நாகூர் தர்கா கந்தூரி: சிங்கப்பூரிலிருந்து புனிதக் கொடி அனுப்பிவைப்பு

நாகூர் தர்கா கந்தூரி: சிங்கப்பூரிலிருந்து புனிதக் கொடி அனுப்பிவைப்பு

படம்: தமிழ் முஸ்லிம் ஜமாஅத்

06 Nov 2026 - 6:03 am

1 mins read

இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் ஆன்மிக அடையாளமாகத் திகழும் நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு, பெரிய மினராவில் ஏற்றப்படும் புனிதக் கொடி கடந்த 400 ஆண்டுகளாகச் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்டு ஏற்றுவது வரலாற்றுச் சிறப்புமிக்க மரபாகத் தொடர்கிறது.

சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாட்டில், புனிதக் கொடி அனுப்பும் விழா அக்டோபர் 31ஆம் தேதி சுல்தான் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில், திருக்குர்ஆன், மௌலூது ஷரீஃப் ஓதப்பட்டு கொடி அனுப்பிவைக்கப்பட்டது

பா’அல்வி பள்ளிவாசல் இமாம் ஷேக் ஹபீப் செய்யது ஹசன், நாகூர் சங்க ஆலிம் என்.ஷாஹ்ஜாத் புகாரி, தோப்புத்துறை ஆலிம் எஸ்.ஷேக் அலி பாகவி ஆகியோரின் சொற்பொழிவும் நாகூர் காதர் மொய்தீன், ரபீக் பைஜி இருவரின் இஸ்லாமிய பாடல்களும் இடம்பெற்றன.

நாகூர் தர்காவின் பெரிய மினாராவில் கொடி ஏற்றப்படும்.
நாகூர் தர்காவின் பெரிய மினாராவில் கொடி ஏற்றப்படும். - படம்: தமிழ் முஸ்லிம் ஜமாஅத்

புனிதக் கொடி, சிங்கப்பூரிலிருந்து நாகப்பட்டினத்துக்குக் கொண்டுசெல்லப்படும். அங்கிருந்து நவம்பர் 10ஆம் தேதி நாகூர் கந்தூரி விழாவில் ‘டீஸ்டா கப்பல்’ மூலம் ஊர்வலமாக நாகூருக்குக் கொண்டு செல்லப்படும். அன்றிரவு தர்காவின் பெரிய மினாராவில் கொடி ஏற்றப்படும்.

“இது சிங்கப்பூருக்குக் கிடைத்த பாக்கியம். இடையில், பல ஆண்டுகள் இங்கிருந்து கொடி செல்வது தடைபட்டது. ஒரு வரலாற்று நிகழ்வை மறக்கக்கூடாது என்ற நோக்கில், சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் முன்னெடுத்து கடந்த 12 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம்,” என்றார் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் ஹாஜி கபீர் மரைக்காயர்.

குறிப்புச் சொற்கள்