காலம் கடந்தும் மங்காத தீபாவளி நினைவுகள்

காலம் கடந்தும் மங்காத தீபாவளி நினைவுகள்

1 of 4
எஸ்பிஎச் மீடியா கோப்புப் படம்
எஸ்பிஎச் மீடியா கோப்புப் படம்
எஸ்பிஎச் மீடியா கோப்புப் படம்
எஸ்பிஎச் மீடியா கோப்புப் படம்

08 Nov 2026 - 8:21 am

5 mins read

விடியற்காலையில் கமழும் சாம்பிராணி மணம், வீதியெங்கும் எதிரொலிக்கும் பட்டாசுச் சத்தம், சுடச்சுடப் பரிமாறப்படும் பலகாரங்களின் சுவை என, சிங்கப்பூரின் கடந்த காலத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் அலாதியானவை.

பண்டிகை என்பது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடிந்துவிடாமல், அக்கம்பக்கத்தினர் அனைவரையும் ஓரணியில் திரட்டும் சமூக விழாவாக அமைந்தது.

காலவெள்ளத்தில் கொண்டாட்ட முறைகள் மாறியிருக்கலாம் என்றாலும் நம் முதியோரின் நெஞ்சங்களில் அந்தப் பொற்கால நினைவுகள் இன்றும் பசுமையாக வாழ்கின்றன.

அண்டை வீட்டாருடன் பாகுபாடற்ற நல்லுறவு

கடந்த 1955ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்து, செம்பவாங் கடற்படைத் தளக் குடியிருப்பில் வளர்ந்த 71 வயது பேருந்து ஓட்டுநர் திரு வீ.தமிழ்மறையானுக்கு தீபாவளி என்பது அண்டைவீட்டாரை பிணைக்கும் ஒரு பண்பாட்டுப் பண்டிகையாக திகழ்ந்தது.

அக்காலத்தில் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் எனப் பல்லின மக்களும் அக்குடியிருப்புகளில் ஒரே குடும்பமாக வாழ்ந்தனர். தீபாவளி நாளன்று வீட்டில் தயாரித்த முறுக்கு, அச்சுமுறுக்கு, கட்டி உருண்டை உள்ளிட்ட பலகாரங்களைத் தாம்பாளத்தில் வைத்து அண்டை வீட்டாருக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்ததாக அவர் கூறினார்.

தமது 11 வயதில் குடும்பத்தினருடன் திரு வீ.தமிழ்மறையான் (வலக்கோடி).
தமது 11 வயதில் குடும்பத்தினருடன் திரு வீ.தமிழ்மறையான் (வலக்கோடி). - படம்: வீ.தமிழ்மறையான்

பலகாரங்களைப் பெற்றுக்கொள்ளும் அண்டைவீட்டார், அன்பின் அடையாளமாக ஒரு வெள்ளி அல்லது இரண்டு வெள்ளி வழங்கினர். அதேபோன்று சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள் ஆகிய நன்னாள்களின்போதும் பிற இனத்தவரும் தங்கள் இல்லப் பலகாரங்களை அவரது குடும்பத்துடன் பகிர்ந்துகொள்வர்.

“எந்தவித இனப் பாகுபாடும் இன்றி அனைவரின் வீடுகளுக்கும் சென்று பலகாரங்களைக் கொடுப்போம்,” என்று நினைவுகூர்ந்தார் திரு தமிழ்மறையான்.

பண்டிகை நாள்களில் பலகாரங்களைச் சுடுவதற்கு அண்டை வீட்டுப் பெண்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வர். அவரது தாயாரும் சீன, மலாய் அண்டைவீட்டாரின் வீடுகளுக்குச் சென்று பலகாரங்கள் செய்யக் கைகொடுப்பார்.

“புத்தாடை, பலகாரம், வெடி ஆகிய மூன்றும்தான் அக்காலத்தில் சிங்கப்பூரில் தீபாவளிக்கான முக்கிய அடையாளங்கள்,” என்று திரு தமிழ்மறையான் கூறினார்.

லிட்டில் இந்தியாவில் பொருள்கள் வாங்கும் மக்கள்.
லிட்டில் இந்தியாவில் பொருள்கள் வாங்கும் மக்கள். - எஸ்பிஎச் மீடியா கோப்புப் படம்

அக்காலத்தில் சிறிய பட்டாசுகள் முதல் பெரிய தோப்பு வெடிகள் வரை வாங்கி வெடிப்பது வழக்கம். சிலர் பெரிய வெடிகளை மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிட்டும் வெடிப்பர். 1972ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அபாயகரமான பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீபாவளிக் கொண்டாட்டங்களின் அத்தகைய தனித்துவமான சூழல் மெல்ல மறையத் தொடங்கியதாக அவர் கூறினார்.

இன்று பண்டிகைப் பலகாரங்கள் பெரும்பாலும் கடைகளில் வாங்கப்பட்டாலும், கடந்த ஆண்டு காலமான தம் மனைவி, அதுவரை அதிரசம், அச்சுமுறுக்கு போன்ற பலகாரங்களைக் கடைகளில் வாங்காமல் கைகளாலேயே வீட்டில் தயாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அண்டைவீட்டாருடன் இணைந்து பலகாரம் செய்வதும், வீடு வீடாகச் சென்று அவற்றைப் பகிர்ந்துகொள்வதும் தற்காலத்தில் குறைந்துவிட்டதாகத் திரு தமிழ்மறையான் கருதுகிறார்.

பண்டிகை நாள்களில் மாலையில் மத்தாப்புகள் கொளுத்துவது போன்ற பழைய எளிய மகிழ்ச்சிகளையும், பலகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் நற்பண்பையும் மீண்டும் ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் அவர்.

அத்தகைய பகிர்வுகள் சமூக நல்லிணக்கத்தையும் அண்டைவீட்டாருடனான உறவையும் மேலும் வலுப்படுத்தும் என்பது அவரது நம்பிக்கையாகும்.

அதிகாலைக் குடும்பச் சடங்குகளின் அழகு

சமூகத்தோடு இணைந்த கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க, குடும்பங்களுக்குள் அரங்கேறிய அதிகாலைச் சடங்குகளும் பாரம்பரிய நிகழ்வுகளும் பலரின் மனங்களில் நீங்காத நினைவுகளாக நிலைத்துள்ளன.

சீனக் குடும்பத்தில் பிறந்து, தமிழ்க் குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்தார் 76 வயது திருவாட்டி தேவகி சீனிவாசராஜம். கெப்பல் பகுதியில் அமைந்திருந்த அப்போதைய துறைமுக அதிகார ஆணைய ஊழியர் குடியிருப்பில், ஆங்கிலேயர் பாணியிலான பெரிய வீடொன்றில் அவரது குடும்ப வாழ்வு அமைந்திருந்தது.

இளவயதில் திருவாட்டி தேவகி சீனிவாசராஜம் (வலது).
இளவயதில் திருவாட்டி தேவகி சீனிவாசராஜம் (வலது). - படம்: தேவகி சீனிவாசராஜம்

அக்காலத்தில் தீபாவளிக்குப் பல மாதங்களுக்கு முன்பே துணிகள் வாங்குவது, வீட்டின் சுவர்களுக்குப் புதிய சாயம் பூசுவது, புதிய திரைச்சீலைகள் மாற்றுவது என அதிக ஆவலுடன் ஆயத்தப் பணிகள் களைகட்டின.

தீபாவளியன்று வண்ணமயமான ஆடைகளை அணிந்து, அவற்றுக்குப் பொருத்தமான அணிகலன்களைத் தேர்ந்தெடுத்து அலங்கரித்துக்கொள்வது திருவாட்டி தேவகிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் இவ்வாறு அழகாகத் தயாராகிக் கொண்டாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்.

தீபாவளிப் பண்டிகைக்காகச் சேலைகளும் புத்தாடைகளும் வாங்கும் பெண்கள்.
தீபாவளிப் பண்டிகைக்காகச் சேலைகளும் புத்தாடைகளும் வாங்கும் பெண்கள். - எஸ்பிஎச் மீடியா கோப்புப் படம்

பண்டிகையன்று அதிகாலை 5 மணிக்கே தாத்தாவும் பாட்டியும் அனைவரையும் தட்டியெழுப்பிவிடுவர் என்றார் அவர்.

“தூக்கம் கலையாத கண்ணோடு எழுந்து, தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து, சாம்பிராணிப் புகைகாட்டி குளிப்போம். பின்னர் புத்தாடை அணிந்து பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசிபெறுவது மிக முக்கியச் சடங்காக இருந்தது,” என்று திருவாட்டி தேவகி கூறினார்.

அதிகாலையில் பாட்டி அம்மியில் அரைத்து வைக்கும் மீன்கறி மசாலாவின் நறுமணம் வீதியெங்கும் மணக்கும் என்றும் அந்த வாசனையில் ஈர்க்கப்பட்டு அக்கம்பக்கத்திலிருக்கும் நண்பர்கள் கிண்ணங்களை எடுத்துக்கொண்டு ஓடிவர, பாட்டியும் மகிழ்ச்சியோடு கறி ஊற்றிக் கொடுப்பார் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

பதிலுக்கு அவர்களும் தங்கள் பண்டிகைகளின்போது பலகாரங்களைப் பகிர்ந்துகொள்வர் என்பது அவரது இனிமையான நினைவு.

ஒருவர் அச்சைப் பிடிக்க, மற்றொருவர் மாவைப் பிழிய, இன்னொருவர் எண்ணெய்யில் பொரித்து எடுக்க எனப் பலரும் ஒன்றுகூடி முறுக்கு சுட்ட காலம் அது. இன்று அச்சிரமங்கள் ஏதுமின்றி கடைகளில் வாங்கிய பலகாரக் கொள்கலன்கள் வீடுகளை ஆக்கிரமித்துவிட்டதாக அவர் கூறினார்.

அகல் விளக்குகளை ஏற்றும் பெண்மணி.
அகல் விளக்குகளை ஏற்றும் பெண்மணி. - எஸ்பிஎச் மீடியா கோப்புப் படம்

தற்காலத்தில் சிலர் காலையில் தாமதமாக எழுவதையும், தீபாவளி நாளில் கதவுகளைப் பூட்டிவிட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றுவிடுவதையும் சுட்டிக்காட்டிய அவர், பண்டிகையின் கூட்டுக்குடும்ப உணர்வு குறைந்துவருவது குறித்துச் சற்று வருத்தம் தெரிவித்தார்.

இருப்பினும், இன்றும் தமது இல்லத்தில் அதே அதிகாலைப் பழக்கவழக்கங்களைத் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார் திருவாட்டி தேவகி. தீபாவளி நாளன்று அதிகாலையில் எழுந்து சாம்பிராணி புகையிட்டு, தோசையும் கறியும் சமைத்து ஆயத்தமாகிவிடுவார். ஆண்டுதோறும் காலை உணவிற்காக அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இன்றும் அவரது இல்லத்திற்கு வருகை தருகின்றனர்.

சிறுவயதில் தம் பேத்திகள் தலைநிறைய பூச்சூடி, பாவாடை சட்டை அணிந்து இல்லமெங்கும் ஓடி விளையாடிய காட்சிகளே தமது வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி நினைவுகளாகப் பதிந்துள்ளதாகத் திருவாட்டி தேவகி குறிப்பிட்டார்.

எப்போதும் திறந்திருந்த கதவுகள்

தமது 90 வயதிலும் அக்கம்பக்கத்தாருடனான உறவையும் குடும்பப் பாசத்தையும் போற்றி வாழும் திருவாட்டி ரத்னம் பெரியசாமிக்கு தீபாவளி என்பது அனைவரையும் வரவேற்கும் பண்டிகை.

சிறுவயதில் ரேஸ் கோர்ஸ் ரோடு, ரங்கூன் ரோடு பகுதிகளில் அமைந்திருந்த, பெரிய தோட்டத்துடன் கூடிய வீட்டில் வளர்ந்த அவருக்கு, அண்டைவீட்டார் அனைவருமே உறவினர்களாகத் திகழ்ந்தனர்.

“அந்தக் காலத்தில் யாருடைய வீட்டிலும் கதவு சாத்தியிருக்காது,” என்றார் திருவாட்டி ரத்னம்.

அன்றைய நாளில் பண்டிகையன்று வீட்டில் விதவிதமாகப் பலகாரம் செய்து அண்டைவீட்டாருக்குக் கொடுப்பதும், குடும்பமாகச் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குச் செல்வதும் அவருக்கு வழக்கம்.

1970களில் தம் கணவர், ஐந்து குழந்தைகளுடன் திருவாட்டி ரத்னம் பெரியசாமி.
1970களில் தம் கணவர், ஐந்து குழந்தைகளுடன் திருவாட்டி ரத்னம் பெரியசாமி. - படம்: ரத்னம் பெரியசாமி

அண்டைவீட்டாருடனான அந்த நெருக்கத்தை இன்றளவும் பேணிவரும் திருவாட்டி ரத்னம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி தினத்தன்று தம்முடன் சிறுவயதில் வளர்ந்தவர்களை இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்து வருகிறார்.

முன்கூட்டியே அழைப்பு விடுத்து நடத்தப்படும் இந்த விருந்தோம்பலில் 50க்கும் மேற்பட்ட சீன, மலாய் நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் எனப் பலரும் தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் ஆண்டுதோறும் கலந்துகொண்டு அன்பைப் பகிர்ந்துகொள்வதாக அவர் கூறினார். நண்பகல் தொடங்கும் கொண்டாட்டம் இரவுவரை நீடிக்கும்.

தீபாவளித் திருநாளன்று பேரப்பிள்ளைகளுடன் திருவாட்டி ரத்னம் பெரியசாமி.
தீபாவளித் திருநாளன்று பேரப்பிள்ளைகளுடன் திருவாட்டி ரத்னம் பெரியசாமி. - படம்: ரத்னம் பெரியசாமி

விருந்தினர்களுக்காக மீன், கோழி உணவு வகைகளைச் சமைப்பதுடன், சைவ உணவுகளையும் தாமே தயாரித்துப் பரிமாறுவார் திருவாட்டி ரத்னம். அண்டைவீட்டாரும் முன்னாள் மாணவர்களும் தம்மை அன்புடன் தழுவி ‘அம்மா’ என்று ஆங்கிலத்தில் அழைக்கும்போது அளவற்ற மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.

பண்டிகைகள் கொண்டாடப்படும் முறைகள் காலப்போக்கில் மாறியிருக்கலாம். ஆனால், இனம், மொழி கடந்து அனைவரையும் ஒரு குடும்பமாக இணைத்த அந்தப் பொற்காலத் தீபாவளி நினைவுகள், வெறும் கடந்த காலப் பதிவுகளாக மட்டும் நின்றுவிடாமல், இன்றைய தலைமுறைக்கும் ஓர் அழகான வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

குறிப்புச் சொற்கள்
தீபாவளிதீபாவளி 2026முதியோர்கொண்டாட்டம்அண்டை வீட்டுக்காரர்குடும்பம்

தொடர்புடைய செய்திகள்