பாரம்பரிய உடைகளை நன்கொடையாகப் பெறுவது, ஆடைகள் சிலவற்றை மறுசுழற்சி செய்து வாடகைக்கு விடுவது ஆகிய சேவைகளை ஓராண்டாக வழங்கி வருகிறது ‘தி நிறம் கலெக்ட்டிவ்’ (The Niram Collective) நிறுவனம்.
வணிகம் சார்ந்த கண்ணோட்டங்களும் நுணுக்கங்களும் இந்த ஓராண்டில் மாறியிருந்தாலும் இலக்கு மாறவில்லை என்கிறார் அதன் நிறுவனர்களில் ஒருவரான ராதா, 31.
“ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இந்தியப் பாரம்பரிய உடைகளுக்கு நம்மால் ஒரு புதிய வாழ்வைக் கொடுக்க முடியும் என்பதே அந்த இலக்கு,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பண்டிகைக் காலத்துடன் நிறுவனம் ஓராண்டு நிறைவை எட்டியதால், திருவாட்டி ராதாவும் அவருடைய சகோதரி திருவாட்டி சிந்துவும் கொண்டாட்டங்களை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்ற விரும்பினர்.
தீபாவளி வரும்போது பெரும்பாலோரும் புதிய ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், நகைகள் வாங்குவது வழக்கம்தான்.
இத்தகைய சூழலில், “புதுமை என்ற பண்பிற்கு நாங்கள் புதிய அர்த்தத்தைக் கொடுக்க விரும்பினோம்,” என்றார் திருவாட்டி ராதா.
‘தி நிறம் கலெக்ட்டிவ்’ தீபாவளிச் சந்தை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) ஜாலான் புசாரில் உள்ள ‘சர்க்குலர் ஃபேஷன் ஹப்’ வளாகத்தில் நடைபெற்றது.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பயன்படுத்தப்பட்ட ஆடைகள், அலங்காரப் பொருள்கள், நகைகளை விற்பனை செய்வதற்காகக் கிட்டத்தட்ட பத்து விற்பனையாளர்கள் ஒன்றிணைந்தனர்.
“தீபாவளிக்குப் புத்தம் புதிய ஆடை அணிய விரும்பினாலும் பரவாயில்லை. மற்றவர்களின் வீட்டுக்கும் மாதம் முழுதும் நடைபெறும் மற்றக் கொண்டாட்டங்களுக்கும் செல்லும்போது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஆடைகளைப் பரிசீலிக்கலாம்,” என்று திருவாட்டி ராதா கூறினார்.
வரலாறு காணாத வெயில், கடுமையான வறட்சி, பெருவெள்ளம், அதிவேகமாக உருகும் பனிப்பாறைகள் போன்ற கடுமையான பாதிப்புகளை உலக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
இவ்வேளையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாரம்பரிய உடைகளும் வியக்கத்தக்க வகையில் மிகப் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகத் திருவாட்டி ராதா குறிப்பிட்டார்.
“மறுபயனீடு தொடர்பாக எங்களுக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆனால், மூத்த தலைமுறையினரின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் உணர்கிறோம். அது மிகவும் வரவேற்கத்தக்கது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்கான பாரம்பரிய உடைகள் மட்டுமின்றி, பயன்படுத்தப்பட்ட ஆண்களின் ஆடைத் தொகுப்பையும் கடைக்குக் கொண்டுசென்றிருந்தார் விற்பனையாளர்களில் ஒருவரான திருவாட்டி கிரேஸ்மேரி, 30.
சில ஆடைகள், திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டவை.
“இந்த ஆடைகள் சில மகிழ்ச்சியான நினைவுகளைக் கொண்டுள்ளன. ஆனால், ஆடைகள் என்பவை அணிவதற்கும் நேசிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் உரியவையே தவிர, நிலைப்பேழையில் மறைத்து வைப்பதற்கானவை அல்ல,” என்று அவர் சொன்னார்.
மற்றொரு விற்பனையாளரான திருவாட்டி பிரமிளா ஸ்ரீராம், 38, இந்திய நகைகளையும் தமது திருமணத்தின்போது அணிந்த சில பாரம்பரிய ஆடைகளையும் எடுத்துச்சென்றிருந்தார்.
‘புதுமை’ என்பதன் அர்த்தம் குறித்த சற்று மாறுபட்ட கண்ணோட்டம், மக்களிடத்தில் பிறக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
“ஒரு பொருளை வேறொருவர் முதலில் விரும்பினார் என்பதற்காக மட்டும் அதன் மதிப்பு குறைந்துவிடுவதில்லை. ஒரு பொருளுக்கு மறுவாழ்வு கொடுப்பது, புத்தம் புதிய ஒன்றை வாங்குவதற்குச் சமம்,” என்கிறார் திருவாட்டி பிரமிளா.
