பாடநூல்களைத் தாண்டியும் தமிழ் கற்போம்: தினேஷ் வாசு தாஸ்

பாடநூல்களைத் தாண்டியும் தமிழ் கற்போம்: தினேஷ் வாசு தாஸ்

3 mins read
3c359f1e-1463-4079-822a-8449cc81bf2c
(இடமிருந்து) தமிழ் முரசின் உபகாரச் சம்பளம் பெற்ற விஷ்ருதா நந்தகுமார், யுகேஷ் கண்ணன், துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், தமிழ் முரசின் இளையர் பிரிவு நிர்வாகி ஜெசிகா ஜீவா. - படம்: எஸ்பிஎச் மீடியா

பாடநூல்களைத் தாண்டி, மாணவர்கள் தாய்மொழியை அன்றாட வாழ்வில் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தை ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள தாய்மொழிகளின் கருத்தரங்கு 2026 வலியுறுத்துகிறது.

இது குறித்தும், நம் வாழ்வில் தமிழின் இன்றியமையாத பங்கு குறித்தும் தமிழ் முரசின் வலையொலியில் கலந்துகொண்டு பேசினார் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.

கல்வி அமைச்சும் மூன்று தாய்மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுக்களும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கு, ‘களிப்பூட்டும் கண்டுபிடிப்புக்கான பூந்தோட்டம்’ என்னும் கருப்பொருளுடன் இவ்வாண்டு இயங்கவுள்ளது.

துணை அமைச்சருடன் தமிழ் முரசின் இளையர் பிரிவு நிர்வாகி ஜெசிகா ஜீவா, தமிழ் முரசின் உபகாரச் சம்பளம் பெற்ற விஷ்ருதா நந்தகுமார், யுகேஷ் கண்ணன் ஆகியோரும் அக்கருத்தரங்கு குறித்து கலந்துரையாடினர்.

கூட்டுமுயற்சியில் மலரும் மொழிப் பூந்தோட்டம்

மொழியைக் கற்பதை ஒரு பூந்தோட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசிய துணையமைச்சர், ஆர்வம், தேடல், அதோடு ஆசிரியர்கள், குடும்பங்களின் கூட்டுமுயற்சி மூலமே அத்தோட்டம் செழிக்கும் என்றார்.

கருத்தரங்கில் பயிலரங்குகள், கலந்துரையாடல்கள், கதைசொல்லல், விளையாட்டுகள், உணவு வகைகள், எனப் பல அங்கங்கள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை முதன்முறையாகச் சிங்கப்பூர் எக்ஸ்போ மண்டபம் ‘2பி’யில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

காலை 10 மணி முதல் இரவு 8.30 மணிவரை நடைபெறும் அந்நிகழ்ச்சியில், தமிழ் முரசு உட்பட பல பங்காளிகளின் காட்சிக்கூடங்களும் அமைக்கப்படவுள்ளன.

ஒலி 968 வானொலி நடத்தும் வலையொளிக் காட்சிக்கூடம், பாலர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு சுவாரசியமான அனுபவமாக அமையும்.

தொழில்நுட்பத்தின் மூலம் மொழியைக் கற்கும் நவீன வழிகளைப் பெற்றோர்களும் பிள்ளைகளும் அங்குத் தெரிந்துகொள்ளலாம்.

வாழும் மொழியாகத் தேன்தமிழ்

தமிழ் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு தினேஷ், வீடுகளில் தமிழ், சீனம், மலாய் ஆகிய தாய்மொழிகளைப் பேசும் வழக்கம் சற்று குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

“தமிழை வீடுகளில் எப்போதும் வாழும் மொழியாக மாற்றுவதற்கு கண்டிப்பைக் கைவிட்டுவிட்டு சுவாரசியமான முறையில் பிள்ளைகளிடம் மொழியைக் கொண்டுசேர்க்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ் பயன்பாட்டில் இருக்கும் ஒரு மொழியாக விளங்க, நண்பர்கள், குடும்பத்தினருடன் இயல்பாகத் தமிழில் பேசக்கூடிய சூழல்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட வாழ்வில் தமிழின் பங்கு

தமது குழந்தை பருவத்தில் தமிழோடு தொடர்பில் இருக்க திரைப்படங்களும் பாடல்களும் பெரிதும் துணைபுரிந்ததாகக் கூறிய திரு தினேஷ், குறிப்பாக ‘தென்மதுரை வைகை நதி’ என்ற பாடல் தமக்கு மிக நெருக்கமான ஒன்று என்று பகிர்ந்துகொண்டார்.

உறவுகளின் ஆழத்தை வெளிப்படுத்தும் அப்பாடலின் சில வரிகளை அவர் பாடியும் காட்டினார்.

தற்போது, தம் பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் பேசினாலும், அவர்களுடன் இணைந்து தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பதையும், தமிழ் முரசு செய்தித்தாள், பாலர் முரசு பகுதியைப் படிப்பதையும் தங்களின் குடும்ப வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத்தின் கூட்டுப்பங்கு மிகவும் அவசியம் என்ற கருத்தையும் ஆழமாகப் பதிவு செய்தார் துணை அமைச்சர்.

பல்வேறு பயனுள்ள அம்சங்கள் நிறைந்துள்ள தாய்மொழிகளின் கருத்தரங்கிற்கு மக்கள் தங்கள் குடும்பத்தோடு சென்று தமிழின் புதிய பரிமாணங்களைக் கண்டறிவது சிறப்பான அனுபவமாக இருக்கும்.

துணை அமைச்சரோடு நடந்த வலையொளி உரையாடலை முழுமையாகக் கேட்க, தமிழ் முரசின் ‘இளைய தலைமுறை’ யூடியூப் தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்