கவிஞர் க.து.மு. இக்பாலுக்கு ‘இளங்கோவடிகள்’ விருது

கவிஞர் க.து.மு. இக்பாலுக்கு ‘இளங்கோவடிகள்’ விருது

1 of 2
படம்: சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களம்
படம்: சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களம்

07 Nov 2026 - 5:30 am

2 mins read

காப்பிய விழாவில் ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் ‘இளங்கோவடிகள்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஆண்டுதோறும் நடத்தும் காப்பிய விழா 11வது ஆண்டாக அக்டோபர் 27ஆம் தேதி மாலையில் தேசிய நூலகக் கட்டடத்தின் 16ஆம் தளத்தில் நடைபெற்றது.

காப்பியங்களைத் தொடர்ந்து நினைவூட்டும் வகையில் ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய மூன்று காப்பியங்களை மையமாகக் கொண்டு இவ்வாண்டு விழா நிகழ்ந்தது.

பெண்ணியக் கவிஞர், எழுத்தாளர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பன்முகம் கொண்ட திருவாட்டி தமிழச்சி தங்கபாண்டியன் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

“ஞாயிறு போற்றுதும்..” என்ற சிலப்பதிகாரப் பாடலுக்கு மாணவியர் இருவர் ஆடிய நடனத்துடன் விழா தொடங்கியது. தமிழ் இலக்கியக்களத்தின் துணைத் தலைவர் இறை. மதியழகன் வரவேற்புரை ஆற்றினார்.

தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் தம் தலைமையுரையில், காப்பியங்களில் உள்ள பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை அடுத்த தலைமுறையினர் அறியச் செய்திட வேண்டும் என்றும் அதன்வழி தமிழ்ச் சமூக வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற விளக்கத்தையும் தந்தார்.

சிறப்பு விருந்தினரான முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன், திருவாட்டி தமிழச்சியுடன் இணைந்து கவிஞர் க.து.மு.இக்பாலுக்கு ‘இளங்கோவடிகள் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.

‘சிலம்பு ஒரு நவீன பார்வை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய திருவாட்டி தமிழச்சி, சிலப்பதிகாரம் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தும் காப்பியம் என்றும் கண்ணகியும் மாதவியும் நவீன பெண்ணியப் பெண்கள் என்றும் பொருத்திக் காட்டினார்.

காப்பியங்கள் குறித்த கவியுரையைக் கவிஞர் திருமுருகன் வழங்கினார்.

தொடர்ந்து ‘மணிமேகலை காட்டும் உயிர் அறம்’ என்ற தலைப்பில் முனைவர் இராஜி சீனிவாசன், கண்ணன் சேஷாத்திரி, மஹ்ஜபின் ஆகிய மூவரும் உரையாற்ற, முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் ‘சிந்தாமணி சிந்தும் மணிகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

குறிப்புச் சொற்கள்
இலக்கியம்சிங்கப்பூர்தமிழ்