ஊடகத் துறையில் ஆர்வமுள்ளோருக்குப் புதிய உபகாரச் சம்பளம்

தமிழ் முரசு, சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டு முயற்சி

ஊடகத் துறையில் ஆர்வமுள்ளோருக்குப் புதிய உபகாரச் சம்பளம்

2 mins read
0c8c2dcb-76d1-4dbb-aa81-44f1b6c0f667
தமிழ் முரசும் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையும் இணைந்து உபகாரச் சம்பளத்தை வழங்குகின்றன. விண்ணப்பங்களை ஜூன் மாதத்தின் பிற்பகுதிக்குள் சமர்ப்பிக்கலாம். - படம்: தமிழ் முரசு

ஊடகத் துறையில் ஆர்வமுள்ளோருக்கான தேவையை நிறைவுசெய்ய, தமிழ் முரசும் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையும் இணைந்து உபகாரச் சம்பளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஊடகத் துறை அல்லது தமிழ் சார்ந்த துறைகளில் பட்டம் அல்லது பட்டயம் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘தமிழ் முரசு - சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை கோ. சாரங்கபாணி உபகாரச் சம்பளம்’ என்பதற்குத் தங்களுடைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தற்போது ஊடகப் பிரிவில் பணிபுரியும் செய்தியாளர்கள் அல்லது ஊடக நிபுணத்துவம் பெற்றவர்கள் தங்களுடைய முதல் பட்டப்படிப்பு அல்லது முதல் பட்டயப்படிப்பை மேற்கொள்கிறார்கள் எனில், அவர்களும் இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் மொழி தொடர்புடைய பிரிவுகளில் மேற்படிப்பு பயில்வோரும் விண்ணப்பிக்கலாம்.

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குச் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை பல்லாண்டு காலமாக ஆதரவளித்து வருகிறது.

இந்த உபகாரச் சம்பளம் தகுதிபெறும் மாணவர்களுக்கு அது கடனாகவும் மானியமாகவும் பிரித்து வழங்கப்படும்.

மாணவரின் படிப்புக்கான முழுக் கட்டணத் தொகையில் அதிகபட்சம் 20 விழுக்காடு வரை மானியம் வழங்கப்படும். அதில் மீதமுள்ள தொகை கடனாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்பச் சராசரி வருமானத்தின் அடிப்படையில், சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் நிதியுதவி அளிக்கப்படும். தகுதியின் அடிப்படையில் தமிழ் முரசு பரிந்துரைக்கும் மாணவர்களுக்கு இதில் கூடுதல் நீக்குபோக்கு வழங்கப்படும்.

முழுமையான உபகாரச் சம்பளத்தைப் பெறும் மாணவர்களுக்குப் படிப்பு முடிந்த பிறகு, தமிழ் ஊடகத் துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட காலத்திற்குப் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.

“கடனும் மானியமும் கலந்த இந்த நிதியுதவி, நிலையானதாகவும், எதிர்காலத்தில் பல மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக உதவக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன் கூறினார்.

“சிங்கப்பூரின் தமிழ் ஊடகத் துறை, இதழியல், மின்னிலக்க ஊடகத் துறைகளில் வரும் தலைமுறைகளைச் சேர்ந்த நிபுணர்களை உருவாக்குவதே இதன் நீண்டகால நோக்கம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் முரசு, சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை ஆகிய இரண்டையும் சேர்ந்தோரைக் கொண்டு தேர்வுக் குழு ஒன்று உருவாக்கப்படும். மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தக் குழு மதிப்பிட்டுத் தெரிவு செய்யும்.

நல்லவற்றைப் புகட்டவல்ல ஊடகத்துறையில் வாய்ப்பும் வளர்ச்சியும் இருப்பதாகத் தமிழ் முரசின் ஆசிரியர் த. ராஜசேகர் குறிப்பிட்டார்.

“ஊடகத் துறையில் ஆர்வமுள்ளோரை இதற்கு விண்ணப்பிக்க நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். தமிழில் நல்ல ஆற்றல் பெற்றிருப்பதும் கைகொடுக்கும். ஊடகம் மட்டுமன்றி கல்வி, நீதித்துறை என இந்நாட்டிலுள்ள பல்வேறு துறைகளில் தமிழுக்குத் தனி இடம் இருக்கிறது,” என்று திரு ராஜசேகர் குறிப்பிட்டார்.

உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் https://srm.siet.sg/Online/Default.aspx எனும் இணையத்தளத்தை நாடி அதில் உள்ள ‘சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக் கல்விக் கடன்’ கீழ் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஜூன் மாதத்தின் பிற்பகுதி வரை சமர்ப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்