நா. ஆண்டியப்பனுக்குத் ‘தந்தையர் திலகம்’ விருது

தாரகை முத்தமிழ் கழகத்தின் 6ஆம் ஆண்டு தந்தையர் தின விழா

நா. ஆண்டியப்பனுக்குத் ‘தந்தையர் திலகம்’ விருது

2 mins read
2ca2215e-2581-4396-9bd9-a5af821eba94
பழம்பெரும் செய்தி ஊடகவியலாளரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவருமான நா. ஆண்டியப்பனுக்குத் (இடமிருந்து நான்காமவர்)  ‘தந்தையர் திலகம்’ விருது வழங்கப்பட்டது. - படம்: தாரகை முத்தமிழ்க் கழகம்

சமூகத்திற்கும் தமிழுக்கும் குடும்பத்திற்கும் சிறந்த பங்காற்றும் தந்தையரைப் போற்றும் வகையில் வழங்கப்படும் ‘தந்தையர் திலகம்’ விருது, இந்த ஆண்டு பழம்பெரும் செய்தி ஆசிரியரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவருமான நா. ஆண்டியப்பனுக்கு வழங்கப்பட்டது.

தாரகை முத்தமிழ்க் கழகத்தின் சார்பில் 6ஆம் ஆண்டாகத் தந்தையர் தின விழாவிற்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ‘சிராங்கூன் டைம்ஸ்’ முதன்மை ஆசிரியர் ஷாநவாசும் சிறப்பு அழைப்பாளராக முனைவர் தமிழ்ப்பரிதி மாரியும் கலந்துகொண்டனர்.

முனைவர் மாரி 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய ‘தமிழ்ப்பேழை’ எனும் அகராதிகளை ஒருங்கிணைக்கும் இணையத்தளத்தின் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.

குறிப்பிட்ட ஒரு சொல் இலக்கியத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் இந்த அகராதி விளக்குவது அனைவரையும் கவர்ந்தது.

திரு ஷாநவாஸ், “பேச்சு காற்றோடு போய்விடும், எழுத்துதான் வரலாறு பேசும்,” என்று கூறி மாணவர்களை எழுத்துத் துறையில் ஈடுபட ஊக்குவித்தார்.

பின்னர், ‘சரித்திரம் படைத்த சாமானியர்கள்’ என்ற தலைப்பில் இளையர்கள் உரையாற்றிய அங்கமும் அமைந்தது.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கத்தின் இளையர் பிரிவுத் தலைவர் ஜாபிர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ குறித்தும் தமிழா இளையர் அமைப்பின் தலைவி சனா சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசுப் இஷாக் குறித்தும் சிங்கப்பூர் இளையர் மன்றத்தைச் சேர்ந்த பிரணவன் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் குறித்தும் வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்தனர்.

சிறப்பிக்கப்பட்ட சாதனையாளர்

முனைவர் சுப. திண்ணப்பன், திரு ஆண்டியப்பனுக்கு விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

“குடும்பத் தந்தையரை மட்டுமன்றி, தேசத் தந்தையரையும் இளையர்களைக் கொண்டு நினைவுகூர்ந்த இந்த விழா மிகவும் தனித்துவமானது,” என்று அவர் குறிப்பிட்டார்.

திரு ஆண்டியப்பனின் குடும்பப் பின்னணியை நினைவுகூர்ந்த முனைவர் திண்ணப்பன், சிறந்த தந்தையின் அடையாளம் அவரது பிள்ளைகள்தான் என்றார். பல ஆண்டுகளுக்குமுன் மலேசியாவில் திரு ஆண்டியப்பனின் தந்தை திரு நாராயணனைச் சந்தித்ததையும் அவர் தம் மகனைக் குறித்து பெருமிதம் கொண்டிருந்ததையும் முனைவர் திண்ணப்பன் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமானது திரு ஆண்டியப்பன் பெற்றெடுத்த குழந்தை. அந்தக் குழந்தையைக் கடந்த 14 ஆண்டுகளாகக் கண்ணும் கருத்துமாகத் தந்தையாகப் பேணி வளர்த்துள்ளார்,” என்று அவர் பாராட்டினார்.

கைகொடுத்த குடும்பம்

‘தந்தையர் திலகம்’ விருதினைத் தமது ஆசான் முனைவர் சுப. திண்ணப்பன் கைகளால் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் திரு ஆண்டியப்பன் தெரிவித்தார்.

தமது ஏற்புரையில் அவர், தம் மனைவியின் உறுதுணையின்றி இந்த விருது சாத்தியமில்லை என்றும் தம்மைவிடத் தம் மனைவியே இதற்கு முழுத் தகுதியானவர் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுப் பிள்ளைகளைச் சிறப்பாக வளர்த்தெடுத்த தம் மனைவிக்கு இந்த விருதினைச் சமர்ப்பிப்பதாக அவர் கூறினார்.

விழாவில் வரலாற்று நாயகர்கள் பற்றிய உரையைப் பாராட்டிய அவர், இன்று தமது பேரப்பிள்ளைகள் வரை குடும்பம் ஒற்றுமையாக இருப்பதற்குக் காரணமான தம் மனைவி இவ்விழாவில் கலந்துகொள்ள இயலாத குறையையும் நினைவுகூர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்