தலைமுறைகளாகத் தொடரும் சமூகப் பிணைப்பு
சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸுடன் 1800களில் கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்திறங்கிய இந்தியக் குடியேறிகளுக்கு 1827ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்ரீ மாரியம்மான் கோயில் தொடக்க காலத்தில் புகலிடமாகவும், கருத்து வேறுபாடுகளின்போது முடிவுகளை எடுப்பதற்கான வளாகமாகவும் செயல்பட்டது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், கோயில் பூசாரிகள் மட்டுமே இந்துக்களுக்கு பதிவுத் திருமணங்களைச் செய்துவைக்க அங்கீகரிக்கப்பட்டனர். இதனால், 50 காசு கட்டணத்தில் சட்டபூர்வமான பதிவுத் திருமண நிகழ்வுகள் கோயிலில் நடந்திருப்பதை சான்றிதழ்கள் சில வெளிப்படுத்தின.
1942ஆம் ஆண்டு ஜப்பானியர் சிங்கப்பூரைக் கைப்பற்றிய காலத்திலும் கோயிலில் பதிவுத் திருமணங்கள் நடந்துள்ளன. திருமணப் பதிவுச் சான்றிதழில் தேதி மட்டும் ஜப்பானிய நாட்காட்டியைப் பின்பற்றியிருக்கும்.
சிங்கப்பூர் தனிநாடாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1973ஆம் ஆண்டில் நினைவுச் சின்னப் பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திடம் வாரியத்தால் (Preservation of Sites and Monuments) ஸ்ரீ மாரியம்மன் கோயில் தேசிய நினைவுச்சின்னமாக அங்கீகாரம் பெற்றது.
“பல இந்துக்களுக்கு முதன்மை வழிபாட்டுத் தலமாக இருப்பதுடன், சிங்கப்பூரின் வளமான கலாசாரம், வரலாற்றின் ஒரு பகுதியாகவும் தேசிய நினைவுச்சின்னமாகவும் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது,” என்றார் கோயிலின் துணைத் தலைவர் கிரிதரன், 58.
பக்தர்களுடன், ஆலயத்தின் வரலாறு, கட்டடக்கலையை ரசிப்பதற்கு ஒருநாளில் ஏறத்தாழ 1,000 வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் வருவதுண்டு என்று திரு கிரிதரன் பகிர்ந்தார்.
நினைவுச்சின்னமாக இருப்பதால் தேசிய நினைவுச்சின்ன பழைமைப் பாதுகாப்பு வாரியம் விதித்த வழிகாட்டுதல்களின்படி ஸ்ரீ மாரியம்மன் கோயில் அதன் அசல் கூறுகளை அதிகபட்சமாகத் தக்கவைத்திருக்க வேண்டும்.
“‘சைனா டவுன்’ வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தமிழர்களோடு சீன சமூகத்தினருக்கும் வழிபாட்டுத் தலமாக உள்ளது. இது, சிங்கப்பூர் பல்லின, மத சமூகமாக இருப்பதை மிகவும் அழகாகப் பிரதிபலிக்கிறது,” என்றார் திரு கிரிதரன்.
தொடர்புடைய செய்திகள்
“கோயிலின் ஆண்டு விழாவான தீமிதித் திருவிழாவின்போது சில சீன நண்பர்களின் வணிகங்கள் பாதிக்கப்படுகின்றன. எனினும், எவரும் புகார் செய்வதில்லை என்றார் அவர்.
பல தலைமுறைகளைக் கண்ட ஸ்ரீ மாரியம்மன் கோயில் அடுத்து வரும் தலைமுறைகளும் விரும்பித் திரளும் வழிபட்டுத் தலமாகவும், சிங்கப்பூரின் கலாசார அடையாளத்தின் சான்றாகவும் திகழ வேண்டும் என்றார் திரு கிரிதரன்.
சமூக உணர்வு பரிமளிக்கும் பள்ளிவாசல்
ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் வலது பக்கத்தில், பளிச்சென்ற பச்சை வண்ணத்தில் வானத்தை அண்ணாந்து பார்க்கிறது ஜாமிஆ சூலியா பள்ளிவாசல்.
1974ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாகவும் அறிவிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல் ‘பெரிய பள்ளி’ என்றும் அழைக்கப்படும்.
1950களில் ‘பால் பள்ளி’ என்றும் அழைக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார் ஜாமிஆ சூலியா பள்ளிவாசலின் துணைத் தலைவர் அகமது ஜலாலுதீன், 58.
“பால் இங்கு விற்கப்பட்டு, இங்கிருந்து அதிக அளவில் விநியோகிக்கப்பட்டது,” என்றார் திரு ஜலாலுதீன்.
சிங்கப்பூரின் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றான ஜாமிஆ சூலியா, சைனா டவுன் வட்டாரத்தில் குடியேறிய வணிகர்கள், நாணயமாற்றுத் தொழில் புரிந்த சூலியா சமூகத்தினரின் கணிசமான எண்ணிக்கையை நினைவூட்டுகிறது.
இந்திய முஸ்லிம் குடியேறிகள் ஒன்றுகூடி, பிரார்த்தனை செய்து, வாழ்வதற்கான பாதுகாப்பான சமூக இடமாக ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் மாறியது.
பள்ளிவாசலின் பரந்துவிரிந்த வளாகம் கவனிக்கத்தக்க ஒன்றாகும். அந்த வளாகம் புனித ரமலான் மாதத்தில் மிகவும் பயனாக இருப்பதாக திரு ஜலாலுதீன் குறிப்பிட்டார்.
“அதிக அளவில் உணவு சமைக்கப்பட்டு அனைத்து சமய மக்களுக்கும் பரிமாறப்படும்,” என்றார்.
சீனர்கள் அதிகம் வசிக்கும் வட்டாரத்தின் மையப்பகுதியில் அமைந்திருப்பதும் இந்துக் கோயிலுக்கு அருகில் இருப்பதும் உறவின் உணர்வைத் தருகிறது என்றார் திரு ஜலாலுதீன்.
ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தீமிதித் திருவிழாவுக்குப் பள்ளிவாசல் வளாகத்தில் சில உணவு வகைகள் சமைக்கப்படுவது நல்லிணக்கத்தின் ஓர் அடையாளம்.
“சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள எங்கள் பக்கவாட்டு நுழைவாயில்கள் வழியாகச் சமைத்து எடுத்துச் செல்வார்கள்,” என்றார் திரு ஜலாலுதீன்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலின் கட்டடக்கலையும் முதன்மை செயல்பாடும் என்றும் நீடித்திருக்கும். அதே வேளையில், அது 60 ஆண்டுகளில் ஒரு சரணாலயத்திலிருந்து கற்றல் தளமாகப் பரிணமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமயம் சார்ந்த நடவடிக்கைகளையும் வழிபாடுகளையும் எளிதாக்குவதுடன், முஸ்லிம்கள், மற்ற சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத, சமூக எண்ணங்கள், நம்பிக்கைகள்குறித்த கருத்தரங்குகளுக்கு ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் ஏற்பாடு செய்கிறது.
நிதி உதவி தேவைப்படும் இந்திய முஸ்லிம் குடும்பங்களுக்கு உதவிக்கரமாகவும் பள்ளிவாசல் திகழ்கிறது.
“இந்திய முஸ்லிம் சமூகத்திற்கான வழிபாட்டுத் தலமாக மட்டுமில்லாமல், ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் எல்லா சமூகத்தினருக்கும் உதவி அல்லது அமைதி அளிக்கக்கூடிய பாதுகாப்பான இடமாகவும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்,” என்று கூறினார் திரு ஜலாலுதீன்.
நேசம், பரிவு, பகிர்வை பரப்பும் திருச்சபை
அங் மோ கியோ, பிஷான் பகுதிகளில் தமிழில் கிறிஸ்தவ வழிபாட்டின் தேவையைத் தொடர்ந்து, அங் மோ கியோ தமிழ் மெத்தடிஸ்ட் திருச்சபை 1979ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
அப்போது திருச்சபைக்கு 39 பேர் மட்டும் வந்து பிரார்த்தனை செய்தனர் என்று பகிர்ந்தார் தேவாலய செயலவைக் குழுத்தலைவர் சாம்ராஜ் அசிர் ஜயராஜ், 49.
“பெரிய கட்டடத்தை குறைந்த மக்களே பயன்படுத்தியதால் ஆங்கில, சீன வழிபாடு செய்யும் மக்கள் எங்களுடன் இணைந்தனர்,” என்றார்.
சுதந்திரம் பெற்ற தொடக்க காலத்திலிருந்து 39 பேர் வழிபட்ட சபையில் தற்போது கிட்டத்தட்ட 200 தமிழர்கள் வழிபடுகின்றனர்.
“ஆங்கில, சீன மொழி வழிபாடுகளுக்கு வருவோர் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு கூடியுள்ளது,” என்றார் திரு அசிர்.
பெருந்தொற்றுக் காலத்தில் திருச்சபை கூட முடியாத ஒரு சூழ்நிலை. வெறுமையாக இருந்த திருச்சபை கட்டடம் கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, வீடில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு ஒரு சரணாலயமாக இருந்ததையும் நினைவுகூர்ந்தார் திரு அசிர்.
மொழி என்பது திருச்சபை வழிபாடுகளில் முக்கியமான கூறு.
இறைவனைப் போற்றிப் பாடும் பாடல்கள் தமிழ் ராகங்களில் அமைந்திருக்கும் என்ற திரு அசிர், “இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு இந்தப் பாடல்கள் ஆறுதலாக உள்ளன,” என்றார்.
மொழிகள் வேறுபட்டாலும் வழிபாட்டுக்கும் சமூக முயற்சிகளுக்கும் ஒன்றிணையும் தருணம் நாட்டின் நல்லிணக்கத்தை வலிமைப்படுத்துகிறது.
“சமூக ஒருங்கிணைப்பு, இன நல்லிணக்கம், மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்துவது போன்றவை தொடர்ந்து நிலைத்து நிற்கும்,” என்றார்.
அங் மோ கியோ, பிஷான் வட்டாரங்களில் வசிக்கும் வழிபாட்டாளர்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்தத் திருச்சபை வளர்ச்சியடைந்து கடந்த 45 ஆண்டுகளாக இளையர்களை ஆதரிக்கும் ஒரு முயற்சியாக மாறியது.
“எங்கள் சில சேவைகளும் முயற்சிகளும் இளையர்களால் வழிநடத்தப்படுகின்றன,” என்றார் திரு அசிர்.
“‘உன்னை போலப் பிறரை நேசிக்க வேண்டும்’ என்பது ஒரு முக்கிய கிறிஸ்துவக் கோட்பாடு. அதற்கு ஏற்ப, கடந்த பல ஆண்டுகளாகத் திருச்சபை அனைவரையும் வரவேற்கிறது,” என்றார் அவர்.
இன்னும் அறுபது ஆண்டுகளுக்கு நேசமும் நல்லிணக்கமும் தொடர்வது அடுத்த தலைமுறையினரின் கைகளில் உள்ளது என்று அவர் கூறினார்.

