சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் முதல் நிறுவனர் தினம்

3 mins read
fbb931aa-13da-4b83-849f-a8c4d6a69b1e
சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை அதன் முதல் நிறுவனர் தினத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (நவம்பர் 8) கொண்டாடியது. - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2

சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை (எஸ்ஐஇடி) அதன் மறைந்த நிறுவனர் தொழிற்சங்கவாதி கோ. கந்தசாமியின் தொலைநோக்கு பார்வையை நினைவுகூரும் வகையில், அதன் முதல் நிறுவனர் தினத்தைச் சனிக்கிழமை (நவம்பர் 8) கொண்டாடியது.

1967ல் நிறுவப்பட்ட அறக்கட்டளை, ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் இந்திய மாணவர்களுக்கு வட்டியில்லா படிப்புக் கடன்கள், உதவித்தொகைகள், வழிகாட்டுதல் திட்டங்கள் மூலம் ஆதரவளித்து வருகிறது.

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக, கல்வியை சமத்துவத்தை நிலைநிறுத்தும் ஒரு கருவியாக மாற்ற வேண்டும் என்ற அதன் பணி, தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், தொடக்கக்கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

எஸ்.பி. ஜெயின் உலகளாவிய மேலாண்மைக் கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ஆலோசனை வாரியம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், தொண்டூழியர்கள், பயனாளிகள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

திரு எஸ். சந்திர தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

திரு எஸ். சந்திர தாஸ் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் முதல் நிறுவனர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
திரு எஸ். சந்திர தாஸ் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் முதல் நிறுவனர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். - படம்: சுந்தர நடராஜ்

அறக்கட்டளையின் நீண்டகால தாக்கத்தையும் சமூகத் தேவைகளுக்கேற்ப பரிணமிக்கும் அதன் உறுதியையும் எஸ்ஐஇடி தலைவர் ஜெயப்பிரகாஷ் ஜகதீசன் தமது உரையில் எடுத்துரைத்தார்.

“இவ்வாண்டு ஜனவரி முதல் இன்றுவரை, எஸ்ஐஇடி 830 உயர்கல்வி நிலை மாணவர்களுக்கு 1.19 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளது. இது இன்றுவரை நாங்கள் வழங்கியதில் மிக அதிக எண்ணிக்கையாகும்,” என்று அவர் கூறினார்.

2022க்கும் 2025க்கும் இடையில், எஸ்ஐஇடி 460க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன்களுக்காகவும் மானியங்களுக்காகவும் 2.32 மில்லியன் வெள்ளியை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அறக்கட்டளை எழுத்திட்டுள்ள அண்மைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் திரு ஜெயப்பிரகாஷ் சுட்டிக்காட்டினார். தமிழ் மொழி, இலக்கிய மாணவர்களை ஆதரிப்பதற்காக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையுடனும், எதிர்கால பத்திரிகையாளர்களை வளர்ப்பதற்காக தமிழ் முரசுடனும், சுகாதாரத் துறை மாணவர்களுக்கு உதவ ஸ்ரீ நாராயண மிஷனுடனும் அது இணைந்து பணியாற்றுகிறது.

மேலும், வேலை பயிற்சித் திட்டங்களுக்காகவும் நன்கொடையாளர் முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையுடன் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, அறக்கட்டளையின் முன்னாள் பயனாளிகள் தங்கள் வளர்ச்சி குறித்த தனிப்பட்ட கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அவர்களில் ஒருவரான 32 வயது டாக்டர் நந்தினி ஜெயந்திநாதன், முன்னாள் எஸ்ஐஇடி கல்விக் கடன் பெறுநர் ஆவார். டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியில் மருத்துவம் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், தற்போது சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் மருத்துவ[Ϟ]ராக பணியாற்றுகிறார்.

32 வயது டாக்டர் நந்தினி ஜெயந்திநாதன் முன்னாள் எஸ்ஐஇடி கல்விக் கடன் பெறுநர் ஆவார்.
32 வயது டாக்டர் நந்தினி ஜெயந்திநாதன் முன்னாள் எஸ்ஐஇடி கல்விக் கடன் பெறுநர் ஆவார். - படம்: சுந்தர நடராஜ்

“நான் மிகச் சாதாரணமான, எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்வி என்பது என் குடும்பம் எப்போதும் அதிக மதிப்பு கொண்டிருந்த ஒன்று,” என்று அவர் கூறினார்.

தந்தையின் தொழில் எதிர்பாராத விதமாக பின்னடைந்தபோது, மருத்துவர் ஆக வேண்டும் என்ற தனது சிறுவயது கனவு கிட்டத்தட்ட சிதைந்துபோன தருணத்தை டாக்டர் நந்தினி நினைவுகூர்ந்தார்.

“அந்த நேரத்தில் எல்லா வங்கிகளும் உதவி அமைப்புகளும் தங்களால் உதவ முடியாது என்று கூறின. எங்கள் குடும்பத்துக்கு வேறுவழி தெரியாமல் இருந்தபோது, என் பெரியம்மா எஸ்ஐஇடி பற்றிக் கூறியதுதான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

“நான் அவர்களைத் தொடர்புகொண்டேன் சில வாரங்களுக்குள், அவர்கள் என் குடும்பத்தின் பெரிய நிதிச்சுமையைக் குறைத்தனர்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கல்வி முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல அறக்கட்டளைக்கும் எஸ்.பி. ஜெயின் உலகளாவிய மேலாண்மைக் கழகத்துக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்நிகழ்வில் கையெழுத்தானது. நன்கொடையாளர்களில் ஒருவரான ஜோதி வர்த்தகக் குழுமத் தலைவர் ராஜகுமார் சந்திரா, கல்விக்கான தம் குடும்பத்தின் நீண்டகால அர்ப்பணிப்பைப் பகிர்ந்துகொண்டார்.

அறக்கட்டளையின் ஒருமைப்பாட்டையும் அதன் ஆழ்ந்த தாக்கத்தையும் பாராட்டிய அவர், “இது வெறும் நிதியுதவி இல்லை. இது நமது மாணவர்களின் திறன், நம்பிக்கை, மேலும் சமூகத்தின் எதிர்காலத்தில் செய்யப்படும் ஒரு முதலீடு,” என்று குறிப்பிட்டார்.

22 ஆண்டுகளுக்கும் மேலாக அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் பணியாற்றி வரும் அவர், ஆரம்பகால நிதி திரட்டும் முயற்சிகளையும், சிறிய பங்களிப்புகள்கூட மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பெரிய மாற்றங்களையும் நினைவுகூர்ந்தார்.

இந்தியச் சமூக மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் அறக்கட்டளையின் பணிக்காக மேலும் பல வர்த்தக நிறுவனங்களும் அமைப்புகளும் இணைந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிறுவனர் தினத்தன்று திரட்டப்பட்ட நிதி, சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் கல்வி உதவி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்