லிட்டில் இந்தியாவைப் பற்றியும் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் பற்றியும் மேலும் அறிய விரும்புவோர் இப்போது புதிதாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தை நாடலாம்.
‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்தியச் சமுதாயமும்’ (Little India and the Singapore Indian Community: Through the Ages) எனும் தலைப்பிலான இந்த 187 பக்க ஆங்கிலப் புத்தகம், ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் சௌந்திரநாயகி வயிரவனின் ஒன்பதாவது புத்தகமான இது, 1822ஆம் ஆண்டு முதல் இன்று வரை சிராங்கூன் சாலையின் வளர்ச்சிப் பயணத்தையும் வரலாற்றையும் பதிவுசெய்து, லிட்டில் இந்தியா எப்படியொரு முக்கியக் கலாசார மையமாக உருவெடுத்தது என்பதை விரிவாக விளக்குகிறது.
ஆரம்பகால வர்த்தகங்கள், கடைவீடுகளின் தனித்துவமான கட்டடக்கலை, தெருப் பெயர்களின் தோற்றம், இரு நூற்றாண்டுகளாக லிட்டில் இந்தியாவின் வளர்ச்சி போன்றவற்றை இந்த நூல் ஆராய்கிறது.
இத்துடன், சமூக வாழ்க்கை, திருவிழாக்கள், கலாசார நிலையங்கள், கோயில்கள், சுற்றுலாத்துறை, உள்ளூர் வர்த்தகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற பல அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது இந்தப் புத்தகம்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தின் தனித்துவத்தைப் பராமரித்து மேலாண்மை செய்வதில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) வகிக்கும் பங்கையும் இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.
திருமதி சௌந்திரநாயகி இந்தப் புத்தகத்தை எழுதும் பணியை 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கியதாகக் கூறினார்.
“லிட்டில் இந்தியா பற்றி நான் கேள்விப்பட்டவை, படித்தவை அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்ய அதிகபட்ச முயற்சி எடுத்துள்ளேன்,” என்று கூறிய அவர், சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்திற்கான தனது பங்களிப்பு இது என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
லிஷாவின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25), தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘த பாட்’ அரங்கில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலேயும் சமூகத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாரம்பரியக் கும்மி நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
“சிங்கப்பூர் என்றால் என்ன? சிங்கப்பூருக்குத் தனிப் பொருள் எதுவும் இல்லை. நாம் வாழும் கட்டமைப்பின் தொடர்பில்தான் அதன் பொருள் உள்ளது,” என்று திரு இயோ தமது உரையில் கூறினார்.
“சிங்கப்பூர் சிறியதாக இருக்கலாம். ஆனால் அது நுட்பமாக வரையப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திரு இயோவுக்கும் சமூகப் பங்காளிகளுக்கும் பிற ஆதரவாளர்களுக்கும் நினைவுப் பரிசாக இந்தப் புத்தகம் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
“தலைமுறைகளுக்கிடையிலான பாலமாக இந்தப் புத்தகம் செயல்படுகிறது. சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான முயற்சி இது,” என்று லிஷாவின் பொது மேலாளர் அப்துல் ரவூஃப் குறிப்பிட்டார்.