தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையர்களுக்கு வாய்ப்பளிக்கும் புரிந்துணர்வுக் குறிப்பு

2 mins read
443b0d0b-ecf5-4577-bb90-7a975c215565
விழாவைச் சிறப்பித்த முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராகிமுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. - படம்: விஷ்ருதா நந்தகுமார்
‘இம்ப்ரோஃப்’ (IMPROF) எனப்படும் இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கமும் எஸ் பி சமண உலகளாவிய நிர்வாகப் பள்ளியும் இணைந்து கையொப்பமிடும் புரிந்துணர்வுக் குறிப்பு.
‘இம்ப்ரோஃப்’ (IMPROF) எனப்படும் இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கமும் எஸ் பி சமண உலகளாவிய நிர்வாகப் பள்ளியும் இணைந்து கையொப்பமிடும் புரிந்துணர்வுக் குறிப்பு. - படம்: விஷ்ருதா நந்தகுமார்
 டாக்டர் ஃபைஷாலோடு ‘இம்ப்ரோஃப்’ ஏற்பாடு செய்த ‘சாய் சாட்’ (Chai Chat) அமர்வில் கலந்துகொண்ட வருகையாளர்கள்.
 டாக்டர் ஃபைஷாலோடு ‘இம்ப்ரோஃப்’ ஏற்பாடு செய்த ‘சாய் சாட்’ (Chai Chat) அமர்வில் கலந்துகொண்ட வருகையாளர்கள். - படம்: விஷ்ருதா நந்தகுமார்

‘இம்ப்ரோஃப்’ (IMPROF) எனப்படும் இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கமும் எஸ் பி சமண உலகளாவிய நிர்வாகப் பள்ளியும் இணைந்து ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.

நிர்வாகக் கல்வி, கூட்டு முயற்சிகளின் மூலம் தலைமைத்துவ மேம்பாட்டையும் சமூகத் தாக்கத்தையும் விரிவுபடுத்தும் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி இந்தப் பங்காளித்துவம் நிறுவப்பட்டுள்ளது.

எஸ் பி சமண உலகளாவிய நிர்வாகப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடந்த இந்த நிகழ்வில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராகிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

வர்த்தகக் கல்வியில் கையாளப்படும் புத்தாக்கத்திற்குப் பெயர்போன எஸ் பி சமண உலகளாவிய நிர்வாகப் பள்ளியோடு ‘இம்ப்ரோஃப்’ கையெழுத்திட்ட இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு, சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விழைகிறது.

பட்டதாரிகளை உருவாக்குவதை தாண்டி, வணிக நிர்வாகத்தில் மேற்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் குறைவான கட்டணத்தில் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது இந்த ஒப்பந்தம்.

இதன்மூலம், தங்கள் வாழ்க்கை தொழிலில் நடுத்தர காலகட்டத்தில் இருக்கும் இளையர்களை ஊக்குவிக்க இந்த உடன்பாடு முனைகிறது.

அதோடு, வளங்களைப் பகிர்தல், கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எஸ் பி சமண பள்ளியை உபயோகித்தல் எனப் பல ஒப்பந்தங்களும் இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பில் அடங்கும்.

தலைவர்களுக்கும் சமூகக் குரல்களுக்கும் இடையே நேர்மையான உரையாடல்களை வளர்க்கும் விதத்தில், ‘இம்ப்ரோஃப்’ ஏற்பாடு செய்த ‘சாய் சாட்’ (Chai Chat) என்ற அமர்வில் வருகையாளர்களோடு சிறப்பு விருந்தினர் டாக்டர் ஃபைஷால் கலந்துரையாடினார்.

சிங்கப்பூரின் வளர்ச்சியில் இந்திய முஸ்லிம்களின் பங்கைக் கோடிட்டுக் காட்டிய அவர், கல்வி, வேலை வாய்ப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி, உலகின் நிச்சயமற்ற சூழல் என எழுப்பப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இளையர்களின் வளர்ச்சியில் பொறுமை போன்ற பண்புநலன்களின் முக்கியத்துவத்தையும் டாக்டர் ஃபைஷால் வலியுறுத்தினார்.

டாக்டர் ஃபைஷால் தொடர்ந்து அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தின் முக்கியத்துவத்தையும் சமூகப் பங்காளித்துவத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறார்.

அதற்கு ஏற்றவாறு, தொலைநோக்குப் பார்வையோடு கொள்கை, கல்வி, சமூகம் சங்கமித்து, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என்ற இந்த ஒன்றுகூடலின் நோக்கமும் அமைந்திருந்தது.

நம் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் அனைவருக்கும் உதவுவதே இந்தப் பங்காளித்துவத்தின் குறிக்கோள் என்றார் ‘இம்ப்ரோஃப்’ அமைப்பின் நிறுவனர் ராஜ் முகம்மது.

“எவ்வாறு மாறிவரும் காலச் சூழல்களுக்கு ஏற்றவாறு தொடர்ந்து சமூகத்திற்கு ஏற்ற நற்செயல்களை செய்து ஓர் ஆக்ககரமான தாக்கத்தை உண்டாக்கலாம் என்று இளையர்கள் தெரிந்துகொள்ள அமைச்சருடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் உதவும்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்