இளைய தலைமுறையினரிடையே தமிழ்மொழியின் தொன்மையையும் இனிமையையும் கொண்டுசேர்க்கும் நோக்கத்துடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 31வது முத்தமிழ் விழாவை நடத்தியது.
இவ்விழாவின் இறுதிச்சுற்றுப் போட்டிகளும் பரிசளிப்பு அங்கமும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 25) காலை நடைபெற்றன.
இவ்விழாவில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். நாடாளுமன்ற நியமன உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜுவும் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
“ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இளமையோடு திகழும் தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் இத்தகைய விழாக்கள் மிகவும் வரவேற்கத்தக்கவை.
“இன்றைய நவீன உலகில் நாம் பல மொழிகளைக் கற்கலாம். ஆனால் தாய்மொழியான தமிழை கற்பதும் அதில் சரளமாகப் பேசுவதும் நமது கடமை,” என்று தமது உரையில் திரு விக்ரம் கூறினார்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, பாலர் பள்ளி, தொடக்கநிலை மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அவ்வையார், கர்ணன், ராணி மங்கம்மாள் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வேடங்களில் மாணவர்கள் தோன்றித் தமிழ்மொழித் திறனை வெளிப்படுத்திப் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தனர்.
நாற்புறமும் கடல்சூழ நாம் இருக்கும் சிங்கையிலே நற்றமிழால் வளர்கின்றோம் என்றார் கழகத் தலைவர் சு. முத்துமாணிக்கம்.
“தமிழ் இந்த நாட்டில் நடமாட வேண்டும், குடும்ப உறவுகளுடனும் நண்பர்களுடனும் தமிழிலேயே பேச வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழை வளர்ப்பது அமைப்புகளின் பொறுப்பு மட்டுமன்று என்றும் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு,” என்று அவர் குறிப்பிட்டார்.
முத்தமிழ் விழாவின் ஓர் அங்கமாக இளையர்களிடையே எழுத்தார்வத்தை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட ‘நானும் ஒரு படைப்பாளி’ சிறுகதைப் பயிலரங்கில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
சிறந்த சிறுகதைகள் தெரிவுசெய்யப்பட்டு, மின்னூலாக வெளியிடப்படவுள்ளன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
“எதையுமே ஈடுபாட்டுடன் செய்தால் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதை இந்தப் பயிலரங்கு உணர்த்தியது. மாணவர்களிடம் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை விதைப்பதே எங்களின் நோக்கம்,” என்றார் கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம்.
துரை மாணிக்கத்துக்கு தமிழவேள் விருது
விழாவின் முத்தாய்ப்பாகச் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத் துறை விருதான ‘தமிழவேள்’ வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் சமூகப் பணிக்கும் அரும்பங்காற்றிய ஆசிரியர் இரா. துரைமாணிக்கத்திற்கு தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
“தமிழ்மொழி பள்ளிகளிலும் வீடுகளிலும் பேசப்படும் வாழும் மொழியாக இருக்க வேண்டும். இல்லையேல் அது வெறும் எழுத்து மொழியாகவே நின்றுவிடும் அபாயம் உள்ளது. நமது அமைப்புகள் எதிர்காலத்தைச் சிந்தித்து, வீடுகளில் தமிழைப் பேசுவதற்கு ஊக்கம் தர வேண்டும்,” என்று அவர் கூறினார்.
புகழ்பெற்ற தமிழகப் பேச்சாளர் ஆ.நாகமுத்துபாண்டியன் விழாவில் பங்கேற்று ‘தமிழ் ஈடுபாடு, தலைமுறை மேம்பாடு’ என்ற தலைப்பையொட்டி உரையாற்றினார்.
சிறப்பான படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கும் மற்றப் போட்டிகளில் கலந்துகொண்ட பிற போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

