2016ல் சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிரந்தர மேல்முறையீட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி ஜூடித் பிரகாஷ், 72.
சட்டத்துறையில் அவரது முன்னோடித்துவமிக்க பங்களிப்புக்காகவும் பெண்களுக்கு அத்துறையிலிருந்த தடைகளைத் தகர்த்தெறிந்து பாதை அமைத்துத் தந்ததற்காகவும் நீதிபதி ஜூடித் பிரகாஷ் 2024க்கான ‘ஹெர் வேர்ல்ட்’ சிறந்த பெண்மணி விருதைப் பெற்றார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டத் துறையில் செயலாற்றிய அவர், குற்றவியல் வழக்கறிஞர் டேவிட் மார்ஷலின் கீழ் பயிற்சி பெற்று தமது சட்டப் பயணத்தைத் தொடங்கினார்.
பின்னர் வணிகச் சட்டத்தில் ஆர்வம் கொண்ட நீதிபதி பிரகாஷ், ‘ட்ரூ அண்ட் நேப்பியர்’ சட்ட நிறுவனத்தில் சேர்ந்து, பிறகு அதன் பங்குதாரராகவும் ஆனார்.
1992ல் உச்ச நீதிமன்றத்தில் நீதித்துறை ஆணையரான அவர், 1995ல் உயர் நீதிமன்ற நீதிபதியானார். அவர் இசைவுத் தீர்ப்பு (arbitration) வழக்குகளை வழங்குவதில் 2022 வரை தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
நீதிபதி ஜூடித் பிரகாஷ் சட்டச் சீர்திருத்தக் குழுவின் (Law Reform Committee) தலைவராகப் பணியாற்றியதோடு, அமர்விலிருந்த 31 ஆண்டுகளில் சுமார் 645 தீர்ப்புகளை வழங்கி சிங்கப்பூரின் சட்டச் சூழலை வடிவமைத்துள்ளார்.
பொதுவாக குடும்பச் சச்சரவுகளால் ஏற்படும் மணமுறிவுகள் பிள்ளைகளுக்கே அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதை உணர்ந்த அவர், இதுவே தமக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டச் சேவைக்கு அப்பாற்பட்டு, நீதிபதி பிரகாஷ் மேலும் பல தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்துள்ளார். பெண்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்குவதிலும் அவர்களுக்கு வழிகாட்டுவதிலும் நீதிபதி ஜூடித் பிரகாஷ் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.
1974ல் நிறுவப்பட்ட சிங்கப்பூர் பெண் வழக்கறிஞர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்ததோடு, 1996 முதல் 2021 வரை 25 ஆண்டுகளாக ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறங்காவலர் குழு, சிண்டா அறங்காவலர் குழு முதலிய அமைப்புகளிலும் அவர் சேவையாற்றி உள்ளார்.
அக்டோபர் 14ஆம் தேதி விருதுபெற்ற அவர், தமது பயணத்தில் பெரும்பங்கு வகித்தவர்களுக்கும் தமது குடும்பத்தினர் உட்பட சட்டப் பயணத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
பதக்கம் இல்லாத ஏக்கம் தீர்ந்தது
ஏறத்தாழ 50 ஆண்டுகளாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் ஏதுமின்றி இருந்த சிங்கப்பூரின் ஏக்கம், 2023ல் ஹாங்ஸோவ் விளையாட்டுப் போட்டியில் சாந்தி பெரேராவின் வெற்றியால் தீர்ந்தது.
தடகளப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளால் சிங்கப்பூரின் ‘ஸ்பிரிண்ட் குவீன்’ என்று அழைக்கப்படும் இவர், 2024க்கான ‘ஹெர் வேர்ல்ட்’ இளம் பெண் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.
சிறுவயதில், தன் சகோதரி வேலரி தடகளப் போட்டிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவதைக் கண்ட சாந்திக்கு தானும் அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தொடர் பயிற்சியால் 17 வயதுக்குள் 100 மீட்டர் ஓட்டத்தை 12 வினாடிகளுக்குள் ஓடிய முதல் சிங்கப்பூர் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
தொடக்கக் காலத்தில் போட்டிகளில் வாகை சூடினாலும் 2018ல் தொடையில் காயம் ஏற்பட்டதால் அவரின் தடகளப் பயணத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவர் உடலுறுதியையும் உதவித்தொகையையும் இழக்க நேரிட்டது.
அதுபோன்ற தருணங்களில், “நான் ஏன் விளையாட்டுத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்தேன் என எனக்கு நானே பலமுறை கேட்டுக்கொண்டேன்,” எனக் கூறினார் சாந்தி.
“வாழ்வில் சறுக்கல்கள் நம்மை யாரென்று தீர்மானிக்க விடக்கூடாது. என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்,” என்றார் அவர்.
2022ல் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றது சாந்திக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
2023ல் தடகளப் பயணத்தில் அவர் பல ஏறுமுகம் கண்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை நிகழ்த்தியது, பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது, 2024ல் 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்தது போன்றவை அவை.
விருது விழாவில் பேசிய சாந்தி, “நான் எப்போதெல்லாம் என் இலக்கிலிருந்து விலகிச் செல்வதை உணர்கிறேனோ, அப்போதெல்லாம் என் பயணத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் சக்தி என்னிடம் மட்டுமே உள்ளது என்றும் நான் அடைய விரும்பும் இலக்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்று எனக்குள் கூறிக்கொள்வேன்,” என்றார்.