இன்பக் கற்றலைக் கொண்டாடிய கருத்தரங்கம்

இன்பக் கற்றலைக் கொண்டாடிய கருத்தரங்கம்

2 mins read
6cbcd560-1ed6-4280-8d78-5a400ad9d020
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், சனிக்கிழமை (ஏப்ரல் 18) நிகழ்ந்த இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வந்த திருமதி கவிதா ஜவஹர் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார். - படம்: ஹர்ஷவர்த்தினி

செய்தி: ஹர்ஷவர்த்தினி, வெங்கடேசன் வித்யா லட்சுமி

மாணவர்களுக்கு மகிழ்வூட்டும் கற்றல் அனுபவத்தை மகிழ்வுடன் கற்பிக்கும் ஆசிரியர்களால் மட்டுமே வழங்கமுடியும்.

அந்தக் கருத்தை எடுத்துக்கூறியது, ‘மகிழ்வூட்டும் கற்பித்தல் என்னும் கலை’ என்ற கருத்தரங்கம்.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், சனிக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், தமிழகத்திலிருந்து வந்த திருமதி கவிதா ஜவஹர் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார்.

அவர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தமிழ் ஆசிரியர்கள் வகிக்கும் பங்கை வலியுறுத்தும் பல கருத்துகளை நகைச்சுவைக் கலந்த பாணியில் முன்வைத்தார்.

நகைச்சுவைக் கலந்த திருமதி கவிதா ஜவஹரின் உரையைக் கேட்கும் பார்வையாளர்கள்.
நகைச்சுவைக் கலந்த திருமதி கவிதா ஜவஹரின் உரையைக் கேட்கும் பார்வையாளர்கள். - படம்: ஹர்ஷவர்த்தினி

ஒரு பாடத்தை மாணவர்கள் எந்தளவிற்கு விரும்பிப் படிக்கின்றனர் என்பது ஆசிரியர் அதை அன்புடன் கற்பிக்கிறாரா, கண்டிப்புடன் கற்பிக்கிறாரா என்பதைச் சார்ந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 

பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என்று உமறு புலவர் நிலையத்தின் அரங்கமே நிரம்பியிருந்தது.

திருமதி கவிதா ஜவஹர் முன்வைத்த கருத்துகள் தன்முனைப்பு ஊட்டும் வண்ணம் இருந்ததாகப் பகிர்ந்தார், ராஃபிள்ஸ் கல்விநிலையத்தின் தமிழ் ஆசிரியர் 64 வயது முனைவர் எஸ். ஜெகதீசன். 

“அவர் கொடுத்த அறிவுரை எனக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் நல்ல அறிவுரையாக அமைந்தது,” என்று அவர் சொன்னார். 

ஆசிரியராக இளநிலைப் பட்டப்படிப்பைப் பயிலும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் கருத்தரங்கு பயனுள்ளதாக இருந்ததாகக் கூறினர்.

“மாணவர்களை ஈடுபடுத்தும் விதத்திலும், சுவாரசியமும் நகைச்சுவையும் கலந்த விதத்திலும், பாடத்தை எவ்வாறு கற்பிக்கலாம் என்று நான் கற்றுக்கொண்டேன்,” எனக் குறிப்பிட்டார் ராஜேஸ்கண்ணா தனு ஹரிணி, 21.

ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும், அவர்களை மகிழ்வூட்டும் விதத்திலும் பாடம் கற்பித்தாலும், ஆசிரியர்கள் எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது தெரியவில்லை என்று சுட்டினார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார், 52.

“ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றிச் சமூகம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் கருத்தரங்கை நடத்துகிறோம்,” என்றார் திரு தனபால்.

மறைந்த தமிழவேள் கோ. சாரங்கபாணியின் நினைவாக, அவரது வாழ்க்கைப் பற்றியும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டைப் பற்றியும் ஒரு காணொளி திரையில் காட்டப்பட்டது.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்ட சின்னம்.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்ட சின்னம். - படம்: ஹர்ஷவர்த்தினி

சங்கத்தின் 75ஆம் நிறைவு விழாவை முன்னிட்டு, அந்நிகழ்ச்சியில் சங்கம் அதன் சிறப்புச் சின்னத்தை வெளியிட்டது. சின்னம் வடிவமைக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் சிறந்தச் சின்ன வடிவமைப்பை உருவாக்கிய தமிழ் ஆசிரியரான திருவாட்டி அஸ்மத் பீவியின் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

“சிங்கப்பூரில் தமிழ் ஒரு வாழும் மொழியாகத் தொடர்வதை உறுதிசெய்வது தமிழாசிரியர்களின் கடமையாகும். இந்தப் புனிதமான பணியைத் தொய்வின்றித் தொடர வேண்டும் என்ற ஆசையோடு இந்தப் புதிய சின்னத்தை வட்ட வடிவத்தைச் சார்ந்ததாக வடிவமைத்துள்ளேன்,” என்று சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியில் கற்பிக்கும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்