வாழ்க்கைத் துணையின் மாண்பைப் போற்றிய இலக்கியப் பகிர்வு

வாழ்க்கைத் துணையின் மாண்பைப் போற்றிய இலக்கியப் பகிர்வு

2 mins read
6155f0c2-97d5-474f-871b-31a14caf1d88
இணையம்வழி பல்வேறு நாடுகளிலிருந்து அறிஞர்களும் ஆர்வலர்களும் கூடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.  - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில் படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில் 

புத்தர், காந்தி, பாரதியார், அரவிந்தர் உள்ளிட்ட ஆளுமைகளின் வாழ்க்கைத் துணைவியரைச் சிறப்பிக்கும் துடிப்புமிக்கக் கலந்துரையாடலாக ‘வாழ்வியல் இலக்கியப் பொழில் - கோடைத் தமிழ் உலா 2026’ நிகழ்ச்சி அமைந்திருந்தது.

‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பினர் இணையம்வழி அந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24)  நடத்தினர்.

‘மூப்பில்லா முதல்மொழியே’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் ‘பொழில் வாழ்த்துப் பாடல்’ ஒன்றும் இசைக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து புலவர் அ. பொன்னையன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து வந்த பொழிலின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி நோக்கவுரையில் அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும் விழாவின் நோக்கங்கள் பற்றியும் விவரித்தார்.

பின்னர், ‘அகன்ற மரம் ஆழ்ந்த வேர்’ என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் ஐந்து மகான்களின் வெற்றிக்கு உதவி புரிந்த அவர்களுடைய துணைவியரின் சிறப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

கௌதம புத்தரின் துணைவியார் யசோதரைப் பற்றி அமெரிக்காவிலிருந்து திருமதி ஜெயா மாறன், தஞ்சாவூரிலிருந்து திரு தேவ. சார்லி மேம் ஆகியோர் படைத்தனர். காந்தியடிகளின் மனைவி கஸ்தூரி பாய் பற்றி சென்னையிலிருந்து திருமதி கீதா அருண், திருச்சியிலிருந்து முனைவர் ம. தமிழ்ச்செல்வி, இலங்கையிலிருந்து முனைவர் ஜெயா உதயா ஆகியோர் படைத்தனர்.

பாரதியாரின் துணைவியார் செல்லமாளைப் பற்றி ஆஸ்திரேலியாவிலிருந்து முனைவர் சந்திரிகா சுப்ரமண்யனும் சிங்கப்பூரிலிருந்து திருமதி சி. கற்பகலட்சுமியும் பேசினர்.

அரவிந்தர் மனைவி மிருணாளினி பற்றிப் புதுச்சேரியிலிருந்து முனைவர் க.ரேவதியும் சென்னையிலிருந்து முனைவர் ந.தீபாராணியும் படைத்தனர். 

இராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியார் சாரதா தேவியின் சிறப்புகளைப் பற்றி திருச்சியிலிருந்து முனைவர் கரு.கலையரசியும் தருமபுரியிலிருந்து திருமதி இரா. காயத்ரியும் விளக்கினர்.

நிகழ்ச்சியின் கவியரங்கத்தில் 16 பேர் கவி பாடினர். ‘பருவங்கள்’ என்ற பொதுத் தலைப்பில் ஐந்து உட்தலைப்புகள் ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட மூன்று பேர் கவிபாடினர். ஆண், பெண், மலர், ஆண்டுப் பருவம், நாள் பருவம் ஆகிய தலைப்புகளிலும் கவிதைகள் வாசிக்கப்பட்டன.

நிகழ்ச்சியைப் பற்றியும் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளோர் https://www.ilakkiyapozhil.com என்ற இணையப்பக்கத்தை நாடலாம். நிகழ்ச்சியின் காணொளியின் இணைப்பு: https://www.facebook.com/share/v/1TNjtxkknZ 

குறிப்புச் சொற்கள்