ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் ஜனவரி 16ஆம் தேதி பிற இனத்து ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே பள்ளி அலுவலகத்திற்கு முன்னால் உள்ள அனைத்துத் தூண்களிலும் கரும்புகளையும் மின்விளக்குகளையும் தொங்கவிட்டனர். பள்ளி அலுவலக வாசலுக்கு முன் கோலமிடப்பட்டு வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கப்பட்டது.
பள்ளி முதல்வர் செல்வி டான் பொங்கல் விழா கொண்டாடப்படுவதன் பின்னனியைக் கேட்டுத் தெரிந்துகொண்டதுடன் பொங்கல் விழாவைக் கொண்டாட ஆயத்தமானார்.
ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமையன்று மதியம் 2 மணிக்கு மேல் பொங்கல் வைக்கும் அங்கம் ஆரம்பமானது. பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள் ஆகியோர் பால் பொங்கிவந்து வழிந்தபோது பிற இன ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் இணைந்து ‘பொங்கலோ! பொங்கல்’ என்று கூவினர். பள்ளி முதல்வரும் மற்ற ஆசிரியர்களும் பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.
பொங்கல் விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், அதன் மரபுசார்ந்த செய்திகள், நிகழ்வுகள் போன்றவற்றை மாணவர்கள் அறிந்துகொண்டனர். பொங்கல் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளும் இதன்வழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. கோலமிடுதல், வண்ணமிடுதல் எனப் பல நடவடிக்கைகளிலும் மாணவர்கள் பங்கேற்றுத் தமிழர் மரபும் பண்பாடும் சார்ந்த பல செய்திகளை அறிந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு அனுபவக் கல்வியை வழங்குவதற்கான தளங்களில் பொங்கல் விழாவும் முக்கியப் பங்கு வகிப்பதால் பள்ளித் தமிழ்ப் பிரிவு ஆசிரியர்கள் ஆண்டுதோறும் இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இதில் தங்கள் தமிழ்மொழி நிலையத்தில் படிக்கும் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பொங்கல் கொண்டாட்டங்களில் ஒன்றான காணும்பொங்கல் நிகழ்வு ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை 7.35 மணியளவில் பள்ளியரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாட்டை விளையாடினர். அனைத்து இன மாணவர்களும் ‘கபடி கபடி’ என்று கூச்சலிட்டு பள்ளி அரங்கத்தை அதிரவைத்தது அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது.


