பயன்பாட்டில் இல்லாத அல்லது சேதமடைந்த தெய்வப் படங்கள், சிலைகளைப் பக்தர்கள் மரியாதையான முறையில் ஒப்படைக்க ‘உத்வாசனம்’ (Project Udvasanam) எனும் புதிய சமூகத் திட்டம் தொடங்கப்படுகிறது.
இந்து ஆலோசனை வாரியத்தின் முன்னெடுப்பில் சிங்கப்பூர் இந்து சபையின் பங்காளித்துவத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சேகரிப்பு இயக்கம், வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள பிஜிபி மண்டபத்தின் நூலக அறையில் நடைபெறும்.
காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் இந்நிகழ்வில், பொதுமக்கள் முன்பதிவு ஏதுமின்றி நேரடியாகப் பங்கேற்கலாம்.
வீடுகளில் வழிபாட்டிற்குப் பயன்படுத்த முடியாத புனிதப் பொருள்களைக் குப்பைத் தொட்டிகளில் வீசுவதையோ மரங்களின்கீழ் வைப்பதையோ நீர்நிலைகளில் போடுவதையோ தவிர்த்து, அவற்றைச் சாஸ்திர முறைப்படி புனிதமாகவும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணியும் அகற்றுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
பல இந்துக் குடும்பங்களுக்குக் கடவுள் படங்களும் சிலைகளும் வெறும் சாதாரண வீட்டுப் பொருள்கள் அல்ல என்பதால் அவை சேதமடைந்தாலும் பக்தர்கள் அவற்றைக் கண்ணியத்தோடு கையாளவே விரும்புவர் என்றார் இந்து ஆலோசனை வாரியத்தின் துணைத் தலைவர் கண்ணா கண்ணப்பன்.
“அத்தகைய புனிதமான பொருள்களைப் பக்தர்கள் எளிமையாகவும் பொறுப்புடனும் ஒப்படைக்க இத்திட்டம் வழிவகுக்கிறது. அத்துடன், முறையற்ற வகையில் பொதுவிடங்களில் அவற்றை அகற்றுவதைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் இது ஏற்படுத்தும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இச்சேகரிப்பு இயக்கத்தின்போது 60 சென்டிமீட்டர் உயரத்திற்கு உட்பட்ட பிளாஸ்டர், மரம், உலோகம் போன்ற பொருள்களாலான தெய்வச் சிலைகள் ஏற்றுக்கொள்ளப்படும். தெய்வப் படங்கள், புகைப்படங்கள், நாள்காட்டிகள் ஆகியவற்றைச் சட்டங்கள் (frames), கண்ணாடிகள் இன்றி எடுத்து வர வேண்டும்.
அதே வேளையில், பூஜை விளக்குகள், தட்டுகள், வழிபாட்டுப் பாத்திரங்கள் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா என ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சேகரிக்கப்படும் பொருள்கள் சாஸ்திரச் சடங்குகளுக்குப் பிறகு, அவற்றின் தன்மைக்கேற்பப் பிரிக்கப்பட்டு முறைப்படி அகற்றப்படும். உலோகம், ஐம்பொன் சிலைகள் உருக்கப்பட்டு, அதில் வரும் நிதி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.
இத்திட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளது. பொதுமக்கள் இச்சேவையைப் பயன்படுத்தித் தங்கள் இல்லங்களில் உள்ள புனிதப் பொருள்களைக் கண்ணியத்துடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்குப் பொதுமக்கள் திருமதி சஷிகலாவை 96402845 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
