ஃபேரர் பார்க் எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள மைதானம் கடந்த அக்டோபர் 16 முதல் 21ஆம் தேதி வரை சிறிய கோல்கத்தாவாக மாறியது.
சிங்கப்பூர் வங்காளச் சங்கத்தின் 70ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், பிரம்மாண்டமான துர்கா பூஜை கொண்டாட்டத்தாலும் அந்த இடம் களைகட்டியது.
மேளங்களின் தாளம், வண்ணமயமான பாரம்பரிய உடைகள், விரிவான சமயச் சடங்குகள், சுவையான கோல்கத்தா தெருவோர உணவுகளின் மணம் ஆகியவை அந்த இடத்தை உருமாற்றின.
ஓவன் ரோடு, பர்மா ரோடு சந்திப்புக்கு அருகே நடந்த அந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
சங்க உறுப்பினர்கள் மட்டுமன்றி பிற சமூகத்தினரும் அதில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் சிங்கப்பூரின் பாரம்பரியமான சீன சிங்க நடனம் இடம்பெற்றது. இது பல்லின நல்லிணக்கத்தை அழகாகப் பிரதிபலிக்கிறது என சங்கத்தின் தலைவர் தேபானந்தா கோஷ் தெரிவித்தார்.
பாரம்பரியமும் ஒருங்கிணைப்பும் சந்திக்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம் என்றார் அவர்.
1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வங்காளச் சங்கம், கடந்த 70 ஆண்டுகளாக வங்காளக் கலாசாரத்தை சிங்கப்பூரில் சிறப்பாக வளர்த்து வருகிறது.
புஷ்பாஞ்சலி, சந்தியா ஆரத்தி, குமாரி பூஜை, சந்தி பூஜை, சண்டிபாத் உள்ளிட்ட பல முக்கியமான சடங்குகள் அங்கு நடத்தப்பட்டன.
தம்பதிக்கான போட்டி, கர்பா நடனம், இசைப் படைப்புகள் எனப் பல்வேறு கலாசார நிகழ்வுகள் பார்வையாளர்களைப் பெரிதும் மகிழ்வித்தன.
சுவையான உணவுப் பரிமாற்றம் அந்த பிரம்மாண்ட விழாவின் மற்றொரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது. ஆறு நாள்களில் கிட்டத்தட்ட 3,000 கோல்கத்தா பாணி உணவுகள் பரிமாறப்பட்டன.
மார்வாரி மித்ர மண்டல், சிங்கப்பூர் மலையாளிச் சங்கத் தலைவர்கள் விழாவின் விருந்தோம்பலையும் சுவையான உணவையும் வெகுவாகப் பாராட்டினர்.
வெற்றிகரமாக நடந்த விழாவிற்காகத் தொண்டூழியர்கள், சமூகப் பங்காளிகள், குழுவினருக்குத் திரு கோஷ் தமது நன்றியைத் தெரிவித்தார்.
