அடுத்த கல்வியாண்டுக்குத் தயாராகும் 8,500 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) தனது ‘பேக் டு ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ (Back To School Festival) நிகழ்ச்சியை சனிக்கிழமை (நவம்பர் 23) ரிசோட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு மையத்தில் நடத்தியது.
தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த நிதியுதவித் திட்டத்தின்கீழ் இவ்வாண்டு பாலர் பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரை கல்வி பயிலும் 5,337 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளித் தேவைகளைப் பூர்த்திசெய்ய மொத்தம் $1.7 மில்லியன் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
சிண்டா அதன் தனிநபர் குடும்ப வருமானத் தகுதியை $1,000லிருந்து $1,600 வரை உயர்த்தி அதன் வரம்பை விரிவுபடுத்தியதன் விளைவாக இவ்வாண்டு உதவிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 18 விழுக்காடு அதிகம்.
“ஒவ்வொரு மாணவரின் திறனையும் சிண்டா அங்கீகரிக்கிறது. ஒவ்வொரு மாணவரும் வெற்றிபெறத் தேவைப்படும் ஆதரவைப் பெறும்படி உறுதிசெய்து கொள்வது நம் அனைவரின் பொறுப்பு,” என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சரும் சிண்டாவின் நிர்வாகக் குழுத் தலைவருமான இந்திராணி ராஜா நிகழ்ச்சியில் கூறினார்.
இதுபோன்ற முயற்சிகள் நம் பரந்த தேசிய இலக்குகளின் ஓர் அங்கம் என்றும் இவை ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறுவதை உறுதிசெய்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், மாணவர்கள்மீது முதலீடு செய்வதன்மூலம், சிங்கப்பூரின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிசெய்கிறோம் என்றார் அவர்.
“ஒரு வலுவான, நிலையான குடும்பமே மாணவர்களின் வெற்றிக்கான திறவுகோல் என்பதால் மாணவர்களின் மேம்பாட்டிற்கு அப்பால், அவர்களுடைய குடும்பங்களும் நல்ல எதிர்காலத்தை பெற சிண்டா விரிவான வளங்களை வழங்கி வருகிறது,” என்று குமாரி இந்திராணி கூறினார்.
இத்திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான நாகேஸ்வரி ராஜா, 33, நிதிப் பிரச்சினை, குடும்ப வன்முறை உட்பட பல சவால்களைக் கடந்து வந்தவர்.
தொடர்புடைய செய்திகள்
சிண்டாவின் ஆலோசனை அமர்வுகளிலும் நிதியுதவித் திட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமது வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுத்தது மட்டுமின்றி, சிண்டாவின் ‘விமன் எம்பவர்மெண்ட்’ நிதியின்வழி குழந்தை பராமரிப்புக் கல்வியில் பட்டப்படிப்பைத் தொடரவும் இவர் திட்டமிட்டுள்ளார்.
“சிண்டாவின் ‘பேக் டு ஸ்கூல்’ பற்றுச்சீட்டுகளை ஆண்டுதோறும் பெறுவதன்மூலம் என் தோள்களிலிருந்து பாரத்தை இறக்கி வைப்பதுபோல் உணர்கிறேன். என் பிள்ளைகள் தங்கள் கல்வியை எந்தக் கவலையுமின்றி நம்பிக்கையுடன் தொடங்குவதற்கான வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது,” என்றார் நாகேஸ்வரி.
10, 12, 14 வயதுடைய அவரின் மூன்று பிள்ளைகளும் சிண்டாவின் ஆதரவுடன் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.
எதிர்காலத்தில் இசைக் கலைஞராக வேண்டும் என்ற கனவைக் கொண்டுள்ள அவரின் மகள் மீரா, 14, இப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் எழுதுபொருள்களைக் கொண்டு தனது ஓய்வுநேரத்தில் சொந்தமாகப் பாடல் வரிகளை எழுதுவதாகச் சொன்னார்.
2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிண்டா வாலட்’டின்வழி $140 மதிப்புள்ள ‘பாப்புலர்’ பற்றுச்சீட்டுகளும் $60 மதிப்புள்ள ‘பாட்டா’ மின் பற்றுச்சீட்டுகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இவ்வாண்டின் விழா, நிதியுதவியுடன், ஒவ்வொரு குடும்பத்தையும் மேம்படுத்துவதற்கான சிண்டாவின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
சிண்டாவின் திட்டங்கள் இக்குடும்பங்களின் உடனடித் தேவைகளை நிவர்த்திசெய்வது மட்டுமின்றி, வெற்றிபெற அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதத்திலும் தயார்செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
சமூக உதவிக்காக 2025ல் $7.8 மில்லியன் நிதி ஒதுக்கப்படும் என மதிப்பிடப்பட்ட நிலையில், மேலும் பல குடும்பங்களுக்கு ஆதரவளிக்க பெற்றோருக்கான பயிலரங்குகள், குடும்பப் பிணைப்பு நடவடிக்கைகள், பிள்ளைகளின் செறிவூட்டல் திட்டங்கள் போன்ற முயற்சிகளை மேற்கொள்ள சிண்டா திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக, சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டூடியோசில் பயனாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஒருநாள் மகிழ்ச்சியாக தங்கள் பொழுதைக் கழித்தனர்.