யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘விழிகளிலே வெள்ளோட்டம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு கண்டது.
இந்த நூல் சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவில் வெளியீடு கண்டது.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் மார்ச் 29ஆம் தேதி தேசிய நூலகத்தின் ‘தி பாட்’ அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
அவர், எழுத்தாளரின் நூல்வெளியீடு அறநிறுவனங்களுக்குப் பயனாக அமைவதைத் பாராட்டினார். தொடர்ந்து அறப்பணிகளில் ஈடுபடும் நூலாசிரியரையும் வாழ்த்தினார்.
நூலாய்வு செய்த மா. அர்ஜுன், 19 கதைகளை உள்ளடக்கிய நூலை ஆய்வுரை செய்தார்.
பல கதைகள் சிறுகதைக்கான இலக்கணத்தில் எழுதப்பட்டிருப்பதாகவும், உள்ளார்ந்த உணர்வுகளை சிறப்பாகச் சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுகதைகளில் முடிவு எப்படி இருக்குமோ என்று வாசகர்கள் கடைசிவரை தீர்மானிக்கமுடியாமல், கடைசியில் அதை அவிழ்ப்பது சிறப்பு என்றும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் யூசுப் ரஜித், தாம் 45 வயதுவரை எதுவுமே எழுதியதில்லை என்று சொன்னார்.
45வது வயதில் சிங்கப்பூர் மண்ணை மிதித்த பிறகுதான் எழுதத் தொடங்கியதாக அவர் சொன்னார்.
எழுத்து, சிங்கை மண் தமக்குத் தந்த கொடை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தம் நூல்வெளியீடு சார்ந்த அறப்பணிகள் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் சார்பில்தான் மேற்கொள்ளப்படுகிறது என்று திரு ரஜித் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் நிறைவு அங்கமாக, தொடக்ககாலம் முதல் இந்த அறப்பணிக்கு பேராதரவு வழங்கிய ஏறத்தாழ 15 தலைவர்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு மரியாதை செய்தார் எழுத்தாளர் ரஜித்தின் மகன் கலைஞர் யங்ராஜா.

