தீபாவளியை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டாடிய மூத்தோர்

தீபாவளியை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டாடிய மூத்தோர்

1 of 4
படம்: சிவாய சுப்பிரமணியம்
படம்: சிவாய சுப்பிரமணியம்
படம்: சிவாய சுப்பிரமணியம்
படம்: சிவாய சுப்பிரமணியம்

18 Oct 2026 - 7:00 am

3 mins read

அன்று சிங்கப்பூரைக் கட்டியெழுப்பிய மூத்த தலைமுறையினரும் இன்று நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வெளிநாட்டு ஊழியர்களும் இணைந்து தீபாவளியை வரவேற்கும் விதமாகக் கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்தனர்.

காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையத்தில் அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற ‘புராஜெக்ட் சில்வர் இம்பேக்ட்’ (Project Silver Impact) நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு பரிமாறி விருந்தளித்ததோடு அவர்களுக்காக விளையாட்டு, கலைநிகழ்ச்சிகளையும் மூத்தோர் நடத்தினர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. - படம்: சிவாய சுப்பிரமணியம்

‘கேர் கார்னர் துடிப்புடன் மூப்படையும் நிலையங்கள்’ (Care Corner Active Ageing Centres), ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ (Hope Initiative Alliance) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

தோ பாயோ, உட்லண்ட்ஸ் பகுதிகளில் செயல்படும் ஒன்பது கேர் கார்னர் நிலையங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 120 மூத்த தொண்டூழியர்களும் 840 வெளிநாட்டு ஊழியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஏறத்தாழ 120 மூத்த தொண்டூழியர்களும் 840 வெளிநாட்டு ஊழியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஏறத்தாழ 120 மூத்த தொண்டூழியர்களும் 840 வெளிநாட்டு ஊழியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - படம்: சிவாய சுப்பிரமணியம்

“முன்னோடிகளான நம்மூத்தோர், இன்று சிங்கப்பூரைக் கட்டமைக்கும் வெளிநாட்டு ஊழியர்களைப் பாராட்டிச் சிறப்பிப்பது இக்கொண்டாட்டத்தின் உன்னத நோக்கமாகும்,” என்று நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பீ‌ஷான் - தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்சாவ் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் அமைதியும் வளர்ச்சியும் அனைத்துத் தரப்பினரின் உழைப்பால் சாத்தியமானது என்று கூறிய அவர், இரு தலைமுறைச் சிற்பிகளும் ஒன்றிணைந்து உரையாடி மகிழ்வது சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் பிணைப்பை வெளிப்படுத்துகிறது என்றும் சொன்னார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் பீ‌ஷான் - தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்சாவ்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் பீ‌ஷான் - தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்சாவ். - படம்: சிவாய சுப்பிரமணியம்

“சிங்கப்பூர் உங்கள் இல்லம். நாங்கள் உங்கள் குடும்பம். நேற்றைய தினத்தில் நாட்டிற்கு அடித்தளமிட்ட மூத்தோர், இன்றைய சிற்பிகளான வெளிநாட்டு ஊழியர்களை உயர்த்தும் உயரிய நோக்கத்துடன் இக்கொண்டாட்டம் அமைந்துள்ளது,” என்று கேர் கார்னர் நிர்வாகக் குழுத் தலைவர் கோ ஹிம் லியோங் கூறினார்.

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சுவையான இரவு உணவு வழங்கப்பட்டது. மூத்த தொண்டூழியர்கள் மேடையேறி உற்சாகமான இந்தியப் பண்பாட்டு நடன அங்கங்களைப் படைத்தனர்.

மூத்த தொண்டூழியர்கள் தமிழ், இந்திப் பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினர்.
மூத்த தொண்டூழியர்கள் தமிழ், இந்திப் பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினர். - படம்: சிவாய சுப்பிரமணியம்

அத்துடன், தரைப்பந்து, ‘ரிங் டாஸ்’, ‘மெமரி மாஸ்டர்’ போன்ற விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ‘புஷ்-அப்’, ‘பிளாங்க்’ போன்ற உடற்பயிற்சிச் சவால்களில் பங்கேற்று முத்திரைகளைச் சேகரித்த வெளிநாட்டு ஊழியர்கள், அவற்றை ‘கேர் கார்னர்’ அடையாளக் குறியீடுகளாக மாற்றி, பயன்படுத்தப்பட்ட பொருள்களை விற்கும் சந்தையில் (Flea Market) அன்றாடத் தேவைக்கான பொருள்களையும் உணவுப் பொருள்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த முயற்சியின்வழி மூத்தோர், பல்வேறு மதிப்புகளைக் கொண்ட 3,200க்கும் மேற்பட்ட பொருள்களை வெளிநாட்டு ஊழியர்களுக்காக வழங்கினர்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அதிர்ஷ்டக் குலுக்கலில் 30 பரிசுகள் வழங்கப்பட்டன.

காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையத்தில் அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற ‘புராஜெக்ட் சில்வர் இம்பேக்ட்’ நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு பரிமாறி விருந்தளித்ததோடு, அவர்களுக்காக விளையாட்டு, கலைநிகழ்ச்சிகளையும் மூத்தோர் நடத்தினர்.
காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையத்தில் அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற ‘புராஜெக்ட் சில்வர் இம்பேக்ட்’ நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு பரிமாறி விருந்தளித்ததோடு, அவர்களுக்காக விளையாட்டு, கலைநிகழ்ச்சிகளையும் மூத்தோர் நடத்தினர். - படம்: சிவாய சுப்பிரமணியம்

இந்நிகழ்ச்சியில், 120 தொண்டூழியர்களுடன் இணைந்து சேவையாற்றியோரில் ஆக வயதானவர் 90 வயது திருவாட்டி ரத்னம் பெரியசாமி.

“மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நானும் அளவற்ற இன்பம் அடைகிறேன் . பிறருக்குச் செய்யும் தொண்டே எனது உடல்நலத்தின் ரகசியம்,” என்றார் அவர்.

தொண்டூழியர்களில் ஆக வயதானவரான 90 வயது திருவாட்டி ரத்னம் பெரியசாமி.
தொண்டூழியர்களில் ஆக வயதானவரான 90 வயது திருவாட்டி ரத்னம் பெரியசாமி. - படம்: சிவாய சுப்பிரமணியம்

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய திருவாட்டி ரத்னம், “இங்குள்ள மூத்தோர் எவ்வாறு பராமரிக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டு, இவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகும் அங்குள்ள பெரியவர்களை அன்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 56 வயது ஊழியர் பாண்டியன் பிரபாகரன், 22 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டுமானத் துறையில் எஃகு பொருள்களைப் பற்றவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

“கடல் கடந்து குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் எங்களுக்கு, நாங்களும் உங்கள் குடும்பம்தான் என்பதை உணர்த்தும் வகையில் மூத்தோர் முன்வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

56 வயது ஊழியர் பாண்டியன் பிரபாகரன்.
56 வயது ஊழியர் பாண்டியன் பிரபாகரன். - படம்: சிவாய சுப்பிரமணியம்

“வயதானவர்கள் எங்களுக்காக நடனமாடி உற்சாகப்படுத்தியது வியப்பளித்தது. சொந்த ஊரில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவது போன்ற ஓர் இனிய உணர்வை இந்த விழா ஏற்படுத்தியது,” என்று உணவுப் பதனீட்டுத் துறையில் பணியாற்றும் 34 வயது செல்வகணபதி செல்லக்கண்ணு கூறினார்.

உணவுப் பதனீட்டுத் துறையில் பணியாற்றும் 34 வயது செல்வகணபதி செல்லக்கண்ணு.
உணவுப் பதனீட்டுத் துறையில் பணியாற்றும் 34 வயது செல்வகணபதி செல்லக்கண்ணு. - படம்: சிவாய சுப்பிரமணியம்

முதன்முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்