ஏறத்தாழ 40 ஆண்டுகளாக ஒளிபரப்பு ஊடகத்துறையில் பயணம் செய்யும் மூத்த ஊடகவியலாளர் பவளகாந்தம் அழகர்சாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெற்ற ‘பிரதான விழா 2026’ நிகழ்ச்சியின் 21ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் தமிழ்ச் செய்திகளின் தரம், நம்பகத்தன்மையைப் பேணுவதில் திருவாட்டி பவளகாந்தத்தின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றும் விதமாக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராக இருந்த இவர், பின்னர் 1985ஆம் ஆண்டு பகுதி நேரச் செய்தி வாசிப்பாளராகத் தமது ஊடகப் பணியைத் தொடங்கினார்.
மொழி ஆளுமை, தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிப்பதற்குப் பெயர்பெற்றவர் இவர்.
பத்தாண்டுகளுக்கு மேலாக ‘எதிரொலி’ நிகழ்ச்சிப் படைப்பாளராகப் பணியாற்றிய இவர், பலருக்கும் முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார்.
தொடர்ந்து மூன்று தேர்தல்களில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை நடத்திய திருவாட்டி பவளகாந்தம், நீண்டகாலமாக தேசிய தின அணிவகுப்பின் தமிழ்ப் படைப்பைப் படைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.
செய்தி வாசிப்பாளர்கள், வருணனையாளர்கள் எனப் பலரை உருவாக்கியுள்ள இவர், அண்மைக்காலமாக செய்தி வாசிப்பிலிருந்து விலகி, திரைக்குப் பின்னால் பணியாற்றி வருகிறார்.

