அண்டை வீட்டாருடன் அன்போடு உறவாடுவோம்

2 mins read
93b2fcb3-fbdd-4691-9b8b-a1bf9145214b
மனிதநேயம், அண்டைவீட்டினருடன் நல்லுறவு போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் மூன்று குறும்படங்களை வெளியிட்டுள்ளது.  - படங்கள்: சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம்
multi-img1 of 2

அண்டை வீட்டாருடன் நல்லுறவை வளர்க்கவும் மனிதநேயத்துடன் நடந்துகொள்வதையும் ஊக்குவிக்கும் நோக்கில், சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் (Singapore Kindness Movement) மூன்று குறும்படங்களை வெளியிட்டுள்ளது. 

வண்ணம், சமச்சீர்மை (Symmetry), படத்தொகுப்பு ஆகியவற்றிற்குப் பெயர்பெற்ற முன்னணி ஹாலிவுட் படத் தயாரிப்பாளரான வெஸ் ஆண்டர்சனுடைய படங்களின் சாயலை இந்த மூன்று குறும்படங்களில் தனித்துவமான முறையில் காணலாம்.  

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலிருந்து அண்டை வீட்டாரிடையே சச்சரவுகள் அதிகரித்து வருகின்றன. 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, அண்டை வீடுகளிலிருந்து எழும் இரைச்சல் தொடர்பில் 11,400 புகார்கள் பதிவாகின. இது 2019ஆம் ஆண்டைவிட ஏறக்குறைய 3,600 அதிகம் என்று சமூக சமரச நிலையம் தெரிவித்தது. 

“பெருந்தொற்றுக் காலத்தில் அண்டை வீட்டாரிடையே தகராறுகள் அதிகரித்த நிலையில், ஒருங்கிணைந்த, அன்பான சிங்கப்பூர் சமுதாயத்தை உருவாக்குவதே எங்களது நோக்கமாக உள்ளது,” என்றார் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் சந்தை, தொடர்புத் தகவல் துறை துணை இயக்குநர் கருணாநிதி சிதம்பரம்.

மூன்று குறும்படங்களை எழுதித் தயாரித்த திரு கருணாநிதி, தமது தனிப்பட்ட அனுபவங்களை ஒட்டி அப்படங்கள் அமைந்தன என்றார். 

“சிறு வயதில் மின்தடை போன்ற அவசரநிலைகள் என் குடியிருப்புப் பேட்டையில் ஏற்பட்டபோது, மெழுகுவத்தி ஒளியில் நானும் என் அண்டை வீட்டாரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் செலவிட்ட காலங்கள் மறக்க முடியாதவை. அந்த ஒற்றுமை உணர்வை மீண்டும் நினைவூட்டவும் வலியுறுத்தவும் இந்தக் குறும்படங்கள் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார் திரு கருணாநிதி.

முதிய அண்டைவீட்டாரைக் கவனித்துக்கொள்வது, மற்ற அண்டைவீட்டாருக்கு உதவிசெய்வது, எப்படி ஒரு நல்ல அண்டை வீட்டாராக இருப்பது போன்ற பண்புகளை இந்த மூன்று குறும்படங்களும் சுட்டிக்காட்டுகின்றன. 

அண்டை வீட்டார் நம்மருகே வசிப்பவர்கள் என்பதால் அவர்களுடன் உள்ளன்போடு உறவாடுவது முக்கியம் என்கிறார் பிரபல உள்ளூர்க் கலைஞர் எபி ஷங்கரா.  

சிறு வயதிலிருந்து தன் அண்டைவீட்டார்களுடன் தொடர்ந்து நன்கு பழகிவரும் எபி, “தற்போது மாறிவரும் சமுதாயத்தில் அண்டை வீட்டாரைக் காண்பதே அரிதாகிவிட்டது. இருப்பினும், சில நேரங்களில் ஒரு புன்னகை அல்லது நலம்  விசாரித்தல்கூட அன்பான, ஒற்றுமையான சமுதாயம் உருவாக வழிவகுக்கும்,” என்றார்.  

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் இவ்வாண்டிற்கான ‘பி கிரேட்டர்’ எனும் நோக்கத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட இந்தக் குறும்படங்களில் மற்ற உள்ளூர்க் கலைஞர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் எபி ஷங்கரா.  

‘தி கியூரியஸ் கேஸ் ஆஃப் கிளேர் சார்ல்ஸ்’ (The Curious Case of Claire Charles), ‘கறி’ (Curry), ‘புபூர் சாச்சா’ (Bubur Cha Cha) எனும் இம்மூன்று குறும்படங்களையும் பொதுமக்கள் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக் டாக் ஆகிய ஊடகங்களின்வழி கண்டு மகிழலாம். 

குறிப்புச் சொற்கள்