தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வானில் வலம்வரும் கனவு நனவானது

3 mins read
615bb580-392d-4152-8fd1-7d1b1343d121
கடந்த எட்டாண்டுகளாக ஸ்கூட் விமான நிறுவனத்தில் விமானியாக இருக்கும் 43 வயது சரவணன் அய்யாவு. - படம்: ஸ்கூட்

சரவணன் அய்யாவு பலருக்கும் பரிச்சயமான ஒரு முகம்.

கடந்த எட்டாண்டுகளாக ஸ்கூட் விமான நிறுவனத்தில் விமானியாக இருக்கும் 43 வயது சரவணன் அய்யாவு, விமானியாக வேண்டுமென்ற அவரது கனவு நனவான பயணத்தை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.

இளம் வயது ஆர்வம்

உயர்நிலைப் பள்ளியின்போதே விமானியாக வேண்டுமென்று ஆணித்தரமாக அவர் முடிவெடுத்ததற்கு அவரின் தாயாரே காரணம். தாயார் முன்பு ‘சேட்ஸ்’ எனும் சிங்கப்பூர் விமான நிலைய முனையச் சேவைகளில் பணிபுரிந்தபோது சரவணன் அய்யாவுக்கு சென்னைக்கு செல்லவிருக்கும் விமானத்தில் விமானி அறையில் உட்கார்ந்து பயணம் மேற்கொள்ள அரிய வாய்ப்பு கிட்டியது.

“விமான நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு அப்போது இதுபோன்ற வாய்ப்புகள் இருந்தன. அந்த வாய்ப்பு இப்போது இல்லையென்றாலும் நான் இளம் வயதில் அதை அனுபவித்ததை மறக்கமாட்டேன்,” என்றார் சரவணன்.

எஸ்கியூ 747 இரட்டை அடுக்கு விமானத்தில் விமானி அறையில் பயணம் செய்தபோது மெய்மறந்து போன அவர், கேப்டன் விமானியின் குணாதிசயங்களைக் கண்டும் வியந்தார்.

பட்டம் பெற்ற பிறகு 2008ல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் விமானியாக விண்ணப்பித்தபோது உலகப் பொருளாதார நெருக்கடி காலமாக அது இருந்ததால் அவரது விண்ணப்பம் கைகூடவில்லை.

பின்னர், எதேச்சையாக ஊடக உலகத்தில் அடியெடுத்து வைத்த சரவணன், விமானியாகும் வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தார்.

“நான் ஊடகத் துறையில் சேர வேண்டும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை. எனது நாட்டம் முழுக்க முழுக்க விமானியாக வேண்டும் என்பதுதான்,” என்று சரவணன் சொன்னார்.

திருமணமும் லட்சியமும்

2015ல் ஸ்கூட் விமான நிறுவனத்தின் விமானிப் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது சரவணன் அய்யாவு அந்த வாய்ப்பை உடனே பற்றிக் கொண்டார்.

மொத்தம் இரண்டரை ஆண்டுகள் கடுமையான பயிற்சி, அதிலும் ஓராண்டுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருக்கும் ஜன்டகோட் புறநகரில் விமானிப் பயிற்சியை மேற்கொண்டார்.

“விமானிப் பயிற்சியைத் தொடங்கும்போது எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. என் மனைவி ஆகர்ஷனா எனக்குப் பக்கபலமாக இருந்தார். அவர் முன்பு விமானப் பணிப்பெண் என்பதால் அவரால் என்னை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது,’ என்று சரவணன் சொன்னார்.

குடும்பத்தை விட்டுத் தள்ளி இருந்து கடுமையான பயிற்சிகளை நன்கு கையாண்ட சரவணன் அய்யாவு, ஒவ்வொரு முறையும் தடைக்கற்களை வெற்றிகரமாக கடந்து வந்தார்.

கனவு மெய்ப்பட்டது

விமானியாகத் தமது முதல் பயணத்தை மேற்கொண்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த சரவணன், “எனது முதல் பயணம் சீனாவின் ஹார்பின் நகரம்தான். ஸ்கூட் விமானம் இப்போது அங்கு பறப்பதில்லை. பயிற்சி மேற்கொண்ட பின்னர் விமானியாகி விட்டேன் என்ற பரவசத்தில் திளைத்தபோதும் எனக்கு மறுபுறம் பதற்றமாகவும் இருந்தது. என்னை நம்பிப் பல பயணிகள் விமானத்தில் ஏறுகிறார்கள் என்ற எண்ணமே அந்த பயத்திற்குக் காரணம்,” என்று சரவணன் கூறினார்.

இதுவரை சீனா, ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, கிரீஸ், லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பறந்துள்ள சரவணன் அய்யாவு, வானில் கண்ட கண்கவர் காட்சிகள் பல.

“எரிமீன்கள், செயற்கைக்கோள் போன்றவற்றை நான் வானில் பார்த்துள்ளேன். அண்மையில் நான் இந்தியா - பாகிஸ்தான் எல்லையைக் கண்டு பிரம்மித்துப் போனேன்,” என்று நெகிழ்ந்தபடி சொன்னார் சரவணன்.

ஒரு விமானியாக வானிலை, காற்று கொந்தளிப்பு, பயணிகளைச் சமாளித்தல் போன்ற சவால்களைத் தாம் சந்தித்தாலும் சரவணன் வானில் பறக்கும்போது அவர் காணும் காட்சிகளுக்கு ஈடு எதுவும் இல்லை என்றார்.

அடுத்து பாரிஸ் நகருக்குப் பறக்க வேண்டும் என்பது அவரது ஆசை. இரு இளம் மகன்களுக்குத் தந்தையான சரவணன் அய்யாவு, இந்த ஆண்டு பணி காரணமாக தீபாவளி பண்டிகையைக் குடும்பத்தோடு கொண்டாட முடியாமல் போனது.

“விமானியாக நான் பல தியாகங்களைச் செய்துதான் ஆக வேண்டும். என்னால் எந்நேரமும் என் குடும்பத்தினரோடு இருக்க முடியாது. தொலைதூர பயணங்கள் இருந்தால் அது கடினம்தான். இருந்தாலும், இது எனக்குப் பிடித்த பணி. ஓய்வுபெறும் வரை நான் இதில் இருப்பேன். என்னை ஒரு நாள் ஊடகத்தில் நீங்கள் பார்க்க முடியாமலும் போகலாம்,” என்று புன்முறுவலுடன் சொன்னார் சரவணன் அய்யாவு.

குறிப்புச் சொற்கள்