கல்வி, புத்தாக்கத் துறைகளை வலுப்படுத்தப் புதிய கூட்டு முயற்சி

1 mins read
7f211f14-f716-4b45-b173-badea1b0b081
சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபையும் (SSACCI) கேஎஸ்ஆர் கல்விக் கழகங்களும் 15 நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான தொழில்-கல்வி இணைப்பை வலுப்படுத்தின. - படம்: சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபை

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கத் துறைகளில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்தும் நோக்குடன் சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபையும் (SSACCI) கேஎஸ்ஆர் கல்விக் கழகங்களும் இணைந்து மொத்தம் 15 சிங்கப்பூர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இக்கூட்டுறவுகளின் முதன்மை நோக்கம், தொழில்-கல்வி இணைப்புகளை வலுப்படுத்துவதாகும். இதன்மூலம், மாணவர்களுக்குத் தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு, களத்தில் செயல்படுத்தக்கூடிய ஆய்வுகள், திட்ட ஆலோசனை, உலகளாவிய வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்குவதற்கு வழிவகுக்க முடியும்.

பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைவு ஆகிய துறைகளில் இந்தியா-சிங்கப்பூர் உறவுப் பாலத்தை உருவாக்குவதே இந்தக் கூட்டு முயற்சியின் முக்கிய இலக்காகும்.

இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நிறுவனங்களில் டிரஸ்ட் குளோபல் நெட்வொர்க் (Trust Global Network), ஏசிஇ இன்டர்நேஷனல் (ACE International), புரோஇன்ஃபோகஸ் (ProinFocus), பி.ஜி. கன்சல்டன்சி (PG Consultancy) போன்ற நிறுவனங்களும் அடங்கும்.

இத்தகைய முயற்சிகள் நீண்டகால ஒத்துழைப்புக்கும், உலகத் தரத்துடன் கூடிய பட்டதாரிகளை உருவாக்குவதற்கும் மிகவும் முக்கியமானவை என்று சபையின் துணைத் தலைவரான முனைவர் பாலகிருஷ்ணன் ராமநாதன் வலியுறுத்தினார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் எதிர்காலப் புத்தாக்கங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டு முயற்சி, இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு எதிர்காலப் புத்தாக்கங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று சபையின் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்