சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் நூர்ஜஹான் சுலைமானுக்குத் தாரகை முத்தமிழ்க் கழகம், ‘தங்கப்பாவை’ விருது வழங்கிச் சிறப்பித்தது.
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம் எனப் பல்வேறு வடிவங்களில் எழுத்துப் படைப்புகளை அவர் புனைந்துள்ளார்.
75 வயதான திருவாட்டி நூர்ஜஹான், சிங்கப்பூரில் பிறந்தவர். தொடக்கத்தில் அவரது குடும்பம் தஞ்சோங் பகாரில் வசித்தது. தாய், தந்தையர் தென்காசியைச் சேர்ந்தவர்கள். இவருக்கு ஐந்து சகோதரிகள், இரண்டு சகோதரர்கள்.
1966ஆம் ஆண்டு வானொலியில் ஒலிபரப்பான அவரது முதல் கட்டுரையுடன் திருவாட்டி நூர்ஜஹானின் இலக்கியப் பயணம் தொடங்கியதாகத் தேசிய நூலக வாரியத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது. இவரின் பல சிறுகதைகள் தமிழ் முரசில் இடம்பெற்றுள்ளன.
ஜஹாக் பீவி என்னும் புனைபெயரிலும் எழுதினார் திருவாட்டி நூர்ஜஹான். வேர்கள், பொழுது புலருமா என்ற நாவல்கள், வேரில் நிற்கும் விழுதுகள், தையல்மிஷின் என்ற சிறுகதைத் தொகுப்புகள், உயிர் நிலவு, இமைகளாய்க் காப்போம், பொன்விழாப் பூமகள் என்ற கவிதைத்தொகுப்புகள் போன்ற பல்வேறு படைப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
தாரகை முத்தமிழ்க் கழகத்தின் மகளிர் தினக் கொண்டாட்டத்தின்போது சிறப்பு விருந்தினர் கமலாதேவி அரவிந்தனிடமிருந்து திருவாட்டி நூர்ஜஹான் விருதை நெகிழ்ச்சியுடன் பெற்றார்.
மர்மக்கதை மன்னன் சிரஞ்சீவி, மு. வரதராஜன், ஜெயகாந்தன், அகிலன், லட்சுமி, கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோரின் படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் எழுத்தாளர்களான சே. வே. சண்முகம், ஜே. எம். சாலி, பி. கிருஷ்ணன், எம். கே. நாராயணன் ஆகியோரின் கதைகளும் நாடகங்களும் தம்மை வெகுவாய்க் கவர்ந்ததாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“கவிதை உலகில் கொடிகட்டிப் பறந்த பரணன், இளமாறன், முருகதாசன், அமரதாசன், இக்பால், பிச்சினிக்காடு இளங்கோ போன்றோரின் படைப்புகள் என் இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டன,” என்றும் அவர் கூறினார்.
“வானொலி நாடகப் பயிலரங்குகளில் கலந்துகொண்டபோது மறைந்த திரு. சோமசுந்தரம், திரு எம். கே. நாராயணன் ஆகியோர் வழங்கிய அறிவுரைகள் எனக்குப் பெரிதும் உதவின.
‘நர்கீஸ்’ பத்திரிகை நடத்திய உலகளாவிய நாவல் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளேன்,” என்று அவர் தம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
தமது எழுத்துப் பயணத்தில் உறுதுணையாக இருந்த மறைந்த கணவர், பிள்ளைகள், தம்பி, அண்ணன், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக எழுத்தாளர் நூர்ஜஹான் கூறினார்.
“மேலும், எழுத்தாளர் கழகம், தமிழ் முரசின் தலைமை உதவி ஆசிரியர் அண். சிவகுணாளன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
வருங்காலத்தில் இளையர்கள் பலரும் எழுத்தாளர் மணிகளாக உருவாக வேண்டும் என மனமார வாழ்த்தினார் திருவாட்டி நூர்ஜஹான்.
“இன்றைய தலைமுறை மாணவர்கள் உலகத்தையே தங்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். நீங்கள் நிறைய வாசிக்க வேண்டும்; வாசித்ததை எழுத வேண்டும். எழுதியதைத் திருத்திச் செம்மைப்படுத்துங்கள். ஒருநாள் நீங்களும் பட்டை தீட்டிய வைரங்களாக ஜொலிப்பீர்கள் என்பது என் நம்பிக்கை,” என்று அவர் இளையர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அந்தக் காலகட்டத்தில் பெண் எழுத்தாளர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளையும் மீறி, எழுத்தில் ஆர்வத்தைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு இன்று வரையிலும் தமது இலக்கியப் பயணத்தை உறுதியாக முன்னெடுத்து வருவதாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் செயலாளர் பிரேமா மகாலிங்கம் தெரிவித்தார்.
“சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பெண் ஆளுமையாகவும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும்,திகழும் இவருக்கு செயலவையில் பணியாற்றிய அனுபவமும் உண்டு,” என்று திருவாட்டி பிரேமா கூறினார்.

