இலக்கியத் திறனாய்வாளர் முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி எழுதிய ‘அறிந்ததும் அறியாததும் - சிங்கப்பூர் குறித்த பல்துறை ஆய்வுக்கட்டுரைகள்’ என்னும் ஆய்வு நூல், ‘பூந்தோட்டம்’ என்னும் சிறுவர் பாடல் நூல், ‘மிட்டாய்த்தட்டு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஆகிய மூன்று நூல்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரை தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் உள்ள பாசிபிலிட்டி அறையில் வெளியீடு காணவுள்ளன.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர்கனி தலைமை ஏற்று நூல்களை வெளியிட உள்ளார். முன்னாள் நாடளுமன்ற நியமன உறுப்பினர் இரா.தினகரன் சிறப்புரை ஆற்றுவார். கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவர் மு.அ.மசூது வாழ்த்துரை வழங்குவார்.
திரு தினகரனும் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கமும் நூல்களின் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்வார்கள். திருமதி இளவரசி காந்தி, திரு சித்துராஜ் பொன்ராஜ், திரு ஷாகுல் ஹமீது ஆகியோர் நூல்களைப் பற்றி மதிப்பீடு செய்வார்கள். முனைவர் ராஜி ஸ்ரீநிவாசனின் நெறியாள்கையில் நிகழ்ச்சி நடைபெறும்.


