கவிஞர் இன்பாவின் இரு நூல்கள் வெளியீடு

கவிஞர் இன்பாவின் இரு நூல்கள் வெளியீடு

படம்: கவிமாலை

07 Mar 2026 - 2:41 pm

2 mins read

கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இன்பா எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழா பிப்ரவரி 22ஆம் தேதி தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16வது தளத்தில் அமைந்துள்ள ‘பாட்’ அரங்கில் நடைபெற்றது.

இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்பாவின் ‘அவகாடோவாய் இருப்பது’ என்ற கவிதைத் தொகுப்பும் ‘கடல் தாண்டிய சொற்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியிடப்பட்டன.

கவிமாலையின் மாணவர் பிரிவான விதைகள் அமைப்பின் உறுப்பினர் ஹரிவர்தினி நெறியாளராகச் செயல்பட்ட நிகழ்ச்சியில், ஆசிரியர் உஷா சுப்புசாமி வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாணவி சாராவின் நடன அங்கம் இடம்பெற்றது.

‘விதைகள்’ மாணவர்கள் பத்துப் பேர் இணைந்து இன்பாவின் ‘அவகாடோவாய் இருப்பது’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை நிகழ்ச்சியில் வாசித்தனர். ஸ்ருதிகா குமார், கண்ணன் வர்ஷிகா, செல்வராஜ் விஷாலினி, சாய் பாலாஜி லட்சுமணன், ரகுநந்தன், ஜாய் பிளஸ்சி பெனிசியா ஜோசப், ரா. மகாலட்சுமி, பிரபவ் சுந்தரவடிவேல், நித்யஸ்ரீ , ஹரிவர்த்தினி ஆகியோர் அந்த மாணவர்கள்.

இதனைத் தொடர்ந்து நூல்களைப் பற்றிய கருத்துரைகள் இடம்பெற்றன. ‘அவகாடோவாய் இருப்பது’ கவிதைத் தொகுப்பு குறித்துக் கவிமாலைக் கவிஞர் மு.செ. பிரகாஷும் ‘கடல் தாண்டிய சொற்கள்’ கட்டுரைத் தொகுப்பு பற்றிக் கவிமாலைக் கவிஞர் செவியின்பம் சங்கீதாவும் உரையாற்றினர்.

அதைத் தொடர்ந்து மாணவி ஆலியாவின் நடன அங்கம் இடம்பெற்றது. ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலில் தொடங்கி ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்றப் பாடலுடன் அவரது நடனம் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான நல்லதம்பியும் எழுத்தாளர் பெருமாள் முருகனும் கலந்துகொண்டனர்.

திரு நல்லதம்பி தமது உரையில் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திரு பெருமாள் முருகன் கவிதையின் இன்றைய நிலை, வாசகர்களை அடையும் வழிகள், பதிப்பகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற பல அம்சங்களை ஆய்வுப் பார்வையுடன் விளக்கினார். இருவரும் இன்பாவின் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் வெளிப்படும் சிந்தனை ஆழத்தையும் இலக்கியப் பங்களிப்பையும் பாராட்டினர்.

அதனைத் தொடர்ந்து, ‘அவகாடோவாய் இருப்பது’ நூலைத் திரு பெருமாள் முருகன் வெளியிட, ‘தமிழ் கியூப்’ நிறுவனர் ஏ.டி. பிள்ளை பெற்றுக்கொண்டார். ‘கடல் தாண்டிய சொற்கள்’ நூலைத் திரு நல்லதம்பி வெளியிட, ஆசிரியர் இளங்குமரன் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக இன்பா ஏற்புரை வழங்கி, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

செய்தி: செவியின்பம் சங்கீதா

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்