தமிழ்மொழியின் வேர்களை ஆழ ஊன்றும் புதிய முயற்சி

தமிழ்மொழியின் வேர்களை ஆழ ஊன்றும் புதிய முயற்சி

3 mins read
6939d459-08d2-477c-83dd-a274f2e0106c
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதல் ‘பெற்றோருக்குரிய தினம்’. - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்
multi-img1 of 2

சிங்கப்பூரில் அண்மையில் வித்தியாசமான போட்டி ஒன்று அரங்கேறியது. அதில், பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து சமையலில் ஈடுபடும் வேளையில் தமிழில் உரையாடிக்கொண்டே அந்நடவடிக்கையில் ஈடுபட்டால் பத்துப் புள்ளிகள் கொடுக்கப்பட்டது.

தமிழ் வகுப்பறைகளுக்கு அப்பால் அன்றாட வாழ்க்கையில் மாணவர்களிடையே மொழியின் புழக்கத்தை ஆதரிக்கும் நோக்கத்தில் இந்தச் சமையல் போட்டி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

தாய்மொழியை அன்றாட வாழ்க்கையோடு இணைத்து, வாழும் மொழியாகத் தக்கவைக்க என்ன செய்யலாம் என்பதற்கான ஒரு தொடக்க முயற்சியில் இறங்கியுள்ளது நிலையம்.

வாழும் மொழியாகத் தமிழ்மொழியை நிலைநிறுத்தச் சமூகம் ஒன்றுகூடி இழுக்கும் தேர் நேர்த்தியாய் நகர்ந்துகொண்டிருக்கிறது. 

பல்லின, பன்மொழி பேசும் மக்கள் வாழும் சிங்கப்பூரில் அனைவருடனும் எளிதாகத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு ஆங்கிலம் ஒரு பாலமாக அமைகிறது.

இருப்பினும், இதன் காரணமாக நமது தாய்மொழியான தமிழ்மொழியின் புழக்கம் குறைந்துவிடக்கூடாது. 

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஏற்பாட்டில் ‘பெற்றோருக்குரிய தினம்’, சனிக்கிழமை (பிப்ரவரி 7) காலை 9 மணியளவில் தொடங்கி நண்பகல் 12 மணிவரை நடைபெற்றது.

தமிழ்மொழிக் கற்றல், வளர்ச்சி ஆகியவற்றில் ஆசிரியர்களைவிட பெற்றோர்க்கே அதிகப் பங்குண்டு என்பதையும் இந்தப் பருவம்தான் மொழி ஆர்வத்தை விதைப்பதற்கு உகந்தது என்பதையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வலியுறுத்த விரும்புகிறார் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன். 

“அன்றாடம் தமிழ்மொழியைப் பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்த சில எளிய உத்திமுறைகளைப் பெற்றோர் அறிந்துகொள்வர். நூலை மட்டும் வாசிப்பதற்குப் பதிலாகக் கதையைச் சுவைபடச் சொல்லி, பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கலாம். அதற்காகக் கதை சொல்லும் அங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்,” என்றார் திருவாட்டி சாந்தி. 

“சிந்திக்கும் ஆற்றலையும் கேள்வி ஞானத்தையும் தூண்டும் உத்திமுறைகளைக் கடைப்பிடித்து, பெற்றோர் பிள்ளைகளின் தமிழ் ஆர்வத்தைத் தூண்டலாம். இந்த நடவடிக்கை ஓர் உந்துகோலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்பாடு செய்திருக்கிறோம்,” என்றார் அவர். 

சமையல் போட்டி, தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் ‘கதை கேட்போம்; கதை செல்வோம்’, மீடியாகார்ப் ஒலி 968 வானொலி நிலையத்தின் படைப்பாளர் அங்கம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்துடன், பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியின் மீது ஈடுபாட்டை வளர்த்தல், பதின்ம வயதுப் பிள்ளைகளின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டுதல் போன்ற பெற்றோர்க்கான பயிலரங்குகளும் நடைபெற்றன. 

புத்தகக் கண்காட்சியில், ‘தி ஏபிசிஸ் ஆஃப் தமிழ் ஃபார் கிட்ஸ்’ (ABCs of Tamil for Kids), கிரிம்சன் எர்த் (Crimson Earth) ஆகிய நிறுவனங்களின் தமிழ்ப் புத்தகங்கள் விற்பனைக்கு இடம்பெற்றிருந்தன. 

நிகழ்ச்சியின் ஓர் அங்கமான புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற ‘தி ஏபிசிஸ் ஆஃப் தமிழ் ஃபார் கிட்ஸ்’இன் (ABCs of Tamil for Kids) குழந்தைகளுக்கான நூல்கள்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமான புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற ‘தி ஏபிசிஸ் ஆஃப் தமிழ் ஃபார் கிட்ஸ்’இன் (ABCs of Tamil for Kids) குழந்தைகளுக்கான நூல்கள். - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்
நிகழ்ச்சியின் ஓர் அங்கமான புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற ‘தி ஏபிசிஸ் ஆஃப் தமிழ் ஃபார் கிட்ஸ்’இன் (ABCs of Tamil for Kids) குழந்தைகளுக்கான நூல்கள்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமான புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற ‘தி ஏபிசிஸ் ஆஃப் தமிழ் ஃபார் கிட்ஸ்’இன் (ABCs of Tamil for Kids) குழந்தைகளுக்கான நூல்கள். - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

இலக்கியப் பாடம், இந்திய நிகழ்த்துகலை வகுப்புகள், தேசியத் தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டம் ஆகியவற்றைப் பெற்றோரிடம் கொண்டுசேர்க்கத் தற்காலிகக் கூடங்கள் நிறுவப்பட்டிருந்தன.

இலக்கியப் பாடம், இந்திய நிகழ்த்துகலை வகுப்புகள், தேசியத் தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டம் ஆகியவற்றைப் பெற்றோரிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் தற்காலிகக் கூடங்கள் நிறுவப்பட்டிருந்தன.
இலக்கியப் பாடம், இந்திய நிகழ்த்துகலை வகுப்புகள், தேசியத் தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டம் ஆகியவற்றைப் பெற்றோரிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் தற்காலிகக் கூடங்கள் நிறுவப்பட்டிருந்தன. - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது எனக் கருத்துரைத்த பெற்றோர் பலரில் ஒருவர் திருமதி விமலேஸ்வரி சிவனேசன். 

தாயார் விமலேஸ்வரி சிவனேசனுடன் தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஷனாயா செல்வகுமார், 7.
தாயார் விமலேஸ்வரி சிவனேசனுடன் தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஷனாயா செல்வகுமார், 7. - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

“வீட்டில் ஆங்கிலப் புழக்கம் அதிகம் என்பதால் வாய்மொழித் தேர்வு என் மகளுக்குச் சிரமமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் என் மகளுக்குத் தமிழில் பேச இன்னும் ஊக்கம் பிறந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவரை இங்குள்ள தமிழ் வகுப்புகளில் சேர்க்க எண்ணுகிறேன்,” என்றார் திருமதி விமலேஸ்வரி.

தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியில் பயிலும் அவரது 7 வயது மகள் ஷனாயா செல்வகுமார், “நான் அம்மாவுடன் சாலட்(salad) செய்தேன். தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் எனது மொழித்திறனை வளர்க்க ஆசை பிறந்துள்ளது,” என்று மழலைக் குரலில் குறிப்பிட்டார்.

பங்கேற்பாளர் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் இல்லாவிட்டாலும் இது தொடக்க முயற்சி என்பதால், இந்நிகழ்ச்சியை மதிப்பீடு செய்து, அடுத்தமுறை மேலும் அதிகமான பெற்றோரைச் சென்றடையத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார் திருவாட்டி சாந்தி.

தமது மகளின் மறைந்திருந்த திறமைகளைக் கண்டறியும் நோக்கத்தில் நிகழ்ச்சியில் சேர்ந்த திருமதி ரேவதி மோகன், தங்களுக்கு இது ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தது என்றார். 

தாயார் ரேவதி மோகனுடன் ஃபர்ன்கிரீன் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 10 வயது அதீனா இலக்கியா முக்தி.
தாயார் ரேவதி மோகனுடன் ஃபர்ன்கிரீன் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 10 வயது அதீனா இலக்கியா முக்தி. - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

“பொதுவாகப் பேரங்காடிகளுக்குச் செல்லும்போது, ஆங்கிலத்தில்தான் பேசுவோம். இந்தச் சமையல் போட்டியில் இடம்பெற்ற பல காய்கறிகளைத் தமிழில் எப்படிச் சொல்வது எனக் கற்றுக்கொள்ளவும் என் மகளுக்குக் கற்றுக்கொடுக்கவும் வாய்ப்பு கிடைத்தது,” என்றார் திருமதி ரேவதி மோகன்.

சமையல் போட்டியில் கலந்துகொண்ட திருமதி ரேவதி மோகன், ஃபர்ன்கிரீன் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த அவரது மகள் அதீனா இலக்கியா முக்தி, 10.
சமையல் போட்டியில் கலந்துகொண்ட திருமதி ரேவதி மோகன், ஃபர்ன்கிரீன் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த அவரது மகள் அதீனா இலக்கியா முக்தி, 10. - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

சிண்டா போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் வாயிலாகத் தமிழ்ப் புழக்கத்தை வளர்ப்பதோடு தமிழ்ப் பாண்பாட்டை வளர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபடுவதாக அவர் சொன்னார்.

இது போன்ற நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனக் கருத்துரைத்த திருமதி மோகன், சமையல் போன்ற அன்றாட நடவடிக்கைகளில் தம் மகளுடன் பங்கேற்று அவருடன் தமிழில் உரையாட ஆவல் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்