சிங்கப்பூர் இளைய தொண்டூழியர் அணியிலிருந்து கடந்த ஆண்டு (2025) மட்டும், 10,000க்கும் மேற்பட்ட இளைய தலைவர்கள், தொண்டூழியர்கள் சமூகத்தில் சேவையாற்றியுள்ளனர்.
அண்மை ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கை என்று கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ தெரிவித்தார்.
கரையோரப் பூந்தோட்டங்களின் மலர் வளாக அரங்கில் சனிக்கிழமை (மார்ச் 28) நடைபெற்ற சிங்கப்பூர் இளந்தொண்டூழியர் அணியின் தொடக்க விழாவில் திரு நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இளையர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைச் சுட்டிக்காட்டி, “நீங்கள் இந்த சவால்களை தனியாக மேற்கொள்ளத் தேவையில்லை” என்று திரு நியோ கூறினார்.
இளையர்களே மேற்கொள்ளும் ஐந்தாண்டுத் திட்டமான ‘எஸ்ஜி’ இளையர் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர்மீது பற்றுள்ள, தன்னம்பிக்கையும் மீள்திறனும் கொண்ட குடிமக்களாக இளையர்களை உருவாக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.
240க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களுக்கு நிகழ்ச்சியில் அணித்தலைவர்கள் என்ற பட்டத்தை வழங்கினார் சிங்கப்பூர் இளந்தொண்டூழியர் அணிப் புரவலரும் குடியரசின் அதிபருமான திரு தர்மன் சண்முகரத்னம்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் இளையர்களுடன் உரையாடினார்.
தொண்டூழியராகத் தொடங்கி தலைவர் பட்டம் பெற்றவர்களில் ஒருவர் ஹரிப்ரியா சிந்தியா, 32.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகத் தொண்டு செய்துவரும் ஹரிப்பிரியாவின் பயணம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் தொடங்கியது.
அத்துடன், தன்னைவிட வயது குறைந்த இளையர்கள் பலருடன் தொண்டூழியராகப் பணியாற்றியது மாறுபட்ட அனுபவமாக அமைந்தது என்றும் அவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“தொண்டு செய்வதற்குச் சரியான நோக்கமும் சேவை மனப்பான்மையும் தேவைப்படுகின்றன,” என்றார் ஹரிப்ரியா.

