திறன்பேசிகள் மூலம் உடனடியாகப் படங்களை எடுக்கவல்ல மின்னிலக்கத் தொழில்நுட்பம் இன்றைய காலத்தில் கோலோச்சி வந்தாலும், படச்சுருள் கேமராக்கள் மீது இளையர்களின் கவனம் மீண்டும் திரும்பி மெல்ல வளர்கிறது.
குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் படங்களை எடுத்து, படச்சுருளிலிருந்து படங்களைத் தயாரிக்கும் முறை பழையதாகிவிட்டாலும் அதன் நுட்பங்களை ஆராய்ந்து புரிந்துகொள்ள இளைய ஆர்வலர்கள் சிலர் முனைகின்றனர்.
‘குவிக்ஸ்னேப்’ 40வது ஆண்டு மைல்கல்
1986ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘குவிக்ஸ்னேப்’ கேமரா, தனது 40ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
“அனைவரும், எப்போதும், எங்கும், எளிதாகப் படமெடுக்க வேண்டும் என்ற நோக்கில் ‘குவிக்ஸ்னேப்‘ உருவாக்கப்பட்டது. அன்றாடத் தருணங்களைப் பதிவுசெய்ய மக்களை ஊக்குவிக்கும் அந்த கேமராவே, இன்றைய திறன்பேசி நிழற்படக் கலைக்கான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தது,” என்று ஃபியூஜிஃபிலிம் ஆசிய பசிபிக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹருட்டோ இவாடா தெரிவித்தார்.
படச்சுருள் கேமராவின் தனித்துவ அனுபவம்
உடனடி மின்னிலக்க நிழற்படங்களைவிட, படச்சுருள் கேமராக்கள் வழங்கும் காத்திருப்பும் உண்மைத்தன்மையுமே இளையர்களைக் கவர்கின்றன. திறன்பேசிகளைப் போல உடனடியாக படத்தைப் பார்க்க முடியாது. படச்சுருளைச் சுழற்றி, வியூஃபைண்டர் வழியே பார்த்து, அச்சிட்டுப் பார்க்கும் வரை ஏற்படும் எதிர்பார்ப்பு, பயனர்களுக்குத் தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.
‘லிட்டில் பிக் வியூஸ்’ புகைப்படப் போட்டியில் பங்கேற்ற இளையர்களின் கருத்துகளும் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.
இப்போட்டியில் பங்கேற்ற சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவி யாஷ்வி ரோஹித் மல்ஹோத்ரா, 18, “கைப்பேசி கேமராக்களைவிட ‘குவிக்ஸ்னேப்‘ மூலம் நினைவுகளைப் பதிவுசெய்வது உண்மைத்தன்மையையும் தனித்துவமான அனுபவத்தையும் தருகிறது,” என்றார்.
தனது வயதுப் பிரிவில் முதலிடம் பிடித்த 12 வயதுச் சிறுமி லியான் ஏவா லெடெஸ்மா, “படங்கள் எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பே இதில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி,” எனக் குறிப்பிட்டார்.
இந்த மறுமலர்ச்சியைப் பற்றிக் கருத்துரைத்த திரு இவாடா, “திறன்பேசிகள் புகைப்படக் கலையை எளிதாக்கியிருந்தாலும் படச்சுருள் கேமராக்கள் மக்களை நிதானப்படுத்தி, கவனத்துடன் செயல்பட வைக்கின்றன. புகைப்படக் கலையை வெறும் ஆவணப்படுத்துவதிலிருந்து ஆக்கபூர்வமான அனுபவமாக இது மாற்றுகிறது,” என்றார்.
இளைய படைப்பாளர்களை ஊக்குவிக்கும் ‘லிட்டில் பிக் வியூஸ்’
இளையர்களின் ரசனையைக் கொண்டாடும் வகையில், ‘லிட்டில் பிக் வியூஸ்’ எனும் சிறப்பு முயற்சியை ஃபியூஜிஃபிலிம் முன்னெடுத்துள்ளது. இதன் பகுதியாக, சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம், ‘அவர் தெம்பனிஸ் ஹப்’, ஃபியூஜிஃபிலிம் எக்ஸ் ஸ்பேஸ், ஒன் பொங்கோல் ஆகிய இடங்களில் சிறப்புப் புகைப்படக் கண்காட்சிகள் செப்டம்பர் 13 வரை நடைபெறுகின்றன.
இக்கண்காட்சியில் புகைப்படப் போட்டியின் வெற்றியாளர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், $29.80 கட்டணத்தில் 15 நிமிட வழிகாட்டல் பயிற்சி, ‘குவிக்ஸ்னேப்’ கேமராவும் மின்னிலக்கப் புகைப்படக் கோப்புகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தங்களது அரிய தருணங்களைப் படமெடுத்துப் பாதுகாக்கும் மக்களின் ஆசை மாறுவதில்லை என்பதைச் சுட்டிய திரு இவாடா, “புகைப்படங்களுக்குள் அடங்கும் விவரங்கள் அளப்பரியவை. மனத்தில் நிழலாடும் இனிய நினைவுகளைப் புகைப்படங்கள் நம் கண்களுக்கு மீண்டும் தருகின்றன,” என்றார்.


