வாழ்வியலோடு திருக்குறளை இணைத்த ‘குறளும் குரலும் 3.0’ வலையொளி

வாழ்வியலோடு திருக்குறளை இணைத்த ‘குறளும் குரலும் 3.0’ வலையொளி

2 mins read
701a0e7e-fbac-4175-accb-e125de15b2fa
‘குறளும் குரலும் 3.0’ நிகழ்ச்சியைச் சாத்தியமாக்கிய கலைஞர்கள். - படம்: நிரஞ்சன் பாண்டியன்

ஒவ்வோர் ஆண்டும் திருக்குறளின் சிந்தனைகளையும் தத்துவங்களையும் எடுத்துச்சொல்லும் விதமாக அதன் ஆழமான கருத்துகளாலும் வாழ்வியல் நெறிகளாலும் தூண்டப்பட்ட இசை நிகழ்ச்சிகளை பிரம்மாஸ்த்ரா ஆர்ட்ஸ் ஹவுஸ் அமைப்பு நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு தமிழ்மொழி விழாவை ஒட்டி, வழக்கமாக ஏழு திருக்குறள்களை அடிப்படையாகக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை வழங்கும் முறையில் அது மாற்றத்தைப் புகுத்தியது.

வலையொளி வடிவில் வாழ்க்கை அனுபவங்களையும் தனிப்பட்ட கதைகளையும் பகிர்ந்து, தேர்ந்தெடுத்த திருக்குறளுக்கும் அவற்றுக்குமான தொடர்பை விளக்கிக் கூறும் விதமாக உருவெடுத்தது ‘குறளும் குரலும் 3.0’.

வலையொளி மூலம் மக்களை இன்னும் நெருக்கமாக இணைக்க முடியும் என்ற எண்ணமே இதற்கான தூண்டுதலாக இருந்தது.

நீண்ட காலமாக பிரம்மாஸ்த்ரா ஆர்ட்ஸ் ஹவுஸ் அமைப்பு நேரடிக் கலை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களுடன் ஆழமான தொடர்புகளை உருவாக்க முயன்று வந்தது.

ஆனால், அந்தப் பயணத்தில் விழிப்புணர்வை உருவாக்குவதைக் கடந்து வெவ்வேறு கலை, சிந்தனைத் துறைகள் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைய முடியும் என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருப்பது உணரப்பட்டது.

ஒரு கலைஞரின் பார்வையில் ‘ஏழு’ என்ற எண் முழுமையையும் நிறைவையும் குறிக்கிறது.

இந்தத் திட்டத்தை ஏழு திருக்குறள்கள், ஏழு உரையாடல்கள், ஏழு பாடல்கள் என்ற அமைப்பில் உருவாக்கத் தூண்டிய முக்கியக் காரணங்களில் அதுவும் ஒன்று.

“குறள்கள் வாழ்வியல் தத்துவங்களையும் சிந்தனைகளையும் தாங்கி நிற்கின்றன. ஆனால், இந்தப் பதிப்பிற்காக இந்த ஆண்டுத் தமிழ்மொழி விழாவின் கருப்பொருளான ‘ஈடுபாடு’ என்பதோடு நெருங்கிய தொடர்புடைய ஏழு கருப்பொருள்களை நாங்கள் திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்தோம்,” என்றார் பிரம்மாஸ்த்ரா ஆர்ட்ஸ் ஹவுஸ் அமைப்பின் இணை நிறுவனரும் படைப்பாக்க இயக்குநருமான நிரஞ்சன் பாண்டியன், 32.

ஒவ்வொரு திருக்குறளும் வாழ்க்கை அனுபவங்களுடனும் கலைப் பயணங்களுடனும் ஆழமாக இணைந்திருந்தது. இன்றைய தலைமுறையினருக்கும் தொடர்புடைய, சமகால அனுபவமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டது.

பல தருணங்களில் சில திருக்குறள்களுடன் அர்த்தமுள்ள, ஆழமான தொடர்பை உருவாக்குவதற்காக நீண்ட நேரம் சிந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்தச் சவால்களே இந்தக் கலைப் பயணத்தின் முக்கிய அங்கமாக மாறி அந்த உரையாடல்களும் இசை வடிவங்களும் உருவாகக் காரணமானது.

முதலில் ‘ஈடுபாடு’ என்பதற்கு ஒத்திசைவாக இருக்கும் ஏழு திருக்குறள்கள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர், ஒவ்வொரு திருக்குறளின் உணர்வு, தத்துவ அடித்தளத்துடன் தொடர்புடைய ஏழு பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றை மையமாகக் கொண்டு எந்தவகையான உரையாடல்களை உருவாக்கலாம் என்பதும் திட்டமிடப்பட்டது.

மலாய், சீன இசைக்கலைஞர்களை இத்திட்டத்தில் இணைத்தது குறிப்பிடத்தக்க அம்சம்.

“பதிவு அமர்வுகளின்போது அவர்களுடன் நீண்ட உரையாடல்களை மேற்கொண்டு திருக்குறளின் கருத்துகளையும் திட்டத்தின் நோக்கத்தையும் மெதுவாக அறிமுகப்படுத்தினோம்,” என்றார் நிரஞ்சன்.

இறுதியில் இந்தக் கூறுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, காணொளிகள் தயாரிக்கப்பட்டன என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்