மனநலனைச் சுட்டெரிக்கும் மனக்கவலை எனும் தீப்பொறி

மனத் துயர் நிழலா? மறுக்கப்படும் நிஜமா?

மனநலனைச் சுட்டெரிக்கும் மனக்கவலை எனும் தீப்பொறி

5 mins read
73827284-14fe-4040-9f16-f46807c70235
மனநலனே முழுநலம் என்ற முழக்கம் இதுவரை இல்லாத அளவாக இளம் தலைமுறையினர் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. - படம்: செயற்கை நுண்ணறிவு
multi-img1 of 2

இதுவரை உலகம் கண்டிராத பரபரப்பான சூழலில் பிறந்து வளர்ந்த இளையர்கள் ‘ஸி’ தலைமுறையினர் என்றால் அது மிகையாகாது.

மனிதர்களுடன் போட்டி என்ற காலம்கடந்து, மெய்நிகர் உலகில் செயற்கை நுண்ணறிவையும் சமாளிக்கும் ‘ஸி’ தலைமுறையினர் பெரிதும் அக்கறைகொள்ளும் ஒரு விஷயம் ‘மனநலன்’.

ஆரோக்கியமான மனம், அழகான சமுதாயத்தின் அடித்தளம்

மனநலனே முழுநலம் என்ற முழக்கம் தற்போது பரவலாக எழுவதைக் கேட்க முடிகிறது. வெவ்வேறு தலைமுறையினர் இதைப் பற்றி வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

முன்னோர்களைப் பொறுத்தமட்டில், உடல்நலத்துடன் வாழ்வதே மனநலனுக்கு கைகொடுப்பதாகக் கருதினர்.

அவர்களுக்குப் பின் வந்த ‘மில்லெனியல்ஸ்’ எனப்படும் புத்தாயிரத் தலைமுறையினருக்கு பொருளியல் நிலையை மேம்படுத்தும் பயணம், மகிழ்ச்சியின் குறியீடாக இருந்தது.

ஆனால் இன்றைய ‘ஸி’ தலைமுறையினருக்கு மனநலனை அள்ளித் தரும் ஆனந்தம் என்பது, பணமும் பதவியும் பெறுவது அன்று. மன நிம்மதி மட்டுமே, என்று கணிசமானோர் தமிழ் முரசிடம் கூறினர்.

மனநலத்திற்கு என்ன மதிப்பு?

ஆற்றாமையால் எழும் முரண்பட்ட சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கு முக்கியக் காரணம் என்றார் மகாலிங்கம் சக்திவேல், 60.

‘‘அக்காலத்தில் மனக்குமுறல்கள் குறைவு என்பது என் கருத்து. இன்று இகழ்ந்து பேசும் போக்கு அதிகரித்துவிட்டதால், அவை உறவுகளை முறிக்கின்றன. மனநலத்தையும் பாதிக்கிறது,” என்றார் தொழில்முனைவரான திரு சக்திவேல்.

இதற்கிடையே, ‘ஸி’ தலைமுறையினரின் பெற்றோர் கூறும் கருத்து வேறாக இருந்தது.

பெற்றோரை நாடாமல் மற்றொருவரை நாடும் போக்கு

தாங்கள் வளர்ந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், போட்டித்தன்மையைக் காட்டிலும் அவர்களின் பிள்ளைகள் கூடுதலான சவால்களை மேற்கொள்கின்றனர் என்பதைப் பெரும்பாலானோர் மறுக்கவில்லை.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் முன்பு தான் வளர்ந்த சூழலை நினைவுகூர்ந்தார் பெற்றோரான கனிமொழி, 48.

‘‘என் உலகம் சிறியது. இதனால் அப்போது, எந்தப் பிரச்சினை என்றாலும் என் பெற்றோரே எனக்குத் துணைநின்றனர். அதனால் எங்களுக்குப் பெரிதும் மனத்தளவில் துயரம் இருந்தது இல்லை.

‘‘என் பிள்ளைகளோ என்னை அணுக மறுத்து வேறொருவரை நாடிச் செல்கின்றனர். இதுவே அவர்களின் மனநலப் பாதிப்புக்கு முதல் காரணம்,” என்று கூறினார் திருமதி கனிமொழி.

மறுபுறம், பெற்றோரிடம் ஏன் கூறத் தோன்றுவதில்லை என்ற காரணத்தை விவரித்தார் அவரது மகன் ஜெயஷாந்தன், 21.

‘‘என் பெற்றோர் என் சவால்கள் அனைத்திற்கும் தீர்வு கொடுக்க முடியும் என்று நான் நம்பலாம். ஆனால் அது அவர்களுக்கு மட்டுமே மனநிறைவைக் கொடுக்கும்,’’ என்றார் அவர்.

‘‘நான் தனிமையாக உணர்கிறேன் என்று கூறினால், என் தனிமையின் ஆழம் பெற்றோருக்குப் புரியாமல் போகலாம். தங்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து, என் துன்பத்தைத் தட்டிக்கழிக்கலாம்,’’ என்று தம் தயக்கத்திற்கான காரணத்தை விவரித்தார் ஜெயஷாந்தன்.

வல்லுநர் கருத்து: மனநலத்தைக் களவாடும் காரணங்கள்

மனநலன் குறித்து பல்வேறு தலைமுறையினருக்கிடையே உள்ள இந்த இடைவெளி, அளிக்கப்படும் முக்கியத்துவம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தார், இணைப் பேராசிரியரும் மனநலக் கழகத்தின் மருத்துவ வாரிய (ஆய்வு) உதவித் தலைவருமான மைதிலி சுப்ரமணியம்.

“மனநலச் சவால்கள் தெள்ளத்தெளிவானவை அல்ல. மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றாலே அவர் சமுதாயத்தில் சாதாரணமாக இணைய முடியாது என்ற மனப்பான்மை, மனநலம் குறித்த தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் மருத்துவர் மைதிலி.

இதனால்தான் தன் பிள்ளையின் மனக்கஷ்டங்களையும் பெற்றோர்கள் புறக்கணித்து, பின்னடைவையும் சந்திக்க நேர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அன்று அமைதியே ஆயுதம்! இன்று அங்கீகாரமே அடையாளம்!

‘‘முன்னோடித் தலைமுறை அமைதியை ஆயுதமாய்க் கருதியது. அதற்கு மாறாக, தற்போதைய தலைமுறை அங்கீகாரத்தைத் தேடுகிறது. மனநலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள புறக்கணிப்புகளை வேரோடு பிடுங்கி எறியும் தலையாய பொறுப்பையும் இந்தத் தலைமுறை சுமக்கிறது,’’ என்றார் மருத்துவர்.

புவிசார் பதற்றத்தில் உள்ள உலகில் இரு நாட்டிற்கு இடையில் நடப்பது மட்டுமா போர்? பணம், பதவி, பதக்கம், புகழ் என்பவற்றைப் பெற இவர்கள் பிறருடன் இடும் போட்டியும் போர்தான். விலைவாசி உயர்வைச் சமாளிப்பது முதல், நாளைய உலகம் இருக்குமா என்ற பதற்றம் மிகுந்த எண்ணங்களை முறியடித்து இன்பம் காண்பது வரை அனைத்தும் பூசல் மிகுந்தவையாக இளைய தலைமுறையினருக்குத் தெரிகிறது.

அவ்வகையில், ‘‘பெற்றோரின் அக்கால அனுபவங்கள் இன்றைய பிள்ளைகளின் அனுபவத்திலிருந்து வேறுபடுகிறது. இதனால், இளம் தலைமுறையினரின் மனநிலையை முழுமையாகப் புரிந்துகொள்ள மூத்தோருக்கு அவை வழிகாட்டியாக இருக்க முடியாது,’’ என்றார் இணைப் பேராசிரியர் மைதிலி.

இளையர்களை வாட்டும் தகவல் சுமை

இளையர்களின் மனநலனுக்கு உலை வைக்கும் மற்றொரு முக்கிய வரவு, சமூக ஊடகமாகும். இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் வழியாக ஒவ்வொரு நிமிடமும் வந்து குவியும் தகவல்கள், இளையர்களுக்கு ஒருவித மனவேதனையையும் மிகுந்த மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றன. பழைய தலைமுறையினர் எதிர்கொண்டதை விட இது முற்றிலும் மாறுபட்ட தகவல் சுமையாகும் என்றார் இணைப் பேராசிரியர் மைதிலி.

தொழிநுட்ப உலகம் கண்டுள்ள அசுர வளர்ச்சியால் உலக நிகழ்வுகளும் எதிர்காலம் குறித்த தேவையற்ற பயமும் எதிர்மறையான எண்ணங்களும் இன்றைய உலகில் அதிகம் காணப்படுகின்றன.

எனினும், சமூக ஊடகங்கள் இந்தப் பதற்றங்கள் நிலவ முதன்மை காரணமாக இருந்தாலும், அவை மன ஆறுதலையும் கொடுக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை என்று இணைப் பேராசிரியர் மைதிலி தொடர்ந்து பேசினார்.

மனநலச் சவால்களை இழிவாகக் காணும் சமுதாயத்தில், அதைப் பற்றிய கலந்துரையாடல்கள் சமூக ஊடகங்களில் வெளிப்படையாக நடைபெறுகின்றன. பெரும்பாலான நேரங்களில், இந்த ஆறுதல் பிள்ளைகளுக்குப் பெற்றோரிடமிருந்து கிடைப்பதில்லை.

“இளையர்களின் இந்த மனப்போராட்டங்களைப் புரிந்துகொள்ளாமல், பெற்றோர் அவர்களின் இடர்களை அணுகுவது, முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிப்பது, அல்லது தவறான அறிவுரை வழங்குவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகாது,” என்று கருத்துரைத்தார் இணைப் பேராசிரியர் மைதிலி.

முரண்பட்ட நம் உலகில் மனநலம் பற்றிய மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். மனநலம் என்பது ஏதோ ஒரு தலைமுறைக்கு மட்டும் உரித்தான சவாலன்று; அது மனிதகுல வரலாற்றோடு பிணைந்தது.

“வெறுமனே பேசிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால், மன அழுத்தம் என்பது சாதாரண உரையாடல்களுக்கு அப்பாற்பட்டது,” என்றார் இணைப் பேராசிரியர் மைதிலி.

பெற்றோர் தங்கள் காலத்து அனுபவங்களை மட்டும் வைத்து இன்றைய இளையர்களை அளவிடுவதை நிறுத்திவிட்டு, எல்லா சூழலிலும் அவர்களை ஆதரிக்கும் அரணாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் இணைப் பேராசிரியர் மைதிலி.

மனநலம் குறித்த விழிப்புணர்வு என்பது நாகரிக வளர்ச்சி மட்டுமன்று; அது எதிர்கால சந்ததியைக் காக்கும் ஒரு பேராயுதம்.

“ஆரோக்கியமான மனம், அழகான சமுதாயத்தின் அடித்தளம்” என்பதை உணர்ந்து, ஒருவரை ஒருவர் குறை கூறாமல், ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதே இன்றைய காலத்தின் கட்டாயம். அதுவே ‘ஸி’ தலைமுறையினரின் எதிர்பார்ப்பும்.

குறிப்புச் சொற்கள்