முதியோரை அரவணைக்கும் ரோட்டரி கிளப்பின் புதிய திட்டம்

முதியோரை அரவணைக்கும் ரோட்டரி கிளப்பின் புதிய திட்டம்

4 mins read
81534603-5c48-4b66-becd-81d2eb07ce1e
ரோட்டரி கிளப்பின் புதிய திட்டத்தின்வழி, ஆதரவற்ற முதியவர்கள் கிட்டத்தட்ட 300 பேருக்கு மேம்பட்ட ஆதரவு கிடைக்கக்கூடும். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

அடுத்த மூன்று ஆண்டுகளில் குவீன்ஸ்டவுன், தோ பாயோ, பிடோக் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்கள் கிட்டத்தட்ட 300 பேருக்குப் புதிய திட்டத்தின்கீழ் மேம்பட்ட ஆதரவைப் பெறும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

அவர்கள் வசிக்கும் இடத்திலேயே உடல்நலத்துடனும் பாதுகாப்புடனும் முதுமையைக் கழிக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சிங்கப்பூர் ரோட்டரி கிளப்பின் 92வது தலைவரின் பொறுப்பேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில், ‘ஐபிசி குரூப்’ (IPC Group) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ்குமார் பெருமாள் சுப்பையா, புதிய தலைவராக அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

பயணத்துறை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, நவீன மெய்நிகர்த் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவர், சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தைத் தாய்லாந்து, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளார்.

ரோட்டரி கிளப்பின் 92வது தலைவராகத் திரு ராஜ்குமார் பெருமாள் சுப்பையா பொறுப்பேற்றுக்கொண்டார்.
ரோட்டரி கிளப்பின் 92வது தலைவராகத் திரு ராஜ்குமார் பெருமாள் சுப்பையா பொறுப்பேற்றுக்கொண்டார். - படம்: சாவ்பாவ்

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான் சுன் சிங் கலந்துகொண்டார்.

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சட்ட அமைச்சு ஆகியவற்றின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா உள்ளிட்ட முக்கியப் பேராளர்களும் அதில் கலந்துகொண்டனர். இரவு உணவு விருந்து, நடனப் படைப்புகள், பியானோ இசை நிகழ்ச்சி, விருது வழங்கும் அங்கம் எனப் பல்வேறு அங்கங்களுடன் அந்த விழா நடந்தேறியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான் சுன் சிங் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான் சுன் சிங் கலந்துகொண்டார். - படம்: சாவ்பாவ்

நிகழ்ச்சியில், ‘குவீன்ஸ்டவுன் மரபுடைமைத் திட்டம்’ (Rotary Club of Singapore Connects Seniors - Queenstown Legacy Project) என்ற முன்னோடித் திட்டத்தை ரோட்டரி கிளப் அறிவித்தது.

அந்தத் திட்டத்தை ஆதரிக்க அடுத்த மூன்று ஆண்டுகளில் 520,000 வெள்ளிக்குமேல் நிதி திரட்ட அது இலக்கு நிர்ணயித்துள்ளது.

முதற்கட்டமாக, குவீன்ஸ்டவுனில் உள்ள முதியவர்கள் 15 பேரைக் கொண்டு 2026 ஜூலை முதல் 2027 ஜூன் வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

முதியோரின் பாதுகாப்பு, மின்னிலக்க மேம்பாடு, உடல்நலம், உணவுப் பாதுகாப்பு, சமூக இணைப்பு, தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பு, வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் கண்ணியம், பராமரிப்பாளர் ஆதரவு ஆகிய எட்டு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்வைத் திறன் பரிசோதனை, வீடுகளைச் சுத்தம் செய்யும் சேவை, மாதாந்தர உணவு விநியோகம், சமூக இணைப்புச் செயல்பாடுகள் போன்ற பல உதவிகள் அவர்களுக்குக் கிடைக்கும்.

முதியவர்கள் தனிமையாலும் தொழில்நுட்பப் புரிதல் இல்லாததாலும் சமுதாயத்திலிருந்து விலகி இருப்பதைத் திரு ராஜ்குமார் சுட்டிக்காட்டினார். நீண்ட காலமாக நாம் இழந்துவிட்ட ‘கம்போங்’ உணர்வை மீண்டும் கொண்டுவருவதே முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.

“அரசாங்கம் முதியவர்களுக்கு ஆதரவளிப்பதில் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது. அந்த அடிப்படையில் சமூகத்தில் உள்ள மனிதர்களுக்கு இடையிலான அக்கறையை முதியவர்கள் உணரச் செய்ய ரோட்டரி கிளப் விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

ரோட்டரி கிளப்பின் 92வது தலைவராகத் திரு ராஜ்குமார் பெருமாள் சுப்பையா பொறுப்பேற்றுள்ளார்.
ரோட்டரி கிளப்பின் 92வது தலைவராகத் திரு ராஜ்குமார் பெருமாள் சுப்பையா பொறுப்பேற்றுள்ளார். - படம்: சாவ்பாவ்

“முதியோர்க்கு ஆதரவளிப்பது நமது இரண்டாவது தேசியச் சேவையாகும். இந்த முறை சீருடை இல்லாமல் கருணையுடனும் கண்ணியத்துடனும் அதனைச் செய்கிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் 2021ல் தொடங்கிய ‘குவீன்ஸ்டவுன் சுகாதார வட்டாரம்’ திட்டத்துடன் இந்தத் திட்டமும் இணைந்து செயல்படும். ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் குறிப்பிட்ட உதவிகளை வழங்கும்.

இந்தச் சிறப்புத் திட்டத்தில் செங் ஹாங் நலம்பேணும் சேவைச் சங்கம், பெட்டர்.எஸ்ஜி, குவீன்ஸ்டவுன் சமூக மன்றம், ஸ்ரீ நாராயண மிஷன் உள்ளிட்ட அமைப்புகள் கைகோத்துள்ளன. அதில் தொண்டூழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஸ்ரீ நாராயண மிஷன் ஏற்றுள்ளது.

“எந்தவோர் அமைப்பாலும் தனிப்பட்டு எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. யாரும் கவனிப்பில்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒன்றுக்கொன்று துணைநிற்கும் பாதுகாப்பு வலைகளை உருவாக்குகிறோம்,” என்றார் ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். தேவேந்திரன்.

பல கைகள் இணையும்போது வேலைப்பளு குறையும் என்று குறிப்பிட்ட அவர், தொண்டூழியர்களுக்கு மறதிநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், முதியோர்க்கு எவ்வாறு உதவுவது என்பதற்கான முறையான பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார்.

தனியாக வாழும் முதியோரின் பாதுகாப்பைக் கண்காணிக்க பெட்டர்.எஸ்ஜி அமைப்பு ‘பிரசன்ஸ்’ (Presence) என்ற செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. முதியவர்களின் கைப்பேசிப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இது செயல்படும். 12 மணி நேரமாக அவர்களின் கைப்பேசியில் எந்த அசைவும் இல்லை என்றால், உடனடியாகத் தொண்டூழியர்களுக்கோ அதிகாரிகளுக்கோ எச்சரிக்கை விடுக்கப்படும்.

ரோட்டரி கிளப்பின் இளைய உறுப்பினர்கள் முதியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொடுப்பர். மின்னிலக்க மோசடிகளிலிருந்து முதியோரைப் பாதுகாக்க மெய்நிகர்த் தொழில்நுட்பம் மூலமாகச் சிறப்பு விழிப்புணர்வுப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. இந்தத் தொழில்நுட்ப வசதிகளைத் திரு ராஜ்குமாரின் நிறுவனமான ‘ஐபிசி குரூப்’ இலவசமாக வழங்கவுள்ளது.

சமூக அமைப்புகளின் பங்களிப்பைத் தமது உரையில் பாராட்டிய அமைச்சர் சான், அரசாங்கத்தின் திட்டங்களால் மட்டும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: சாவ்பாவ்

“முழுக்க முழுக்க அதிகாரபூர்வ அமைப்புகளை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு சமூகம், பொறுப்பேற்று சமுதாயத்திற்குப் பங்களிக்கும் உணர்வையும் மனிதர்களுக்கு இடையிலான இணைப்பையும் இழக்க நேரிடும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நேரம், திறமை, செல்வம், நல்ல தொடர்புகளைக் கொண்டவர்கள் எளிதில் பாதிப்படையக் கூடியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முன்வர வேண்டும் என்றார் அவர்.

“வெற்றி என்பது மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் நமது சாதனைகளால் அளவிடப்படுவதில்லை. மாறாக, நாம் சமூகத்திற்குச் செய்யும் பங்களிப்புகளாலேயே வரையறுக்கப்படுகிறது,” என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்