால் அந்தப் பெருமை மட்டும் போதுமா, வரலாற்றை அறிதல் ஒரு தொடக்கம்தான். அதைப் பாதுகாத்தல், கேள்வி கேட்டுப் புரிந்துகொள்ளல், அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லல் என இவை அனைத்தும் நம் பொறுப்பு!
மண் பேசத் தொடங்கியிருக்கிறது. நாம் கேட்கத் தயாராக இருக்கிறோமா?
(பின்குறிப்பு: அண்மையில் தேசிய நூலக வாரிய நூலகர்கள் சிலர் தமிழ்நாட்டின் அகழாய்வுத் தளங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். கீழடியின் பெருமைகளை உலகுக்குப் படம்போட்டுக் காட்டிய இந்திய ஆட்சிப்பணி அலுவலர் உதயச்சந்திரனின் ஆதரவுடன் அந்தப் பயணம் அமைந்தது. ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளருமான முனைவர் எம் ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத் துறையின் உதவி ஆசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான முனைவர் அ. வெண்ணிலா ஆகியோர் இந்தப் பயணத்தைச் செம்மையாக வழிநடத்தினர்.)

