கரிசல்காட்டு மணம் மாறாத தமிழச்சி தங்கபாண்டியன்

கரிசல்காட்டு மணம் மாறாத தமிழச்சி தங்கபாண்டியன்

1 of 2
படம்: பே கார்த்திகேயன்
படம்: பே கார்த்திகேயன்

07 Nov 2026 - 11:22 am

3 mins read

பெரியார் கொள்கைகளைச் சொல்லி வளர்க்கப்பட்ட பெண், உலகப் பெண் தலைமைத்துவப் பயிற்சிக்காக சிங்கப்பூரின் லீ குவான் யூ பொதுக்­கொள்­கைப் பள்­ளிக்கு வருகையளித்திருந்தார்.

பேராசிரியர், கவிஞர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மூன்று அடையாளங்களையும் ஒரே நேரத்தில் சுமக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், ஒரு பக்கம் பகுத்தறிவு, இன்னொரு பக்கம் ஒழுங்கு. இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சுமந்தவாறு சிங்கப்பூர் வானத்தின் கீழ் அமர்ந்தவாறே உலக தமிழ் சொந்தங்களுடன் உரையாடத் தொடங்கினார்.

தங்கத் தட்டில் எங்களுக்கு எதுவும் வரவில்லை

‘‘என் அறிவுப் பயணம் பெரியாரிடம் தொடங்கியது. என் கனவு சிங்கப்பூரிடம் வந்து நிற்கிறது,” என்று சிரித்தபடி கருத்துகளை முன்வைத்தார்.

‘‘சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவிடமிருந்து கற்பது கடுமையான உழைப்பையும், கனவையும்தான். ஒரு சின்ன தீவு நாட்டை, உலகமே அண்ணாந்து பார்க்கும் நாடாக மாற்றியது அவரது கனவுதான். மனிதர்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதை அவர் நிரூபித்தார்,” என்றார் அவர்.

சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு எதை எடுத்துச் செல்வீர்கள் என்ற கேள்விக்கு, யோசிக்காமல் பதிலளித்தார் தமிழச்சி. 

“நேரம் தவறாமை. அரசியல்வாதி என்றாலே தாமாதாகத்தான் வருவார் என்ற பெயரை நான் உடைக்க விரும்புகிறேன். சுத்தமான நகரம், அதிகாலையில் தொடங்கி சரியான நேரத்துடன் முடிக்கும் பண்பாடு, இதை நம் ஊரிலும் கொண்டு வர வேண்டும்,’’ என்றார் அவர்.

Watch on YouTube

கரிசல்காட்டு மணம் மாறாத தமிழச்சி

உலக அரங்கில் பெண் அரசியல்வாதியாக வாழ்கைப் பயணம் அமைந்திருந்தாலும், அவர் விரும்பும் மண் வாசனை இன்னும் கரிசல்காட்டில்தான் இருக்கிறது.

ஆங்கிலப் பேராசிரியையான அவருக்கு பிடித்த தமிழ்சொற்களைப் பற்றிக் கேட்டபோது, எனக்கு உசுரு என்பது கரிசல்காட்டுத் தமிழ்தான் என்றார்.

‘‘உசுரு, விசாரிப்பு, வாக்கப்பட்டு, புள்ள, ஆத்தாடி, அவுக இவுக, இவையெல்லாம் என்னை விட்டு அகலாத தமிழ் சொற்கள். சென்னையிலும் எனக்கு இந்தப் பேச்சுதான் வரும்,” என்று மீண்டும் புன்னகைத்தர் தமிழச்சி.

‘‘அப்பாவின் புகழால் எல்லாம் எளிதாகக் கிடைத்ததா?” என்ற கேள்விக்கு, அவர் குரலில் கனிவும் அழுத்தமும் ஒருசேர வந்தது.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன் - படம்: பே கார்த்திகேயன்

“திராவிட முன்னேற்றக் கட்சியில் யாருக்கும் எதுவும் தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கப்படுவதில்லை. 2008ல் தலைவர் கலைஞர் என்னை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்ற வைத்து அறிமுகப்படுத்தினார்.

‘‘நான் பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர அரசியலுக்கு வந்தேன். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனது 2019ல். இடையில் 12 வருஷ களப்பணி. மிசாவில் எங்கள் தந்தைமார்கள் சிறையில் இருந்தபோது, குடும்பம் குடும்பமாக சிறைவாசலில் நின்ற வலியை யாரும் பார்ப்பதில்லை,” என்று குறிப்பிட்டார் அவர்.

தொடர்ந்து பேசிய தமிழச்சி, “என்னை நான் மூன்று அடையாளங்களோடு சொல்வேன். ஒன்று, ஆசிரியப் பெற்றோருக்குப் பிறந்து, இன்றுவரை ஆசிரியையாக அறியப்படுபவள்.

‘‘இரண்டு, உதட்டுச் சாயம், நகச் சாயம் எல்லாம் தாண்டி உள்ளே வியர்வை மணமும் கவிச்சை மணமும் அடிக்கும் சுத்தமான கரிசல்காட்டுத் தமிழச்சி. மூன்று, பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்த திராவிட இயக்கப் பாரம்பரியம். அது நான் உடைக்க நினைக்கும் கண்ணாடிக் கூரை இல்லை, என் பலம்,” என்றார்.

50%  என்பது மாதரின் பிறப்புரிமை

நாடாளுமன்றத்தில் பெண்ணாக இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் குரல் பலமாக தொனித்தது. “33 விழுக்காடு என்பது சலுகையல்ல. நாங்கள் கேட்பது சரிபாதியான 50 விழுக்காடு. அது ஆண்கள் தட்டில் வைத்துக் கொடுப்பது அல்ல, எங்கள் பிறப்புரிமை. சமையலறையிலிருந்து வரவேற்பறைக்கு வரவே பெண்ணுக்கு 60 வருஷம் ஆனது’’ என்று குறிப்பிட்டார் எம்.பி. தமிழச்சி.

பணி, பொது வாழ்க்கை, விமர்சனம் ஆகியவற்றால் வரும் மன அழுத்தத்தை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பலரும் சொல்லத் தயங்கும் பதிலை முனைவர் தமிழச்சி தயங்காமல் சொன்னார்.

“தனியாக இருக்கும்போது நன்றாக உட்கார்ந்து அழுதுவிடுவேன். 10 நிமிடம் அழுதுவிட்டு, மீண்டும் என்னைச் இயல்பு நிலைக்கு வந்துவிடுவேன். என்ற அவர், தனக்கிருக்கும் நகைச்சுவை மனம் சார்ந்த முகம் பலருக்குத் தெரியாது,” என்றார்.

இலக்கியம்தான் தம்மை மனிதத்துவம் குறையாத அரசியல்வாதியாக செதுக்கியிருப்பதாக சொன்னார் அவர்.

‘‘தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதியில் 70 விழுக்காடு தான் முடித்திருப்பேன் என்ற குற்ற உணர்ச்சியோடு தூங்கப் போகும்போது, தொடர்ந்து ஊக்கமளித்து என் இலக்குகளை வற்றிப் போகாமல் வைத்திருப்பது இலக்கியம்தான்.

‘‘கவிதையால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்த இடத்தில், அரசியலால் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைக்க அதிகாரம் அளிக்க முடிகிறது. அதுதான் அரசியல் தரும் திருப்தி,” என்று உறுதிப்பட கூறினார் தமிழச்சி.

தாம் தவறாது பூச்சூடுவது எதனால்? உலகத் தமிழர்களுக்காக அவர் அந்த இடத்திலேயே சொன்ன கவிதை என்ன? உட்பட தமிழச்சி தங்கபாண்டியனின் முழு நேர்காணல்  குறித்த காணொளியைப் பார்க்க கீழ்கண்ட கியூஆர் குறியீட்டை வருடவும்.

குறிப்புச் சொற்கள்