இந்திய மாணவர்களின் கல்வி தொடர்பில் ஆதரவு நல்கிவரும் உமறுப் புலவர் கல்வி உபகாரச் சம்பள அறங்காவல் நிதி, கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி ஏழு மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன் உதவியையும் கல்வி உபகார நிதியையும் வழங்கியது.
இது குறித்து தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
எழுவரில் இருவர் பட்டப்படிப்பும் இருவர் பட்டயப் படிப்பும் எஞ்சிய மூவர் தொழில்நுட்பக் கல்விக்கழக (மேற்கு) படிப்பும் மேற்கொண்டு வருகின்றனர்.
உஷா நந்தினி, சாண்முகப் பிரியன் ஆகிய இருவரும் மூன்றாவது ஆண்டாக இந்தக் கல்வி உதவிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
மாணவிகள் ஹாஜா ரியாஜூதீன், கஷ்புல் ஹிக்மா இருவரும் இரண்டாவது முறையாக உதவி பெறுகின்றனர்.
மற்ற மூவரான முருகன் மகள் சரண்யா (பட்டப் படிப்பு), இரட்டையர் ஷாஜா ஜூமானா, தூஜானா ஷாஜியா (ஐடிஇ மாணவிகள்) ஆகியோர் முதல்முறையாகத் தகுதிபெற்றுள்ளனர்.
பட்டப் படிப்புக்குத் தலா $3,000, பட்டயப் படிப்புக்குத் தலா $2,000 வட்டியில்லாக் கல்விக்கடனும் தொழில்நுட்பக் கல்விக் கழகப் படிப்புக்குத் தலா $1,000 கல்வி உதவிநிதியும் வழங்கப்பட்டன.
அத்துடன் 20ஆவது ஆண்டாக சிண்டாவுக்கு $5,000 வழங்கப்பட்ட நிலையில் ஆகமொத்தம் $19,000 நிதி உதவியாக வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிண்டாவின் தலைமை நிர்வாகி திரு அன்பரசு ராஜேந்திரன், மாணவர்களுக்குக் காசோலைகளை வழங்கினார்.
அறங்காவல் உறுப்பினர் க து மு இக்பால் சிண்டாவுக்கான காசோலையை திரு அன்பரசுவிடம் வழங்கினார்.
இதுவரை அறங்காவல் நிதி, கல்விக் கடனாகவும் உபகாரச் சம்பளமாகவும் 500 மாணவர்களுக்கு மொத்தம் $800,000 வழங்கியுள்ளது.
உமறுப் புலவர் கல்வி உபகாரச் சம்பள அறங்காவல் நிதி பொறுப்பாளர்கள் 40 ஆண்டு காலம் (ஒரு தலைமுறை) உழைப்பது குறித்துத் தமது உரையில் பாராட்டிப் பேசினார் திரு அன்பரசு.
உதவி பெற்ற மாணவர்கள் அந்த உதவியின் மதிப்பை உணர்ந்து நன்றியுணர்வுடன் கடனைத் திருப்பிச் செலுத்த முனைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கல்வியில் முனைப்பாய் இருக்க மாணவர்களை ஊக்குவித்தார் திரு அன்பரசு.


