பெண்களை மையப்படுத்தும் கதைகள் உலகளாவிய திரைத்துறையில் புகழ்பெறுவதற்கு முன்பே சிங்கப்பூர்த் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு, உள்ளூர்த் தமிழ் ஒளிபரப்புத் துறையில் மொழியும் பெண்களை முன்னிலைப்படுத்துவதும் எவ்வாறு அமைகிறது என்பதை ஆராய ‘என்ன லா!: சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் தமிழ்க் கதைகள்’ என்ற கலந்துரையாடல் அரங்கம் ஒன்றை ஒருங்கிணைத்துள்ளார் ஊடகத்துறை வல்லுநர் நந்தினிஸ்ரீ, 28.
“சிங்கப்பூர்த் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஏராளமான சிங்கப்பூரர்கள் அதிகமான தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றனர்,” என்று தமிழ் முரசிடம் அவர் கூறினார்.
லண்டனில் திரைப்படம், திரைத்துறை ஆய்வில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள நந்தினிஸ்ரீ, அங்கு ஆவணப் பதிவுகள் மற்றும் சமூகப் பிரதிநிதித்துவம் சார்ந்த ஊடக நிகழ்வுகளில் பங்கேற்றதன்மூலம் ஊக்கமடைந்து, சிங்கப்பூர்த் தமிழ் ஊடகத்தில் இருக்கும் மூவரை இணைத்து இந்த அங்கத்தை வடிவமைத்துள்ளார்.
கலந்துரையாடலில் இயக்குநர் அனுராதா கந்தராஜு, திரைக்கதை எழுத்தாளர் ஜெயா ராதாகிருஷ்ணன், நடிகை ஈஸ்வரி குணசேகர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
உள்ளூர்த் தொலைக்காட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து அக்கலந்துரையாடல் ஆராயும்.
ஹாலிவுட், பாலிவுட் திரையுலகில் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதற்கு முன்பே, 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உள்ளூர்த் தமிழ்த் தொலைக்காட்சியில் பெண்களை மையமாகக் கொண்ட கதைகள் உருவாக்கப்பட்டன என்பதை நந்தினிஸ்ரீ சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிங்கப்பூர்த் தமிழ்ப் பயன்பாடு ஒற்றைத்தன்மை கொண்டதன்று என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கம்.
இயல்பாகப் பேசும் தமிழை ‘பிழையான தமிழ்’ என்று எளிதாகப் புறந்தள்ளிவிடாமல், அதன் பன்முகத்தன்மையை கலந்துரையாடல் முன்னிறுத்தும். அதில் குடும்பங்களில் இடம்பெறும் உரையாடல்கள் முதல் தொலைக்காட்சிப் பாடல் வரிகளில் வெளிப்படும் இலக்கிய நயம் வரையிலான பல்வேறு மொழிப் பயன்பாடுகள் ஆராயப்படும்.
‘என்ன லா!: சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் தமிழ்க் கதைகள்’ சனிக்கிழமை (நவம்பர் 14) பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகத்தில் நடைபெறும்.
நுழைவுக் கட்டணம் ஐந்து வெள்ளி.
கூடுதல் விவரங்களுக்கு இங்குச் சொடுக்கலாம்.
