அக்டோபர் 23 முதல் 31ஆம் தேதிவரை இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் கபடிப் போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் சிங்கப்பூர்க் கபடி அணிகள் திரும்பியுள்ளன. முக்கியமாக, போட்டிகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.
ஆண்கள் அணி, ஆஸ்திரேலியாவை 59-32 என்ற புள்ளிக்கணக்கிலும், ஸ்காட்லாந்தை 50-28 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தியது; ஆனால், கனடாவிடம் 38-45 எனக் குறுகிய இடைவெளியில் தோல்விகண்டதுடன் கென்யா, பங்ளாதேஷ் அணிகளுடனான ஆட்டங்களிலும் வெற்றி நழுவியதால் ஆறு அணிகள் கொண்ட பிரிவில் நான்காம் நிலையைப் பிடித்தது சிங்கப்பூர் ஆண்கள் குழு. பெண்கள் குழு, பலமான அணிகள் நிறைந்த குழுவில் ஐந்தாம் நிலையில் வந்தது. இரு பிரிவுகளிலும் இந்தியா வாகைசூடியது.
குழு ஆட்டங்களின் நிறைவில், ஆண்கள் பிரிவில் 13 அணிகளுக்கிடையே தலைசிறந்த விளையாட்டாளர் பட்டியலில் சிங்கப்பூரர்கள் இருவர் இடம்பெற்றனர்.
தலைசிறந்த தற்காப்பு ஆட்டக்காரராக 24 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தார் சிங்கப்பூர் அணித் தலைவர் வி.விஷ்வ தேவா, 26.
தாக்குதல் ஆட்டக்காரர்களின் (ரெய்டர்ஸ்) பட்டியலில் 49 புள்ளிகளுடன் ஐந்தாம் நிலையில் வந்தார் சிங்கப்பூர் அணியின் ஆக இளைய விளையாட்டாளரான ஆதித் செந்தில்குமார், 19.
ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் 18 புள்ளிகள் பெற்று, அன்பு நவினின் முந்தைய தேசியச் சாதனையையும் (17 புள்ளிகள்) ஆதித் முறியடித்தார். தனது முதல் அனைத்துலகப் போட்டியிலேயே இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் ஆதித்.
இருவரும் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் தலைசிறந்த விளையாட்டாளர்களாக ஆளுக்கு 10,000 ரூபாய்க்கான காசோலையைப் பெற்றனர். ஸ்காட்லாந்துக்கு எதிராக முகம்மது ஐடில் அஷ்ராஃப் அப்பரிசை வென்றார்.
பெண்கள் அணித் தலைவர் ஆனந்தராஜன் சிந்தினி, 25, பெண்கள் கபடியில் நான்கு தேசியச் சாதனைகளைப் படைத்தார். ஒரே ஆட்டத்தில் ஆக அதிகப் புள்ளிகள் (நைஜீரியாவுக்கு எதிராக 12 புள்ளிகள்), ஓர் ஆட்டத்தில் ஆக அதிக ‘ரெய்ட்’ புள்ளிகள் (மலேசியாவுக்கு எதிராக 11 ‘ரெய்ட்’ புள்ளிகள்), ‘சூப்பர் 10’ எனும் ‘ரெய்ட்’ சாதனையைப் படைத்த முதல் பெண், ஒரே தாக்குதலில் ஐந்து புள்ளிகள் பெற்ற முதல் பெண் ஆகியவையே அச்சாதனைகள். அணியின் தலைவராக இதுவே அவரது முதல் போட்டி.
முதன்முறையாக, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் அனைத்துலகக் கபடிப் போட்டியில் நடுவராகப் பங்காற்றிய பெருமையைப் பெற்றார் சுப லட்சுமி.
இலக்குடன் களமிறங்கிய ஆதித்
ஆதித்தின் வேகத்தைச் சமாளிப்பது எதிரணிக்குப் பெருஞ்சவாலாக இருந்தது.
“முதல் போட்டிக்கு முன் என்னால் இரவு தூங்கவே முடியவில்லை. நடுக்கமாக இருந்தது. ஆனால் போட்டி தொடங்கியதும் எனக்கு ஒரு துளிகூட அச்சம் இல்லை. வெவ்வேறு சூழல்களைக் கையாள என் குழுவினரும் எனக்குக் கற்பித்தனர்,” என்றார் ஆதித்.
முதல் இரு ஆட்டங்களில் இறுதியில் களமிறங்கினாலும் அவர் தனது முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. அதனால், அடுத்த மூன்று ஆட்டங்களில் அவர் தொடக்கத்திலேயே களமிறக்கப்பட்டார். பங்ளாதேஷுக்கு எதிராகப் பத்து புள்ளிகளையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 புள்ளிகளையும் அவர் குவித்தார்.
குழுவுணர்வே வெற்றியின் ரகசியம்
“குழுவினரிடையே ஒருங்கிணைப்பு தேவை. தடுப்பாட்டத்தை நான் தொடங்கினாலும் என் சகக் குழுவினர் ஸ்ரீராம் ராஜா, கிஷோர் கருணாகரன், ஷாய் நிக்கிலேஷ் ஆகியோரும் சேர்ந்து செயல்பட்டதால்தான் எங்களால் வெற்றியாக எதிரணியினரைத் தடுக்கமுடிந்தது,” என்றார் விஷ்வ தேவா.
குழுவாக, யார் யார் எப்போது புள்ளிகள் எடுப்பது எனத் திட்டமிட்டு, ஒவ்வோர் ஆட்டத்திலும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டதாகவும் தவறுகள் நடக்கும்போது குழுவாகச் சேர்ந்து அவற்றைச் சரிசெய்ததாகவும் அவர் கூறினார்.
சென்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளைவிடக் கூடுதல் போட்டி அனுபவத்துடன் பெண்கள் அணி களமிறங்கியதாகக் கூறினார் சிந்தினி.
“நாங்கள் இதுவரை சந்திக்காத புதிய நாடுகளுடன் இம்முறை விளையாடினோம். நிறைய கற்றுக்கொண்டோம். குறிப்பாக, நாங்கள் மேம்படுவதற்கு இந்திய அணி உதவவும் செய்தது. முதல் ஆட்டத்துடன் கடைசி ஆட்டத்தை ஒப்பிடுகையில் என்னால் முன்னேற்றத்தை உணரமுடிந்தது,” என்றார் சிந்தினி.
“எங்கள் அணி விளையாடிய விதம் மனநிறைவை அளிக்கிறது. அரையிறுதிக்குச் செல்லும் இலக்கை வைத்திருந்தோம். அதை அவர்கள் மனத்தில் பதித்து, வைராக்கியத்துடன் விளையாடினர். என் உதவிப் பயிற்றுவிப்பாளர் சுந்தர் அண்ணாதுரை பேருதவியாக இருந்தார்,” என்றார் ஆண்கள் அணித் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் மத்திய சிங்கப்பூர் கபடிச் சங்கத் தலைமைச் செயலாளருமான முகம்மது காலித் மரைக்காயர்.
“போட்டிகளில் பங்கேற்கப் பல இடங்களில் இருந்தும் எங்களுக்கு அழைப்பு வருவது எங்கள் அணிகளின் வளர்ச்சியைக் காட்டுகிறது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் பெண்களுக்காக நடைபெறவுள்ள தேசியக் கபடிப் போட்டிகள்மூலம் புதிய திறன்களைக் கண்டறிவோம்,” என்றார் பெண்கள் அணித் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் மத்திய சிங்கப்பூர் கபடிச் சங்கத் தலைவருமான சிவநேசன்.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் ஆண்களுக்கான தேசியப் போட்டிகள் (U-22, பொதுப் பிரிவுகள்) நடைபெறவுள்ளன. மேல்விவரங்கள் @kac_sg இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவிக்கப்படும்.
