மதரசா எனப்படும் இஸ்லாமியப் பள்ளிகளில் படித்த முஸ்லிம் அஹமது, உயர்நிலைப்பள்ளிப் பருவத்தில் விளையாட்டாகத் தமிழ் எண்களையும் எழுத்துக்களையும் கற்றார்.
வருங்காலத்தில் தமிழ்ப் பள்ளிவாசலில் சமய போதகராகப் பணியாற்றுவார் என்று அப்போது சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றார் 35 வயது திரு முஸ்லிம்.
“மதரசாப் பள்ளியில் பெரும்பாலானோர் மலாய் மாணவர்கள். எனவே, பிற இனத்தவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்புக் கிடைப்பது அரிது,” என்று திரு முஸ்லிம் கூறினார்.
முன்னதாக அல்-இர்ஷாத் அல்-இஸ்லாமியா என்ற அந்தப் பள்ளியின் தற்போதைய பெயர் இர்ஷாத் ஸுஹ்ரி அல்-இஸ்லாமியா. உற்சாகத்துடன் சமயப் பள்ளியில் கொண்டாடப்பட்ட இன நல்லிணக்க நாள் வழியாக, இந்தியப் பண்பாடு பற்றிய அறிதல் இவருக்குக் கிட்டியது.
அந்தக் கொண்டாட்டங்களுக்காக அவரது வகுப்பினர் இந்தியத் திருமணம் ஒன்றை பாவனை செய்துகாட்ட வேண்டியிருந்தது.
“வகுப்பறையை அலங்கரித்த எனக்கு, தமிழ் முரசு இதழைச் சுவரொட்டியாகப் பயன்படுத்திய நினைவு இருந்தது. தமிழ் எழுத்துருக்களின் வடிவத்தைக் கண்டு பரவசப்பட்டேன். தமிழ் மொழியைச் சிறிதளவாவது கற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அங்கிருந்து தொடங்கியது,” என்று திரு முஸ்லிம் கூறினார்.
ஒன்று முதல் பத்து வரை எண்ணி, எழுத்துருக்கள் சிலவற்றை எழுதப் பழகிக்கொண்டார். பிறகு, இருபது முதல் நூறு வரை தமிழில் எண்ணவும் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு வரை உள்ளூரில் படித்த பிறகு, இஸ்லாமிய சமய போதகராகத் தகுதி பெறுபவதற்கான பட்டயப்படிப்பை திரு முஸ்லிம் சிரியாவில் பயின்றார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது ‘ஐஐயுஎம்’ என்ற மலேசிய பல்கலைக்கழகத்தில், இஸ்லாமிய சமயக் கல்வி மரபு தொடர்பில் பட்டப்படிப்பையும் அவர் மேற்கொள்கிறார்.
அல்-மத்தாகின் பள்ளிவாசலில் பத்தாண்டுக்கு மேல் பணியாற்றிய திரு முஸ்லிம் இவ்வாண்டு ஜனவரி அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் சேர்ந்துள்ளார்.
இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் அரவணைப்புடன் அறிவையும் பெற்று வருவதாகக் கூறினார்.
“இஸ்லாத்திற்குள் இருக்கும் வெவ்வேறு சமூகங்களுக்குள் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நுணுகி ஆய்ந்து சுவைப்பவன் நான். அத்துடன், பிறருடன் பழக எனக்குப் பிடிக்கும் என்பதால் தகவல் பரிமாற்றத்திற்கான வாய்ப்புகள் எனக்கு எளிதில் கிடைக்கின்றன,” என்றார்.
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் பணியாற்றத் தொடங்கிய பிறகு மேலும் பல தமிழ் வார்த்தைகளை அவர் கற்றுக்கொண்டார்.
தமிழில் பேசும்போது பள்ளிவாசல் வருகையாளர்கள் திகைப்பதாகத் திரு முஸ்லிம் மகிழ்ச்சியோடு கூறுகிறார். பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடைகளிலும் தமிழ்ப் புழங்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.
“‘எலுமிச்சை’ என்ற தமிழ்ச் சொல்லை எப்படி நினைவில் கொள்வது என்று கடைக்காரர் ஒருவர் எனக்குக் கற்றுத்தந்தார். எலி, மிச்சம் என்ற இரண்டு வார்த்தைகளை ஒன்றாகச் சேர்த்துச் சொல்லும்போது எலுமிச்சம்பழம் ஆகிறது,” என்று நகைச்சுவையுடன் அவர் கூறினார்.
வெட்கப்படாமல் கற்றுக்கொள்ளும்போது கற்பது எளிதாகலாம் என்பது திரு முஸ்லிமின் கருத்து.
இளையர்களிடையே தமிழ் அருகி வருவதுபோல உணர்வதாகக் கூறும் அவர், தமிழை ஆர்வத்துடன் மேலும் கற்று இம்மொழிக்குத் தொடர்ந்து உயிரூட்டும்படி இளையர்களை ஊக்குவிக்கிறார்.

